ஆஸ்கர் கதவு வரை தட்டிய படம் பி.எஸ்.வினோத் இயக்கிய 'கூழாங்கல்.' பெரிய கவனம் பெற்ற படமாக இருந்தாலும், தயாரிப்பாளர் 'ரெளடி பிக்சர்ஸ்' நயன்தாரா படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் இழுபறி காட்டினார். 'கூழாங்கல்' படத்தைப் பல விருதுகளை நோக்கிக் கொண்டு சென்றதில் நயன்தாராவின் பங்களிப்பு முக்கியமானது. அப்படியிருக்க, தனக்கு அடுத்த படத்தை இயக்காமல் சிவகார்த்திகேயன் கம்பெனியை நோக்கி பி.எஸ்.வினோத் செல்ல, அந்தக் கோபத்தில் 'கூழாங்கல்' படத்தை யாரும் பார்க்க முடியாத அளவுக்குக் கிடப்பில் போட்டார் நயன். இந்த நிலையில் 'சோனி லிவ்' நிறுவனம் பெரிய தொகை பேச, ஒரு வழியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
'ஜெய்பீம்' லிஜோ மோல், அடுத்தடுத்து ஒப்புக் கொள்ளும் படங்களிலும் பேசப்படும் கதாபாத்திரமாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'காகங்கள்', 'வாச்சாத்தி', 'காதல் என்பது பொதுவுடமை' ஆகிய படங்கள் தவிர, இப்போது சசிகுமாருடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'கழுகு' சத்யசிவா இயக்கி வரும் இப்படமும் 90-களில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாம்.
திரையுலகில் 33-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார் விக்ரம். பல படங்கள், பல பரிமாணங்கள், பல கதாபாத்திரங்கள் என்று தன் கலையுலகப் பயணத்தில் அசத்தி வருகிறார். அந்த வரிசையில் 'தங்கலான்', 'துருவ நட்சத்திரம்' என வரிசைக் கட்டி நிற்கிறது விக்ரமின் லைன் அப். இதற்கிடையில் 'கர்ணா' படமும் காத்திருக்கிறது. இந்நிலையில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்' மற்றும் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்ற 'சித்தா' படத்தை இயக்கிய அருண்குமார், விக்ரமின் 62-ஆவது படத்தை இயக்குகிறார். இதற்கு ஜி.பி பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா சிபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.