உத்கலையும் வாழை மரமும்..!

எந்தவொரு சுபகாரியம்  என்றாலும்,  தெய்வீக வழிபாடானாலும் விழாவானாலும் "வாழைமரம்'   இருந்தே ஆக வேண்டும். 
உத்கலையும் வாழை மரமும்..!
Updated on
2 min read

எந்தவொரு சுபகாரியம் என்றாலும், தெய்வீக வழிபாடானாலும் விழாவானாலும் "வாழைமரம்' இருந்தே ஆக வேண்டும்.

கல்யாணம் என்றால் முதலில் நம்மை வரவேற்பது வீட்டு வாசலிலுள்ள பந்தல், அதன் நுழைவாயிலில் இருபுறமும் அலங்கரிப்பது வாழைமரமும்தான்!
அப்படிப்பட்ட வாழைமரம் கட்டப்படுவதின் பின்னணியில் உள்ள கதை தெரியுமா?
"நைமிசாரண்யம்' என்ற இடத்தில் மகரிஷி துர்வாசர் தங்கி தவம் புரிந்து வந்தார். அவர் பிறவியிலேயே மகா கோபக்காரர்.
ஒருசமயம் திருக்கயிலையில் ஸ்ரீ பரமேஸ்வரன் மிகக் கோபம் கொண்டபோது, பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தெரித்த ஓர் அக்னிப் பொறியே துர்வாசராக மாறியது. ஆதலால் அவர் அவதரித்தது முதலே மிகுந்த சினத்துடனே காணப்பட்டார். அவரைக் கண்டாலே தேவர்களும் முனிவர்களும் கூட அஞ்சினர்.
இந்தப் பிரச்னையை எவ்விதம் தீர்ப்பது - யார் தீர்ப்பது?, எப்போது தீர்ப்பது? என்பது தான் அனைத்து ரிஷிகளுக்கும் உள்ள கவலை எதிர்பாராதவிதமாக அவர்கள் ஏங்கிய வாய்ப்பும் கிட்டியது.
ஸ்வகீர்த்தி என்ற புகழ்பெற்ற மன்னன் மிகச் சிறந்த யாகம் ஒன்றை "ஸ்வயமந்த பஞ்சகம்' என்னும் புண்ணிய இடத்தில் நடத்த விரும்பினான்.
மாமன்னர்களால் மட்டுமே செய்யக்கூடிய மிகப் பெரிய, கடினமான யாகம் அது. அந்த யாகத்தை துர்வாசரை தலைமை தாங்கி நடத்தி தர மன்னன் விரும்பினான். அதற்காக வனப் பகுதிக்குத் தானே நேரில் சென்று பிரார்த்தித்தான். தர்ம நெறியிலிருந்து சிறிதும் வழுவாத மன்னனே நேரில் வந்து அழைத்தவுடன், சம்மதம் தெரிவித்தார் துர்வாசர் .
ரிஷிகளுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி .
எப்படியாவது துர்வாசரின் கோபப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என அனைவரும் விவாதித்தபோது, துர்வாசருக்கு திருமணம் செய்து வைப்பது என்று முடிவு எடுத்தனர்.
"சம்சாரம் சாகரம் துக்கம்' என்றொரு மூதுரையே உள்ளது. ஆண்களின் பிடிவாதமும் முன்கோபமும் ஆகிய அனைத்து துர்க்குணங்களையும் பொடி பொடி
யாக்கிவிடும் சம்சார வாழ்க்கை . ஆனால் துர்வாச முனிவர் திருமணத்துக்குச் சம்மதிக்க வேண்டுமே?, யார் பெண் கொடுப்பார்கள்! என்றெல்லாம் கவலைப்
பட்டனர்.
அந்தக் கானகத்தில் தங்கி தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த மகா தபசுவதி மித்ர ஜானுவின் தர்ம பத்தினி காலமாகி விட்டார். அவருக்கு ஒரே ஒரு செல்வமகள் உத்கலை.
உத்கலை என்றால் அனைத்து அம்சங்களிலும் பரிபூரணமானவள் என்பது பொருள். அவள் அழகிலும் அனுஷ்டானங்களிலும் நற்பண்புகளிலும் உயர்ந்த பெண்ணாக திகழ்ந்தாள். தனக்குப் பின் தன் பெண்ணுக்கு துணை ஏதுமின்றி இருப்பது பற்றி கவலை கொண்டிருந்தார் மகரிஷி.

இந்த நிலையில், அவரை மூத்த ரிஷிகள் அணுகி அவருடைய பெண்ணை துர்வாச முனிவருக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கும்படி கேட்டனர். முதலில் தயங்கிய மகரிஷியோ, தனது வயோதிகத்தை எண்ணி சம்மதித்தார்.
யாகம் முடிந்து சாரணியம் திரும்பிய துர்வாசரிடம் பக்குவமாக எடுத்துக் கூறினர். முதலில் தயங்கிய துர்வாசர், இறுதியில் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டு, ஒரு நிபந்தனையை விதித்தார். "தனக்கு மனைவியாக வரவிருக்கும் பெண் தன்னுடைய மனம் கோணாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்' என்பதே அந்த நிபந்தனை. அந்தப் பெண்ணிடம் கூறி சம்மதம் பெற்று வருமாறு கூறினர்.
அவர்களும் நிபந்தனையை உத்கலையிடம் கூறி அவளின் சம்மதத்தை கேட்டனர். அவளும் பதிலுக்கு ஒரு நிபந்தனை போட்டாள். அதாவது, "துர்வாசரின் கோபம் நியாயமாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் கோபம், சாபம் என்று இருக்கக் கூடாது' என்பதுதான். அதிலிருந்து நியாயத்தை உணர்ந்து துர்வாச முனிவரும் ஏற்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது. உத்கலையின் பணி
விடைகளால் திருப்தி அடைந்து தனது ஆசிரமமே தெய்வீகப் பொலிவுடன் விளங்குவதை கண்ணுற்று மகிழ்ந்தார் துர்வாசர்.
இந்த நிலையில்தான் ஓர் அதிகாலையில் உத்கலை ஆசிரம பசுக்களை குளிப்பாட்டி நெற்றிக்கு குங்குமம் இட்டு பூச்சூடி அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் விதி குறிக்கிட்டது அவர்களின் நல் வாழ்வில்...?
அவசிய காரியத்துக்காகத் தன் தர்மபத்தினி உத்கலையை கூப்பிட்டார் துர்வாசர். முதல் தரம் அவர் கூப்பிட்ட போது, அவள் காதில் விழவில்லை. இரண்டாம் முறை அழைத்தபோது, அவள் கோ
பூஜையில் தன்னையும் மறந்த நிலையில்
ஈடுபட்டிருந்தாள். மூன்றாம் முறை பொங்கி வரும் கடுசினத்துடன் "உத்கலை' என்று கூவி அழைத்தார். அவள் தன் நிலைக்கு திரும்பி தன் கணவன் தன்னை கூப்பிடுகிறார் என்பதை உணர்ந்து ஓடி வந்தாள். துர்வாசர் கடும் சினத்துடன் கமண்டலத்திலிருந்து இருந்து நீரை எடுத்து அவள் மீது தெளித்து சாபம் கொடுத்தார் உத்கலை எரிந்து சாம்பலானாள். அந்த விநாடியே அவரது கோபம் மறைந்தது.
"தனக்கு சிறிதளவும் மன வருத்தம் கொடுக்காத உத்தமியே தன்னுடைய முன் கோபத்தால் இழந்து விட்டோமே?' என கண்ணீர் சிந்தி கலங்கினர் அவர் வாயிலிருந்து ஒவ்வொரு உபதேசம் தானாகவே வெளிப்பட்டது.
" உலகில் எந்த மனிதன் நியாயமற்ற முன் கோபத்தால் தன்னை இழக்கின்றானோ அவனுக்கு அந்தப் பிறவியே அர்த்தமற்றதாக வீணாகட்டும்!' என்று கதறினார்.
அளவற்ற துக்கத்தை அடைந்த துர்வாசர் தனது மனைவியின் சாம்பலின் மீது மீண்டும் நீரை தெளித்து, "இனி உலகில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் நீ பெருமையுடன் விளங்குவாய்! நீ இல்லாத சுபச்சடங்குகள் இருக்காது. அந்தப் புண்ணியங்கள் அனைத்தும் உன்னையே சேரும். அந்த பலனாக உத்தமியான நீ சூரியன், சந்திரன் உள்ளவரையில் உலகில் தர்மம் உள்ளவரை, கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் உள்ளவரை சொர்க்கத்தில் சுகமாக வாழ்வாய்!' என்று சாப விமோசனம் கொடுத்தார் .
ஒவ்வொரு சுபதெய்வீக நிகழ்ச்சியிலும் நாம் வாழையின் மூலம் உத்கலையின் ஆசியையும் திருவருளையும் பெறுகின்றோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com