நூற்றியொரு வயதில் பத்மஸ்ரீ

நூற்றியொரு வயது நிரம்பிய ஷார்லட் செளபின் என்ற பிரான்ஸ் தேச பெண்மணிக்கு 2024-ஆ ம் ஆண்டு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நூற்றியொரு வயதில் பத்மஸ்ரீ
Updated on
2 min read

நூற்றியொரு வயது நிரம்பிய ஷார்லட் செளபின் என்ற பிரான்ஸ் தேச பெண்மணிக்கு 2024-ஆ ம் ஆண்டு இந்தியாவின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அப்பெண்மணியின் சாதனை என்ன?

அவரது சாதனைகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் படிக்கும்போது, பிரதமர் உட்பட அங்கு கூடியிருந்த அனைவர் கண்களும் ஈரமாயின. கண்களில் ஒரு தபஸ்வினியின் ஒளியுடன் அந்தப் பெண்மணி பத்மஸ்ரீ கெளரவத்தைப் பெற்றுக்கொள்ள எழுந்தபோது பார்வையாளர்கள் எழுப்பிய கரவொலி விண்ணைத் தொட்டது.

அந்த வயதில் பொதுவாக ஒருவர் ஊன்றுகோல் தேடலாம். படுக்கையிலேயே வீழ்ந்திருக்கலாம். ஆனால், இந்தப் பெண்மணி ஒரு பெண் சிங்கம் போன்ற வீர நடையுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நோக்கிச் சென்றார்.

நாம் நமது வேர்களை மறந்து கொண்டிருக்கும்போது பல கடல்களைத் தாண்டி பிரான்ஸ் தேசத்தில் உள்ள இந்தப் பெண்மணி, பாரதத்தின் பழைய பண்பாடுகளையும் ஞானத்தையும் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை இந்த வயதிலும் பேணி வருகிறார்.

பிரான்சின் ஒரு சிறிய கிராமத்தில் அமர்ந்துகொண்டு குட்டி பாரத தேசத்தையே அவரைச் சுற்றி உருவாக்கியிருக்கிறார். அங்கு மரணம், இயலாமை, தீவிர முதுமை ஆகிய பிணிகளிலிருந்து அநேகரை விடுவித்திருக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்து பாரத தேசத்தின் யோகா மட்டுமே!

ஒருமுறை மரியா என்ற பெண்மணிக்கு இடுப்பு எலும்பு முறிகிறது. அவரை படுக்கையிலேயே இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்தப் பெண்மணி ஷார்லட் செளபின்னை நாடுகிறார். தேவையான யோகப் பயிற்சி மற்றும் பிராணாயாமம் மூலம் ஆறே மாதத்தில் மரியா பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்புகிறார். 'பாரத தேசத்துக்கு உன் நன்றியைத் தெரிவித்துக்கொள்'' என ஷார்லட் மேலும் மரியாவிடம் கூறுகிறார்.

அங்கு பெரும்பான்மையான மக்களின் உணவுப் பழக்கங்களையும் ஷார்லட் சைவத்துக்கு மாற்றினார். கையை உயர்த்தி 'ஹலோ' என்பதற்குப் பதிலாகக் கைகளைக் கூப்பி 'நமஸ்தே' சொல்லும் பழக்கமும் அந்தக் கிராமத்தில் பெருகியுள்ளது.

ஒருபடி மேல் சென்று ஷார்லட், 'நான் பிறப்பால் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், என் ஆத்மா பாரதத்துடனே ஒன்றியுள்ளது'' எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

ஷார்லட் ஐம்பது வயது வரை அலுவலகம் ஒன்றில் காரியதரிசியாக வேலை பார்த்து வந்தார். இடுப்பு வலி, முதுகு வலி, சோர்வு என்று அனைத்தும் அவரைப் பீடித்தன. அவைகளுக்கு நிவாரணம் தர ஷார்லொட் ஆங்கில மருத்துவர்களை அணுகவில்லை. மாறாக, யோகப் பயிற்சியின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, படித்து, புரிந்துகொண்டு அந்த வழி முறையையே தேர்வு செய்தார்.

முதலில் சூரிய நமஸ்காரத்தைச் செய்யும்போது ஷார்லட் தன் உடலில் மின்சாரம் போன்ற புத்துணர்ச்சி பரவுவதை உணர்ந்தார். எந்த மூச்சு நம் உயிரை வைத்திருக்குமோ, அதே மூச்சைப் பிராணாயாமம் மூலம் திறம்படச் செய்து, நமது உடலையும் பேணி ஆயுளை நீடிக்கச் செய்யலாம் என்பதையும் அறிந்துகொண்டார். மற்றவர்களுக்கும் போதித்து வருகிறார். இந்த வயதிலும் அவருக்கு ரத்தக் கொதிப்போ, சர்க்கரை நோயோ இல்லை.

101 வயதில் ஒருவர் வீட்டில் முடங்கிக் கிடப்பதே போதும் என்று எண்ணலாம். ஆனால், ஷர்லட் அந்த வயதில் முதல் முறையாக பத்மஸ்ரீ விருது பெற இந்தியா வந்தடைந்தார். அது அவருக்கு வெறும் அயல்நாட்டு யாத்திரை மட்டுமல்ல; அவர் பேணிக்காக்கும் யோகப் பயிற்சி விளைந்த புண்ணிய பூமிக்கு ஒரு தீர்த்த யாத்திரை போல அமைந்தது.

-முனைவர் ஜி.குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com