வகுப்பில் தவறு செய்த மாணவர்கள்தான் பெஞ்சில் நிற்க வைக்கப்படுவார்கள். ஆனால், பீகாரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பில் ஆசிரியை ரீட்டா ராணி, பெஞ்சில் நின்று பல ஆண்டுகளாகப் பாடம் நடத்துகிறார். அவரது உயரம் மூன்று அடி மட்டும்தான். தற்போது ஐம்பத்து இரண்டு வயதாகும் ரீட்டா ராணி, மாணவர்கள் புதிய உயரங்களைத் தொட உழைத்து வருகிறார்.
கல்விப் பயணம் குறித்து அவர் கூறியது:
'எனது ஆறு வயதிலிருந்து உடல்
வளர்ச்சி நின்றுவிட்டது. குடும்பத்தினர் எனது குறைபாட்டை நினைத்து அதிர்ந்தனர். தில்லி, கொல்கத்தா உள்பட பல நகரங்களில் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். எந்த முன்னேற்றமும் இல்லை. எனது பெற்றோர் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உயர்தர மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போதும் முன்னேற்றம் இல்லை. மனதைத் தேற்றிக் கொண்டு, படித்தேன்.
படிக்கும்போதே பள்ளியிலும் சமூகத்திலும் சொந்த பந்தங்களிலிருந்தும் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறேன். எனது குள்ளமான உருவம் சக மாணவ மாணவிகளின் வேடிக்கைக்கும், சிரிப்புக்கும் இலக்கானது. சில ஆசிரியர்கள் கூட தாழ்வாகப் பார்த்தனர். அவற்றைத் தவறாக எடுத்துகொள்ளாமல், தடைகளைத் தாண்டி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் பயணித்தேன்.
அப்பா காவல் துறையில் பணிபுரிந்ததால், காவல் துறையில் சேர நினைத்தேன். ஆனால் அதற்கான உயரம் இல்லாமல் போனதால் மனதைத் தேற்றிக் கொண்டேன்.
ஆசிரியையாக 1992-இல் தனியார் பள்ளியில் பணியைத் தொடங்கினேன். உடல் குறை இல்லாத, உடல் குறையுள்ள, மனரீதியான குறையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்துவந்தேன். 18 ஆண்டுகள் கழித்து, 2010-இல் அரசுப் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது.
கயா மாவட்டத்தின் தனவன் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெஞ்சில் நின்று பாடங்களைக் கற்பித்து வருகிறேன். கரும்பலகையில் நான் எழுத ஏதுவாக இருப்பதற்கும், மாணவர்களுக்கும் நான் பாடம் நடத்துவது தெரிய வேண்டும் என்பதற்காகவும் பெஞ்சில் ஏறி நிற்கிறேன்.
எனக்கு உயரம் இல்லையே என்று வருத்தம் இருந்தாலும், அதையும் தாண்டி கல்விப் பணியை மாணவ மாணவிகள் விரும்பும் விதத்தில் செய்து வருகிறேன். உயரக் குறைபாடு பலவீனம் என்றாலும் அதனை பலமாக மாற்றிக் கொண்டேன்.
எனது மாணவர்கள் பலர் காவல் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, மாறிய தருணங்களில் நானே ஒரு அதிகாரியாக மாறிவிட்ட மகிழ்ச்சி எனக்கு கிடைத்தது.
திருமணம் செய்துகொள்ள பலர் முன்வந்தனர். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்ற முடிவு செய்தேன். எனது மூன்று சகோதரர்களும் எனது முடிவை ஏற்றனர். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமூகப் பணிகளில் ஈடுபடுவேன்'' என்கிறார் ரீட்டா ராணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.