படிப்பும், நடிப்பும் முக்கியம்

"படிப்பும் முக்கியம்; நடிப்பும் முக்கியம்'  என்கிறார் ஆறாம் வகுப்பு மாணவரான தெருக்கூத்துக் கலைஞர் தமிழ்ச்செல்வன்.
படிப்பும், நடிப்பும் முக்கியம்
Updated on
2 min read


"படிப்பும் முக்கியம்; நடிப்பும் முக்கியம்' என்கிறார் ஆறாம் வகுப்பு மாணவரான தெருக்கூத்துக் கலைஞர் தமிழ்ச்செல்வன்.

தமிழகத்தில் கரகாட்டம், நாடகம், திரைப்படம் போன்ற கலைகளுக்கு முன்னோடி தெருக்கூத்து. பக்தி, நாட்டுப்பற்று, சமயம், புராணம், காப்பியங்கள், இதிகாசங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நாட்டுப்புற ஊடகமாகவே தெருக்கூத்து பரிணமித்தது.

நகர்ப்புறங்களில் செல்வாக்கை இழந்துவிட்டாலும், கிராமங்களில் தெருக்கூத்தை விரும்பிப் பார்க்கின்றனர். அதனால்தான் தெருக்கூத்து இன்றளவும் உயிர்ப்பிப்போடு இருக்கிறது.

இப்போதைய தலைமுறைக்கு திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் நம்பிக்கையாக மாறியுள்ளார். இத்தனைக்கும் ஆறாம் வகுப்பு பயிலும் அந்தச் சிறுவனுக்கு வயது 11.

தெருக்கூத்தில் தரையில் முட்டு போட்டு புயலென சுழல்கிறார். துள்ளி எழுந்து அசத்தும் உடல் மொழியில் ஏற்றிருக்கும் பாத்திரத்தை பார்வையாளர்கள் கண் முன்னால் கட்டமைக்கிறார். சுருதி இம்மியும் பிசகாமல் பாடல்களைத் தெளிவாகப் பாடுகிறார். வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார்.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது:

""அப்பா கொத்தனார் வேலை பார்க்கிறார். அம்மா தையல் வேலை செய்கிறார். தாத்தாவிடம் எனக்கு செல்லம் அதிகம். தெருக்கூத்து நாடகங்களை நடத்தும்போது என்னையும் அழைத்துச் செல்வார். இதனால் ஆர்வமும் ஏற்பட்டது. தெருக் கூத்தில் எனது குரு எனது தாத்தா முத்துசாமி வாத்தியார்தான்.

தெருக்கூத்துகளில் நடிக்கும் கலைஞர்களின் உடல் மொழி, நடனம், பாடல்பாடும் பாங்கை உள்வாங்கிக் கொள்வேன். மறுநாள் வீட்டில் நடித்துப் பார்ப்பேன். இதைத் தெரிந்து கொண்ட தாத்தா முறையாக பயிற்சியைத் தரத் தொடங்கினார்.

முதன்முதலாக பரிட்சார்த்த முறையில் சவாலான "வாதாபி' கதாபாத்திரத்துக்காக, எனக்கு அரிதாரம் பூசி நடிக்கவைத்தனர். நடிப்பு , ஆடும் வேகம். தாத்தாவுக்கு திருப்தியைத் தந்தது. இப்போது ஒப்பனையை நானே செய்து கொள்ளும் அளவுக்கு தேறியுள்ளேன்.

எங்கள் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக "காமாட்சி அம்மன் நாடக சபா' செயல்பட்டுவருகிறது. ஏழுமலை, முத்துசாமி, கிருஷ்ணன் வாத்தியார்கள் முறைப்படி தெருக் கூத்தைக் கற்பிக்கின்றனர். இப்போது நாடக சபையில் 18 கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் நான் மட்டுமே சிறுவன்.

சில வாரங்களுக்கு முன்பு நடித்த தெருக்கூத்தில் துரியோதனனின் 99 தம்பிகளில் கடைசி தம்பி விகுர்ணன் வேடம் ஏற்று நடித்திருந்தேன்.

இரவு முழுக்க தெருக்கூத்து நடக்கும். மறுநாள் காலை எழுந்திருக்க சிரமமாக இருக்கும். இருந்தாலும் பள்ளிக்கூடம் போகணுமே என்று எழுந்து தயாராவேன். தெருக்கூத்துக்காக, பள்ளிக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். எனக்கு படிப்பும் முக்கியம்; நடிப்பும் முக்கியம்.

தெருக் கூத்தில் நடிக்கும்போது கிடைக்கும் கைத்தட்டல் தான் எனக்கு சாப்பாடு. வயிறும் மனமும் நிறைந்துவிடும்.

இதுவரை 14 தெருக் கூத்துகளில் பங்களிப்பு செய்திருக்கிறேன். சூரன் வேடம் போடும்போது முட்டிப்போட்டு நாடக மைதானத்தை வலம் வரவேண்டும். அதை நான் அசத்தும்விதத்தில் செய்கிறேன்.

தெருக்கூத்தில் கற்றுக் கொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளது. அவற்றை நான் கற்றுக் கொள்வேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் தமிழ்ச்செல்வன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com