FOLLOW US

ON GOOGLE DISCOVER

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

புதிய பாதை...

ஆண்டுதோறும் பருவமழை தொடங்கியவுடன் நாட்டின் பல பகுதிகள் வெள்ளம், ஆற்றங்கரை அரிப்பு என்ற இரட்டைச் சவாலை எதிர்கொள்கின்றன.

News image
Updated On :26 ஜூலை 2026, 4:05 am IST

அனந்தபத்மநாபன்

ஆண்டுதோறும் பருவமழை தொடங்கியவுடன் நாட்டின் பல பகுதிகள் வெள்ளம், ஆற்றங்கரை அரிப்பு என்ற இரட்டைச் சவாலை எதிர்கொள்கின்றன.

பீகார், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. விளைநிலங்கள் ஆற்றில் கரைந்து போகின்றன. இதனால் அரசுகள் நிவாரணம், மறுவாழ்வுக்காக பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. மறுபுறமோ பிளாஸ்டிக் கழிவுகளும் நாளுக்கு நாள் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறி வருகின்றன. இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வை வழங்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.

புவனேசுவரத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும், மணிப்பூர் தொழில்நுட்ப ஆராய்ச்சி, பயன்பாட்டு மையமும் இணைந்து அண்மையில் உருவாக்கியுள்ள புதிய தொழில்நுட்பம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்படும் சிறப்பு உறுதிப் பைகளில் மணல் அல்லது மண்ணை நிரப்பி ஆற்றங்கரைகளைப் பாதுகாக்கும் தடுப்பணைகள் அமைக்கலாம் என்றும், இதனால் பாரம்பரியமாக கல், கான்கிரீட்டால் அமைக்கப்படும் தடுப்பணைகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறை குறைந்த செலவில், விரைவாகச் செயல்படுத்தக் கூடியதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தடுப்பணைகளைச் சுற்றி இயற்கையாகச் செடிகள் வளர்வதால் மண் அரிப்பையும் கட்டுப்படுத்த உதவும்.

இந்த முயற்சியின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், பிளாஸ்டிக்கை வெறும் கழிவாக அல்லாமல் பயனுள்ள வளமாகக் காணும் புதிய சிந்தனையை உருவாக்குவதுதான். நாட்டில் ஆண்டுதோறும் பல லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் கணிசமான பகுதி மறுசுழற்சிக்குச் செல்லாமல் ஆறுகள், கால்வாய்கள், திறந்தவெளிகளில் தேங்கி சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவற்றை அறிவியல் முறையில் மறுசுழற்சி செய்து தடுப்பணைகள், பிற பொதுக் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்த முடிந்தால், இரட்டை நன்மைகள் கிடைக்கும். ஒருபுறம் பிளாஸ்டிக் மாசுபாடு குறையும். மறுபுறம் வெள்ளம், ஆற்றங்கரை அரிப்பைத் தடுக்க மலிவான, நீடித்த கட்டுமானப் பொருள் கிடைக்கும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் ஒரே நேரத்தில் உதவும்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கனமழை, வெள்ளப் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, பேரிடர் ஏற்பட்டவுடன் நிவாரணம் வழங்குவது மட்டுமே போதுமானதல்ல. பேரிடர் ஏற்படும் முன்பே அதன் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறைந்த செலவில் அமைக்கக்கூடிய, நீடித்த தடுப்பணைகள் இந்த நோக்கில் முக்கிய பங்காற்றக்கூடும். இத்தகைய தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால், ஆற்றங்கரையோர மக்களின் உயிரும் வாழ்வாதாரமும் சிறப்பாகப் பாதுகாக்கப்படும்.

கழிவிலிருந்து வளம்

உலகின் பல நாடுகள் இன்று "கழிவிலிருந்து வளம்' என்ற அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றன. சாலைகள் அமைப்பது முதல் கட்டுமானப் பணிகள் வரை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவும் இந்தத் துறையில் மேலும் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டிய சுமையாகக் கருதாமல், பொருளாதார மதிப்பு கொண்ட வளமாக மாற்றினால், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மைச் செலவுகளையும் குறைக்க முடியும்.

அதே நேரத்தில், மறுசுழற்சி சார்ந்த தொழில்கள் வளர்ந்து புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, பேரிடர் தடுப்பு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் இணைக்கும் இத்தகைய புதுமைகள், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி மாதிரியாக அமையக்கூடியவையாகும். எனவே, ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசின் தொடர்ச்சியான ஆதரவும், தொழில்துறையின் முதலீடும், மக்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது மிகவும் அவசியமாகும்.

விஞ்ஞான நிறுவனங்கள், தொழில்துறை, அரசு இணைந்து செயல்பட்டால், மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க முடியும்.

இந்தியாவில் உருவான இந்தப் புதுமையான தொழில்நுட்பமானது நாட்டின் தேவைகளுக்கேற்ற அறிவியல் தீர்வுகளை ஆராய்ச்சி நிறுவனங்களே உருவாக்க முடியும் என்பதையும் நிரூபிக்கிறது. ஆய்வகங்களில் உருவாகும் கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவாகச் சோதித்து, ஆண்டுதோறும் வெள்ளம், ஆற்றங்கரை அரிப்பு ஏற்படும் மாநிலங்களில் முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனித்தனியாகச் சேகரித்தல், மறுசுழற்சி செய்தல், கழிவு மேலாண்மை அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் இந்த முயற்சி முழுமையான வெற்றியைப் பெறும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பேரிடர் மேலாண்மையும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுகின்றன. அறிவியல் அடிப்படையிலான, குறைந்த செலவிலான, இயற்கைக்கு உகந்த தீர்வுகளே நாளைய தேவையாகும். பிளாஸ்டிக் கழிவுகளை வெள்ளப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் இந்த முயற்சியானது ஒரு பிரச்னையையே மற்றொரு பிரச்சினைக்கான தீர்வாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது.

பிளாஸ்டிக்கைச் சுமையாக அல்லாது வளமாகக் காணும் மனப்போக்கு பரவினால், அது நிலையான வளர்ச்சிக்கான புதிய பாதையைத் திறக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.