ருசியான பரோட்டாவை தயாரிப்பது குறித்து மதுரையில் பயிற்சிப் பள்ளி உருவாகி இருக்கிறது.
மதுரை கூடல் நகரைச் சேர்ந்த முப்பத்து இரண்டு வயதான முகமது காசிம், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.
அவருடன் பேசியபோது
'எனது தாத்தா காலத்தில் இருந்து எங்களுக்கு ஹோட்டல் தொழில்தான். நான் படிப்பை முடித்துவிட்டு, மாலத்தீவு, துபையில் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். சொந்த ஊரிலேயே சொந்தமாக ஓட்டல் நடத்தலாமே? என்ற எண்ணம் ஏற்பட்டு 2019-ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினேன்.
நான் பரோட்டா தயாரிக்கப் போய்விட்டால் ஹோட்டலின் மற்ற விஷயங்களையும், நிர்வாகத்தையும் என்னால் எப்படி கவனிக்க முடியும் என்ற கேள்வி எனக்கு எழுந்தது.
தினம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு நான் தயாராக இருந்தாலும், பரோட்டா செய்ய யாரும் கிடைக்கவில்லை. ஆள்கள் கிடைக்காத சூழ்நிலையில் 'பரோட்டா செய்வது எப்படி?' என்று சொல்லிக் கொடுக்கும் பயிற்சிப் பள்ளியை ஆரம்பிக்க முடிவு செய்தேன்.
பரோட்டா மாஸ்டராக ஒரு மாஸ்டரிடம் சில ஆண்டுகளாவது வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில், பத்தே நாள்களில் பயிற்சி தருகிறோம் என்று முதலில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து பல பகுதிகளிலும் சுவர்களில் ஒட்டியபோது, சிலர் கிண்டல் செய்தனர். ஆனாலும், நான் மனம் தளரவில்லை.
சில நாள்கள் கழித்து இரண்டு உள்ளூர்க்காரர்கள் வந்தனர். அவர்களுக்கு எங்கள் ஹோட்டலிலேயே வைத்து பயிற்சி கொடுத்தேன். பிரத்யேகமாக ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்குவது என்று தீர்மானித்து, 'செல்ஃபி பரோட்டா கோச்சிங்' சென்டரை ஆரம்பித்தேன்.
பயிற்சி பெற்றவர்களின் வாய்மொழி தகவல்களாலேயே அடுத்தடுத்து மாணவர்கள் நிறைய பேர் வரத் தொடங்கினர். எங்கள் பள்ளி குறித்து யூடியூபில் விடியோ வெளியானதும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வந்து தங்கி, எங்களிடம் பயிற்சி பெறுகின்றனர். பொருள்கள் செலவு உள்பட நாலாயிரம் ரூபாயே கட்டணமாக வசூலிக்கிறோம்.
பத்து நாள்களுக்கு தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி. காலையில் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையும், மாலையில் மூன்று மணி முதல் ஐந்து மணி வரையும் முதல் பிரிவு நடக்கிறது. காலையில் ஒன்பது முதல் பதினொன்று வரையும் மாலையில் ஐந்து முதல் ஏழு மணி வரையும் இரண்டாம் பிரிவு பயிற்சி நடக்கிறது. தற்போது மாதத்துக்கு 150 பேர் வரை பயிற்சி பெறுகின்றனர்.
பரோட்டாவுக்கு மாவு பிசைவது எப்படி? , உருண்டை போடுவது எப்படி? , மாவை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்? , பரோட்டாவை வீசுவது, எண்ணெய் போடுவது என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்போம். முதலில் துணி டவலில் பரோட்டாவை எப்படி வீச வேண்டும் என்று பயிற்சி கொடுத்து, அதன் பிறகு மாவை எப்படி வீசுவது என்று சொல்லிக் கொடுப்போம்.
அப்புறம், வீச்சு பரோட்டா , சிலோன், எண்ணெய், கொத்து, கோதுமை, மலபார், மலேசியா, சிங்கப்பூர்... என்று பலவகையான பரோட்டாக்கள் தயாரிப்பதையும், கிரேவி, சால்னா, சிக்கன், சைனீஸ் உணவுகளைத் தயாரிப்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம்.
பயிற்சி பெற வயது தடை இல்லை. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள். இலங்கையில் இருந்தும் வருகிறார்கள். வெளிநாடுகளில் ஹோட்டல் வேலைக்கு ஆள்களை எடுத்து அனுப்பும் நிறுவனத்தினர் பயிற்சிக்காக ஆள்களை அனுப்பி வைக்கிறார்கள். வெளியூர், வெளிநாட்டு மாணவர்களுக்காக தங்கும் வசதியும் செய்து கொடுக்கிறோம்.
பல ஊர்களில் இருந்தும் பரோட்டா செய்ய ஆள்கள் கேட்போருக்கும், எங்கள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து பணியைப் பெற்று தருகிறோம்.
மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐ.டி, பொறியாளர் போன்றோர் பயிற்சி பெற்றது வியப்படைய வைத்தது. தனியார் துறை ஊழியர்கள், வெளிநாடுகளுக்குப் படிக்கவும் வேலைக்காகவும் செல்பவர்கள், சிற்றுண்டிக் கடை வைத்திருக்கும் பெண்கள் போன்றோரும் பயிற்சிக்கு வருகை தருகின்றனர்'' என்கிறார் முகமது காசிம்.
வாழ்க்கையில் முன்னேற்றம்
கேரளாவில் திருச்சூரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கிரண் பேசுகையில், 'ஹோட்டலில் எனக்கு நாளொன்றுக்கு சம்பளம் இருநூறு ரூபாய். அதே ஓட்டலின் சமையல்கூடத்தில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டருக்கு சம்பளம் தினம் ஆயிரம் ரூபாய்.
அப்போது எனக்கும் பரோட்டா மாஸ்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
மதுரையில் பயிற்சி மையம் இருப்பதை அறிந்து, வேலையை விட்டுவிட்டு ரயில் ஏறிவிட்டடேன். நன்கு பயிற்சி பெற்றேன். இன்று, கேரளத்தில் வேறு ஒரு ஊரில் தினம் 830 ரூபாய் சம்பாதிக்கிறேன். விரைவில் இன்னும் சம்பளம் அதிகரிக்கலாம். என்னைப் போல, பலரும் பரோட்டா தயாரிக்கக் கற்று வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்' என்கிறார் கிரண்.
-எஸ். சந்திரமெளலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.