வெள்ளித் திரை, சின்னத் திரைகளின் ஆதிக்கம் வந்தவுடன் தமிழ்நாட்டின் தொன்மையான கலையான நாடகக் கலை வழக்கொழிந்து போய்விட்டது. இருப்பினும், இந்த நவீன யுகத்திலும் திருவிழாக் காலங்களில் நாடகக் கலையை அரங்கேற்றி வரும் கிராமங்கள் பல இருக்கின்றன. இதுபோல, தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் வைகுந்த ஏகாதசி நாளில் தூங்காமல் கண் விழித்து இருப்பதற்காக இருநூறுஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தப்படுகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞரான நரசிம்மதாசர் தஞ்சாவூர் அரண்மனையில் நடத்தப்படும் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது, தனது கிராமத்தில் நடத்துவதற்காக, ஏகாதசி விரத மகிமையை விளக்கும் ருக்மாங்கதன் நாடகக் கதைக் குறிப்புகளை ராணியிடம் நரசிம்மதாசர் கேட்டார். அதற்கு ராணி, 'உங்களால் இதையெல்லாம் நடத்த முடியாது' எனக் கூறி தர மறுத்துவிட்டார். இதனால், நரசிம்மதாசர் பால் வாங்கிக் கொண்டு போய் சத்தியம் செய்தார். இதை நம்பிய ராணியும் அக்கதையை நரசிம்மதாசரிடம் வழங்கினார்.
அப்போது முதல் காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி நாளில் ருக்மாங்கதன் சரித்திர நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நாடகத்தில் தொழில்முறை கலைஞர்கள் அல்லாத, கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏறத்தாழ இருபது பேர் நடிக்கின்றனர். பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே வேடமேற்று நடிக்கின்றனர். இதற்காக ஆண்டுதோறும் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையில் சுவடி எடுத்து, ரங்கநாத சுவாமி படத்தின் முன் வைத்து வழிபாடு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நாள்தோறும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நாடக ஒத்திகை, பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இதில், பங்கேற்கும் அனைவரும் விரதம் இருந்து, உணர்வுபூர்வமாகவும், பக்தியுடனும் நடிப்பதால், நாடகமும் தத்ரூபமாகவே இருக்கிறது.
இதுகுறித்து காசவளநாடு கொல்லாங்கரை கிராம நாடக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரெ. தர்மராஜ், கோ. செல்வக்குமார் ஆகியோர் கூறியதாவது:
''வைகுந்த ஏகாதசிக்கு முந்தைய நாளன்று ஒரு வேளை விரதம் கடைப்பிடிக்கப்படும் தசமி நாளில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் நடத்தப்படும். இரண்டாம் நாளான ஏகாதசி நாளில் கிராம மக்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு நேரத்திலும் கண் விழிப்பது வழக்கம். அப்போது, கிராமத்தில் யாரும் தூங்காமல் இருப்பதற்காக 'ருக்மாங்கதன் நாடகம்' அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இரவில் தொடங்கும் இந்த நாடகம் தொடர்ந்து விடிய, விடிய நடைபெறும்.
இந்த நாடகத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, மறு நாளான துவாதசி நாளில் விரதத்தை முடிப்போம். இதுபோல, தமிழ்நாட்டில் ஏகாதசி நாளில் ருக்மாங்கதன் நாடகம் நடத்தும் கிராமம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.
மூன்றாம் நாளான துவாதசி நாள் இரவும் 'சம்பூர்ண ராமாயணம்' நாடகம் நடத்தப்படும். இதில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு காண்டத்தில் நாடகம் அரங்கேற்றப்படும். ஒரு ஆண்டு பால காண்டம் நடத்தப்பட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், யுத்த காண்டம் என வரிசையாக நடத்தப்படும்.
தெலுங்கு கலந்த கர்நாடக இசையில் இருந்த இந்த நாடகத்தின் பாடல்களை 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் வாழ்ந்த நாடகக் கலைஞரான கோவிந்தசாமி தஞ்சிராயர்தான் தூய தமிழில் மாற்றினார். பாடல்களை தமிழில் மாற்றிய அவர் அக்காலத்தில் இருந்த பிரபல திரையிசைப் பாடல் வடிவில் நாடகத்துக்கு தகுந்தவாறு பக்திபூர்வமான வரிகளைப் போட்டு, புதுமையைப் புகுத்தினார். அதிலிருந்துதான் இந்த நாடகம் எளிதில் தெளிவாகப் புரியத் தொடங்கியது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவும் பெருகியது.
இவரைப் போன்று கலியபெருமாள் தஞ்சிராயர், வடிவேல் தஞ்சிராயர், வேலாயுத தஞ்சிராயர், தங்கவேல் தஞ்சிராயர், சைவராஜ் தஞ்சிராயர், பெரியதம்பி தஞ்சிராயர், நடராஜன் தஞ்சிராயர் போன்றோர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர்.
இப்போது, சுந்தர்ராஜ் தஞ்சிராயர் முன்னின்று நடத்தி வருகிறார். எங்களது முன்னோர்களைப் போன்று அடுத்த தலைமுறையினரையும் நாடகத்துக்கு தயார்படுத்தி வருகிறோம். எனவே, இந்த நாடகம் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், உயிர்ப்புடன் இருக்கும்.
நாடகத்தில் பாடல்கள் அனைத்தையும் நாங்களே பாடிவிடுவோம். கலைஞர்கள் வசனம் பேசி நடிப்பர். நாடகத்துக்குத் தேவையான மிருதங்கம், ஆர்மோனியம், ஒளி - ஒலி போன்றவை வாடகைக்கு எடுத்துக் கொள்வோம். நாடகத்தில் பயன்படுத்தப்படும் காட்சி அரங்குகள், உடைகள் போன்றவற்றை நாங்களே வைத்துள்ளோம். கிராமத்தில் நாடகம் நடத்துவதற்காக அரசு மேடை அமைத்துக் கொடுத்துள்ளது.
நாடகத்துக்கான செலவையும் கிராம மக்களே செய்து வருகின்றனர். இதற்கான வரவு - செலவு அறிக்கையை ஆண்டுதோறும் துண்டறிக்கைகளில் அச்சிட்டு, வீடு, வீடாகக் கொடுத்துவிடுவதால், நாடகத்துக்கு தேவையான நிதியுதவியும் தொய்வின்றி கிடைத்து வருகிறது.
ஏகாதசி நாளில் இரவு கண்விழித்து பார்த்தால், மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால், இந்த நாடகத்தைக் காண 500-க்கும் அதிகமானோர் திரள்வது இப்போதும் தொடர்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


