மோப்ப நாய்கள் பராக்...பராக்..!

சென்னைக் காவல் துறையின் புலனாய்வு பிரிவில் மோப்ப நாய்கள் படைக்கு புதிதாகச் சில நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டிருக்கின்றன.
மோப்ப நாய்கள் பராக்...பராக்..!
Published on
Updated on
2 min read

மகேஷ் பாபு

சென்னைக் காவல் துறையின் புலனாய்வு பிரிவில் மோப்ப நாய்கள் படைக்கு ('டிடெக்டிவ் டாக் ஸ்க்வாட்') புதிதாகச் சில நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்த நாய்க் குட்டிகளுக்கு மோப்பம் பிடிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியக் காவல்துறையில் முதன்முதலாக 'டாக் ஸ்க்வாட்' (மோப்ப நாய்ப் படை) சென்னையில்தான் தொடங்கப்பட்டது.1952 டிசம்பர் 15-ஆம் தேதி 'டாக் ஸ்க்வாட்' மட்டுமல்லாமல், மோப்ப நாய்கள் பயிற்சிக்கூடமும் அப்போது தொடங்கப்பட்டது. இங்கிருந்துதான் ஆரம்பத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட காவல்துறை மோப்ப நாய்கள் அனுப்பப்பட்டன.

இப்போது தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள் பிரிவுக்குப் புதிதாக 11 நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 9 நாய்க் குட்டிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவுக்கும் , 2 நாய்க் குட்டிகள் பரங்கிமலை மோப்ப நாய்ப் பிரிவுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

கீழ்ப்பாக்கம் மோப்ப நாய் பிரிவில் இப்போது முழுமையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட 16 நாய்கள் உள்ளன. நாய்க் குட்டிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்றே 27 பயிற்சியாளர்கள் (ட்ரெய்னர்ஸ்) இருக்கிறார்கள். நாய்க் குட்டிகள் தனித் தனியாக சில பயிற்சியாளர்களின் தனிப் பாதுகாப்பில் விடப்பட்டிருக்கின்றன. தங்களுக்கு வழங்கப்பட்ட நாய்க் குட்டிகளை அவர்கள் மட்டும்தான் பராமரித்துப் பயிற்சி அளிப்பார்கள்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு கொடுத்து, அந்த நாய்க் குட்டிகளுடன் தனிப்பட்ட உறவு ஏற்படுத்திக் கொள்வதுதான் பயிற்சியாளர்களின் முதல் வேலை. ஆறு மாதங்களுக்கு அந்த நாய்க் குட்டிகளை குழந்தைகளைப் பராமரிப்பதுபோல அவர்கள் வளர்க்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பயிற்சிகள் தொடங்கும். வெடிமருந்துகள், மயக்க மருந்துகள் உள்ளிட்டவறறை நுகர்ந்து மோப்பம் பிடிக்கும் பயிற்சி படிப்படியாகத் தரப்படுகிறது.

13 மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே முழுமையான பயிற்சி பெற்று சேவையில் இருக்கும் மோப்ப நாய்களுடன் மோப்பம் பிடிக்கும் பயிற்சிக்கு அந்த நாய்கள் அனுப்பப்படுகின்றன. மோப்பம் பிடிக்கும் கலையை அந்த நாய்கள் கற்றுக்கொள்கின்றன. நன்றாகத் தேர்ச்சி பெற்ற நாய்கள்தான் முக்கியமான வழக்குகளில் தனியாகச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பொதுவாக, மோப்ப நாய்கள் 11 ஆண்டுகள் வரை காவல் துறை சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்தியாவிலேயே மிகத் திறமை வாய்ந்த மோப்ப நாய்களும் அவற்றின் பயிற்சியாளர்களும் தமிழ்நாடு காவல் துறையில்தான் இருக்கிறார்கள். பிற மாநிலக் காவல் துறைகள் தங்கள் பயிற்சியாளர்களை சென்னைக்கு அனுப்பி, மோப்ப நாய் பயிற்சி குறித்த நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாடு காவல் துறையில் அண்மையில் இணைந்திருக்கும் 11 நாய்க் குட்டிகளில் பெரும்பாலானவை ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன் இனங்களைச் சேர்ந்தவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com