அபூர்வன்
'இலக்கியம், வரலாறு, தொல்லியல் போன்றவற்றில் எனக்குத் தணியாத ஆர்வம் உண்டு. அதன்படி சங்க இலக்கியம், உலக இலக்கியம், உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் என்று புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன்.
சாகித்ய அகாதெமியின் அனைத்து முக்கியப் புத்தகங்களும் என்னிடம் உள்ளன. அவர்கள் வெளியிட்ட பஞ்சாபி, வங்காள, மராத்தி, ஹிந்தி இலக்கியங்களும்; தமிழறிஞர்கள் 100 பேர் வாழ்க்கை வரலாறும் என்னிடம் இருக்கிறது' என்கிறார் சென்னை கெருகம்பாக்கத்தில் "தமிழ்ப் பொற்களஞ்சியம்' என்கிற பெயரில் தனிநபர் நூலகத்தை உருவாக்கி இருக்கும் இராஜசேகர் என்கிற மது கேசவ் பொற்கண்ணன். உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை இவரிடம் உள்ளன.
கதை, கவிதை, கட்டுரை, நாவல், பல்வேறு இசங்கள் சார்ந்த நூல்கள் என்று இவரது 40 ஆண்டுகால நூல் சேகரிப்பில் இந்த நூலகம் உருவாகி இருக்கிறது. அவர் தனது நூலக அனுபவம் பற்றிப் பேசும்போது:
'சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் 1995-இல் ஏற்பட்டு கண்காட்சியில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான நூல்கள் எரிந்துவிட்டன. அது என்னைப் பெரிதும் பாதித்தது. அதிலிருந்து மீள எனக்கு நீண்ட நாள் ஆனது. அதன் பிறகு புத்தகங்கள் வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன்.
நான் முதலில் தஞ்சாவூரில் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். பிறகு போட்டித் தேர்வு எழுதி தமிழ்நாடு கைத்தறி, துணி நூல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
எனக்குச் சிறு வயதிலிருந்து நூல்கள் மீது ஆர்வமும், படிப்பின் மீது ஈடுபாடும் இருந்தது. நான் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்வேன். எங்கே சென்றாலும் அங்குள்ள நூலகங்கள் செல்லத் தவற மாட்டேன். ஒருகட்டத்தில் இப்படிப்பட்ட நூல்களைச் சொந்தமாக வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து, ஆசை தீரப் படிக்க வேண்டும் என்று நினைத்து, மெல்ல மெல்ல புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். புத்தகக் கண்காட்சி எங்கு நடந்தாலும் சென்று நூல்கள் வாங்கி வருவேன்.
திருமணத்துக்கு முன்பு வாடகை வீட்டில் தங்கி இருக்கும்போது, எனது புத்தகங்களுக்காக ஓர் அறை எடுத்து, அதில் புத்தகங்களை நிறைத்து வைத்திருந்தேன். பிறகு சொந்த வீடு கட்டியபோது வீட்டு மேல் மாடியில் எனது நூலகத்தை அமைத்தேன்.
என்.சி.பி. எச். வெளியிட்ட "பாவேந்தம்' 25 தொகுதிகள், மார்க்ஸ், ஏங்கல்ஸ் சார்ந்த 20 தொகுதிகள், லௌகீக சங்கம் வெளியிட்ட பெருந்தொகுதிகள், பெரியார், ஜீவா நூல் தொகுதிகள், கம்பராமாயணம், பாரதம் தொகுதிகள், ஜெயமோகன் எழுதிய வெண்முரசு 26 தொகுதிகள் என்று ஏராளமான தொகுதிகள் உள்ளன.
1800-களில் உள்ள பழைய புத்தகங்கள்கூட என்னிடம் உண்டு . உலகம் என்ற தலைப்பில் உலக வரலாறு, உலக விஞ்ஞானிகள், உலகக் கவிஞர்கள், உலக எழுத்தாளர்கள் என்று 200 புத்தகங்கள் என்னிடம் உள்ளன. சிறப்பான புத்தகங்களைத் தேடியலைந்து வாங்குவது உண்டு. அந்தக்காலச் சிற்றிதழ்களின் பல தொகுதிகளும் என்னிடம் உள்ளன.
என்னிடம் உள்ள நூல்களில் பார்வை நூல்கள், சங்க இலக்கியங்கள், பன்னிருதிருமுறைகள், பக்தி இலக்கியங்கள், இந்திய இலக்கியச் சிற்பிகள் தொகுதிகள், கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட தனி நபர் சார்ந்த நூல்கள் தொகுதிகள், உ.வே.சா., டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரம் ஆய்வு நூல்கள் என்று வகைமை பிரித்து வைத்து இருக்கிறேன். எவ்வளவு பணி இருந்தாலும், எவ்வளவு தாமதமாக வீடு வந்தாலும் நான் படிக்காமல் தூங்குவதில்லை.
நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். யாரிடமும் நெருங்க மாட்டேன். எண்பதுகளில் திருவல்லிக்கேணி இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றதுண்டு. அதேபோல் கஸ்தூரிரங்கன் வீட்டு மொட்டை மாடியில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களில் ஞானக்கூத்தன், சுஜாதா, பாலகுமாரன், மாலன் எல்லாரும் வருவார்கள். நான் ஒரு பார்வையாளனாக இருந்து விட்டு வந்துவிடுவேன்.
நான் "காற்றிலே ஒரு சதுரம்' கவிதை நூல், "எழுதிச் செல்லும் இசையின் கைகள்' என்று பாடலாசிரியர் பற்றிய தொகை நூல் என இரண்டு நூல்களை எழுதி இருக்கிறேன். ஐந்து இசை ஆல்பங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன். இப்போது "கம்பன் - வில்லிபுத்தூராரின் அரசியல் பார்வை' தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறேன்.
புத்தகச் சேகரிப்பு ஆர்வம் எப்படி வந்தது?
எங்கள் தாத்தா சிவசிதம்பரம் 1963 -இல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். வெண்பாக்கள் எழுதுவதில் வல்லவர். அவர் வீடு முழுக்க புத்தகங்களை வைத்திருந்தார். அது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கக் கூடும். எனது நூலகத்துக்கு வருகை தருபவர்கள் நூல்களை எடுத்துப் படிக்கலாம். விரும்பியதை எடுத்துச் செல்லலாம். சிலருக்கு புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்து விடுவதுண்டு. அதே நூலை மீண்டும் வாங்கி அங்கே நிரப்புவேன்.
ஆரம்பத்தில், "இது வேண்டாத வேலை... இதனால் என்ன பயன்? நீங்கள் புத்தகம் வாங்கிய பணத்தில் நான்கு வீடு கட்டி இருக்கலாம்' என்று வீட்டில் விமர்சித்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் "இவனைத் திருத்த முடியாது' என்று விட்டுவிட்டார்கள் . என்னிடம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இவ்வளவுதான் என்று நான் விடுவதில்லை. இப்போதும் நான் வாங்கிக் கொண்டே இருக்கிறேன்.
புத்தகங்களோடு இருக்கும்பொழுது அதைப் படைத்தவர்களுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படிப் பார்த்தால் நான் சில ஆயிரம் பேருடன் இருப்பதாக உணர்கிறேன். அது தரும் இன்பம் தனியானது'' என்கிறார் , பொற்கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.