சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்...
இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடையத் துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள்.
இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித வாழ்க்கையின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இதமான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் டைகர் வெங்கட். "தண்டுபாளையம்' படத்தின் இயக்குநர்.
ஆசியாவிலேயே அதிக குற்ற சம்பவங்களை செய்த தண்டுபாளையம் கேங் பற்றிய கதை.... எப்படியான அனுபவம்...
கடந்த 1980-களில் இருந்து இன்று வரை ஒரு மிகப் பெரிய கொள்ளைக் கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றச் செயல்களை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இதில் ஒரு பிரிவினரை காவல்துறையினர் கைது செய்தார்கள். 390 திருட்டு வழக்குகள், 108 கொலைக் குற்ற வழக்குகள், கொடுமையான 90 பாலியல் பலாத்கார வழக்குகள் என்று, ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் நடந்து வருகிறது.
இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை வழங்க முடியவில்லை. குற்றவாளிகளை கைது செய்திருந்த காவல்துறை அதிகாரிகள் மிக மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். கைதானவர்கள் எல்லா வழக்கிலும் விடுதலையாகி வருகின்றனர். இன்னும் 10 வழக்குகள் மட்டும்தான் நிலுவையில் இருக்கிறது.
இவர்கள் அனைவரும் எழுதப் படிக்கவே தெரியாத தினசரிக்கூலிகள். நான் இயக்க வேண்டிய திரைக்கதை வேறு ஒன்றாகத்தான் இருந்தது. அந்த திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போதான் இந்த விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஒரு உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது. அதிசயதக்கது.
அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், இந்தியா நெடுகிலும் அந்த பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாக தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி.
கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் உங்களை தொற்றிக் கொள்ளும்.
கதையின் உள்ளடக்கம் பற்றி பேசலாம்...
ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.
அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஒரு அனுபவம்.
அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
நல்ல வேகம் காட்டுகிற சினிமாவாக இருக்கும் போல...
கண்டிப்பாக நல்ல வேகம் காட்டுகிற சினிமா. சமூக நலன், உண்மை, யாரிடமும் பார்க்காத பக்கங்கள் என இந்தப்படம் பேசும். சினிமாவில் மாற்றம் தேவைப்படும் சமயம் அதைச் செய்யத் தயங்கக்கூடாது என்று நினைத்து இந்தக் கதையை உருவாக்கினேன்.
அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான்.
எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் மனித வாழ்க்கைக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம்.
நம்பிக்கை, துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை. அதே சமயம் சமூக அக்கறையும் கலந்திருக்கும். சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாளே இப்படி நம்பிக்கையான நடிகர்கள். நல்ல தொழில்நுட்பக் குழு பக்க பலமாக இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.