அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் பகுதியில் கிளீனிக் நடத்திவரும் மருத்துவர் ஹோவார்ட் டக்கருக்கு வயது நூற்று இரண்டு. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதுடன் தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சையை அளித்து வருகிறார். இதற்காகவே இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
1922-இல் பிறந்து, 1947-இல் மருத்துவம் படித்துவிட்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். இன்றும் தொடர்ந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறார். திருமணமாகி 67 வருடங்கள் ஆகிவிட்டன. 4 பிள்ளைகள், 10 பேரன்கள்- பேத்திகள் உள்ளனர். இதனிடையே 1989-இல் தன்னுடைய 67-ஆவது வயதில் வழக்குரைஞர் பட்டமும் பெற்றார். தினமும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறார்.
அவர் கூறியது:
''எனக்கு எண்பது வயதில் ஸ்கையிங் செய்தபோது, கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டது. கரோனா பாதிக்கப்பட்டும் பிழைத்தேன்.
மகிழ்ச்சி என்பது தசை மாதிரி. அதற்கு தினமும் பயிற்சி எடுத்துகொள்வது அவசியம். என்னிக்கோ ஒரு நாள் சாகப் போறோம். அதுபற்றி கவலைப்படாமல் ஏதாவது செய்து காலம் தள்ள வேண்டியது. வாழ்க்கையில் சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நோக்கத்த்தை மனதில் கொண்டு வாழ வேண்டும்.
கற்பதை ஒரு போதும் நிறுத்தக் கூடாது. புதிது புதிதாக படித்தல், புது விஷயங்களை அறிந்து கொள்ளுதல் என செய்யும்போது, மூளை இயங்கிக் கொண்டிருக்கும்.
பயத்தை ஆர்வம் ஜெயித்து விடும். புதியதை கற்க வயது ஒரு பிரச்னை அல்ல. நாமாக வாழனும்னா இதனை செய்து தான் ஆகனும்.
மென்மையாக அடிக்கும் இதயத் துடிப்பு நீண்ட நாள்களுக்கு நீடிக்கும். சந்தோஷமாய் இருங்கள். புகை,மதுவை தவிருங்கள்.தவிர்க்க இயலாத நிலையில் லேசாகச் சாப்பிடுங்கள். வேலையிலும் வீட்டிலும் சந்தோஷம்தான் எல்லாம் என புரிந்து வாழுங்கள்.
ஒரு பெண்ணுக்கு நாற்பத்து இரண்டு வயதிலேயே 'ஸ்டிரோக்' வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பணியில் அதிக மன அழுத்தம் ஏற்பட்டதுதான்.வெறுப்பு, மன அளவில் தளர்ச்சி, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை சிக்கலில் கொண்டு போய் தள்ளிவிடும். எதையும் சீரியசாக எடுத்துகொள்ளாமல் சமாளிக்க பழகுங்கள்.
மரணத்தை கண்டு கொள்ளாமல்,வாழ்வதைக் கொண்டாடுங்கள்'' என்கிறார் ஹோவார்ட் டக்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.