இருபத்தொரு வயதில் ஐ.ஏ.எஸ். அலுவலகராகத் தேர்வான பஞ்சாப்பைச் சேர்ந்த காஷிஷ் மிட்டல், 'ஹிந்துஸ்தானி இசையைப் பாடி பயணிக்க வேண்டும்' என்பதற்காகப் பணியைத் துறந்து மேடையேறினார். தற்போது முப்பத்தொரு வயதாகும் இவர், புகழ்பெற்ற 'ஆக்ரா கரானா' இசை பாணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அகில இந்திய வானொலி, தொலைக்காட்சிகளில் 'ஏ கிரேடு' கலைஞராகவும், இந்திய அரசின் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலால் திறமைமிக்க கலைஞராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அவர் கூறியது:
'எனது தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி. எட்டு வயதில் ஹிந்துஸ்தானி இசையைக் கற்கத் தொடங்கினேன்.
பதினோறு வயதில் பஞ்சாபில் ஹரிவல்லப் சங்கீதக் சங்கமத்தில் எனது அரங்கேற்றம் நடைபெற்றது. பிறகு 'ஆக்ரா கரானா' பாணியைக் கற்க மேஸ்ட்ரோ பண்டிட் யஷ்பாலிடம் நுணுக்கங்களைக் கற்றேன்.
ஐஐடி தில்லியில் கணினி அறிவியலில் பி.டெக். முடித்து, இருபத்தொரு வயதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானேன். ஹிந்துஸ்தானி மேடைகளில் பாடுவதும் தொடர்ந்தது. ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினேன்.
ஹிந்துஸ்தானி இசையின் மீதான ஆர்வத்தைத் தொடர, ஐ.ஏ.எஸ். பணியை உதறினேன். சங்கீத உலகில் சஞ்சரிக்கும் பறவையானேன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 'முதன்மை ஆராய்ச்சித் திட்ட மேலாளராக' சேர்ந்தேன். அங்கு ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
2025 மார்ச் மாதத்தில், தொழில்நுட்ப தொழில்முனைவோராக 'திஷா ஏ. ஐ.' நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். இசை நிகழ்ச்சிகளையும் ஆர்வத்துடன் நடத்தி வருகிறேன்.
நுஸ்ரத் ஃபதே அலிகானின் பாடலின் ஆன்மாவைத் தொட்டு அண்மையில் பாடிய நிகழ்ச்சி இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.
ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் எனது அனுபவங்களைக் கெளரவிக்கும் விதமாக, பஞ்சாப் அரசின் கலாசார விருது, ஐஐடி தில்லியின் சரஸ்வதி சம்மான் விருது, நாத ஸ்ரீ சம்மான் விருதுகளும், தேசிய கலை, கலாசார உதவித் தொகைகளும் எனக்கு வழங்கப்பட்டுள்ளன'' என்கிறார் காஷிஷ் மிட்டல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.