மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார்.
அதன்படி, அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டுப் பயணங்களையும் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது நாட்டின் பொருளாதார நலன் கருதி விடுக்கப்பட்ட வேண்டுகோள் என்றாலும், மக்களிடமும், தங்க நகை வணிகத் துறையினரிடமும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதன் சாதக, பாதகங்கள் குறித்து சிலரிடம் பேசினோம்.
ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் சோமசுந்தரம் - கல்யாணி தம்பதியர்
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே சரிவில் உள்ளது. ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போரால் கச்சா எண்ணெய் கடும் விலையேற்றத்தைக் கண்டிருக்கிறது. இவற்றின் தாக்கம், இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையாகவே உள்ளது. நாட்டில் அபரிமிதமான தங்க இறக்குமதியால் அந்நியச் செலாவணி கையிருப்பு கரைகிறது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இதே போல விடுத்த வேண்டுகோள் மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு மக்கள் இணங்குவார்களா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் பி.சபரிநாத் (கோவை)
ஒரு நாடு தனது அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இந்தியா, பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதால், கணிசமாக அந்நியச் செலாவணி கரைகிறது. தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6% லிருந்து 15% ஆக உயர்த்தி இருப்பதை ஏற்கிறோம்.
தங்கமானது விலை உயர்ந்த உலோகம் மட்டுமல்ல: நம் பாரம்பரிய, கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த, ஒவ்வொரு குடும்பத்துடனும் இரண்டறக் கலந்துவிட்ட பொருளாகும்.
தேச நலனுக்கான பிரதமரின் வேண்டுகோள் மக்களிடமும், தங்க வியாபாரிகளிடமும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும், சிறு நகை வியாபாரிகள் முதல், பெரிய நிறுவன நகைக்கடைகள் வரை அனைவரையும் அடுத்த ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் கடுமையாகப் பாதிக்கும். தமிழ்நாட்டில் சுமார் இரண்டரை லட்சம் பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, புதிய நகைகள் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில், அந்நியச் செலாவணி பாதிப்பு இல்லை. நாங்களாகவே முன்வந்து, பெரிய அளவில் நகை விளம்பரங்களை செய்ய வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறோம்.
தங்க நகைச் சீட்டு திட்டத்தையும் ஊக்குவிக்கவில்லை. சூதாட்டத்துக்கு ஈடான இணையத்தில் தங்க முதலீடு, இ.டி.எஃப்., டிஜி கோல்டு போன்ற இணையவழி தங்க சேமிப்புகளை ஊக்குவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவர்களால், உண்மையான தங்கப் பயன்பாட்டாளர்கள் தங்கத்துக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
ரியா, வடபழனி
வீட்டில் உள்ள பெரியவர்கள் நான் வேலைக்குச் சேர்ந்தபோது, 'தங்கத்தின் விலை இவ்வளவு இருந்தது, பத்து சவரன் வாங்கியிருந்தால் இன்று நான் லட்சாதிபதியாகியிருப்பேன்' என்று சொல்வார்கள். இது ஒவ்வொரு தலைமுறையினரிடையேயும் நடைபெறுகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் சொன்னாலும், தங்கம் வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். தங்கம் சவரன் இன்று லட்சத்தில் விற்கிறது. கோடியில் விற்கும் நாளும் வரும்.
கல்பனா, பேரணாம்பட்டு
தங்கம் இன்று சவரன் 1.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஏழைகளோ நடுத்தர மக்களோ வாங்குவதற்கு கடினமான சூழல் உள்ளது. இதுதவிர, இவ்வளவு பெரிய பணத்தை ஆடம்பரப் பொருளாக வைத்திருக்கும் சூழலில், சாமானியர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். பிரதமரின் கருத்தை வரவேற்கலாம். அரசு ஊழியர்கள், செல்வந்தர்கள் வேண்டுமானால் தங்கத்தை வாங்கலாம்.
பத்மபிரியா கார்த்திக், ஆரணி
நிலத்திலோ, பங்குச் சந்தையிலோ முதலீடு செய்தால், உடனடியாக லாபத்தில் பணம் பெற முடியாது. ஆனால், தங்கமாக வைத்திருந்தால், நகைக் கடையில் விற்றாலோ, அடமானம் வைத்தோ உடனே பணம் பெறமுடியும் என்பதால்தான் நகைகளை வாங்குகின்றனர். தற்போது உலகமே நெருக்கடியான சூழலில் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், தங்க இறக்குமதியாலும் அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஓராண்டுக்குப் பொறுத்திருப்பதில் தவறில்லை. பிரதமர் கருத்தை வரவேற்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.73! 63 காசுகள் உயர்வு!
புயலடிக்கப் போகிறது...

எரிபொருள் விலை எதிரொலி: எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் பங்குகள் சரிவு!

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


