பசுமைக்காடுகளில் மீண்டும் இயல்பு வாழ்க்கை
மாவோவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட மாவோயிஸ்ட் குழுக்கள், இந்தியாவில் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கை 1980-90-ஆம் ஆண்டுகளில் தொடங்கின.

மாவோவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட மாவோயிஸ்ட் குழுக்கள், இந்தியாவில் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கை 1980-90-ஆம் ஆண்டுகளில் தொடங்கின. நேபாளம் முதல் ஆந்திரம் வரை 'ரெட் காரிடார்' அல்லது 'சிவப்பு வழித்தடம்' என இலக்கு நிர்ணயித்து போராட்டங்களைத் தொடங்கினர். இதற்கு 'பசுபதி முதல் திருப்பதி' என்கிற சொற்றொடரை மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்தினர். திருப்பதியை நாம் அறிவோம். பசுபதிநாத் நேபாளம், காத்மாண்டுவில் உள்ள கோயில்.
ஆந்திர மாநிலத்தில் மக்கள் போர்க் குழு (பி.டபிள்யு.ஜி)., வடக்கே மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்.சி.சி.) அல்லது சி.பி.ஐ. மாவோயிஸ்ட். இப்படிப் பல பெயர்களில் இந்தக் குழுக்கள் செயல்பட்டன. போராட்டத்தின் உச்சத்தில் 2001 -ஆம் ஆண்டு எல்லாப் பிரிவுகளும் இணைந்து 'சி.பி.ஐ. மாவோயிஸ்ட் கார்டெல்' என்கிற அமைப்பை உருவாக்கி, தாக்குதல்களை நடத்தினர்.
போராளிகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறினர். பல மாநிலங்களில் பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவும் திருப்பதியில் ஒருமுறை கன்னிவெடித் தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். மாவோயிஸ்ட் குழுவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று சத்தீஸ்கர் மாநிலம். இங்கு பஸ்தர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் போராட்டக் குழுக்களின் தாக்குதலில் இருந்து மீண்டுள்ளது.
ஐம்பது சதவீதம் பகுதிகளை பசுமைக் காடுகளாக வைத்திருக்கும் சத்தீஸ்கர் மாநிலம், கனிம வளம் நிறைந்தது. பரப்பளவில் தமிழகத்தைவிட 5,134 ச.கி.மீ. அதிகம் கொண்டது சத்தீஸ்கர். ஆனால், தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவு-3.2 கோடி பேர். மாநிலம் 44 சதவீதம் வனங்களைக் கொண்டது. பஸ்தர் பகுதியின் 60 சதவீதம் அடர்ந்த காடுகள். புராணங்களில் கூறப்படும் கெளசல் ராஜ்ஜியத்தோடு தொடர்புடைய 'தட்சிண கெளஷல்' என்கிற அடையாளம் இந்தப் பகுதிக்கு உண்டு. அதாவது ஸ்ரீராமரின் தாய் வீடு, அவர் வனவாசம் செய்த பகுதி.
பசுமை மிகுந்த இந்தப் பகுதியின் அமைதியான சூழலையும் காலநிலையையும் வரையறுக்கும் அடர்ந்த சால் காடுகள், தேக்கு மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், ஆறுகள், நீர் ஊற்றுகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கையோடு வாழும் பகுதி இது. கரியமில வாயுவைக் கக்கும் நிறுவனங்கள் இல்லை.
சத்தீஸ்கர் மாநிலம் 7 மாநிலங்களின் நடுவே உள்ளது. இதில் ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸô, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் என 5 மாநிலங்களைச் சந்திக்கும் ஒரு சந்திப்புப் பகுதியான பஸ்தரில் உள்ள அடர்ந்த காடுகள் மாவோயிஸ்ட்டுகளுக்கு வசதியாக இருந்தது.
ஆந்திர மாநில அரசு கொடுத்த நெருக்கடியால், ஆந்திராவைச் சேர்ந்த பி.டபிள்யு.ஜி குழுவினர் இங்கே நுழைந்தனர். பழங்குடியினரின் மொழி கலாசாரத்தைப் புரிந்துகொண்டு நம்பிக்கையைப் பெற்று மாவோ சித்தாந்தச் செயல்பாடுகளைத் தொடங்கினர். அடுத்து சத்தீஸ்கரின் வடபகுதியில் ஜார்க்கண்டிலிருந்து எம்.சி.சி. பிரிவும் இணைந்தது. இப்படி
1980-களின் பிற்பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் தொடங்கியது.
இந்த வனப் பகுதிகளில் பழங்குடியினருக்கு மஹூவா வாழ்வாதாரமாக இருந்தது. இது (இலுப்ப மரம்) உள்ளூர் பழம். சர்க்கரைக்குப் பதிலாகவும் பயன்படும். லட்டு, பழச்சாறும் தயாரிக்க முடியும். கொதிக்க வைத்து மதுபானமும் தயாரிக்கப்படுகிறது.
அடுத்து பஸ்தர் புளி பிரசித்திப் பெற்றவை. மூன்றாவது வகை டெண்டு இலைகள். இவை பீடி சுருட்டப் பயன்படுபவை. ஆனால், பீடி இலைகளை (டெண்டு பத்தா) ஒப்பந்ததாரர்கள் மூலம் அரசு ஏலம் விட்டது. இதைச் சேகரிக்க பல கூட்டுறவுச் சங்கங்கள் இருந்தன. இந்த வனப் பொருள்கள் மீது பழங்குடியின மக்களுக்கு உரிமையில்லை. பிரச்னை இதில் தொடங்கியது. இதை மாவோயிஸ்ட்டுகள் தங்களுக்குச் சாதகமாக்கி, பழங்குடியினத்தவரை தங்கள் பக்கம் இழுத்தனர். 'சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்)' அமைப்பின் ராணுவப் பிரிவான 'பி.எல்.ஜி.ஏ' மூலம் இந்தத் தொலை
தூரக் காடுகளை ஆயுதமேந்திய வலுவான தளங்களாக மாற்றியது. இவர்கள் 'ஜனதா சர்க்கார்' எனப்படும் புரட்சிகர மன்றங்களைக் கொண்டு வந்தனர். இதைக் கொண்டு உள்ளூர் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் போலீஸூக்குத் தகவல் அளிப்பவர்களுக்கு எதிராக 'ஜன் அதாலத்' (மக்கள் நீதிமன்றம்) மூலம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்பாவி கிராமவாசிகளும்கூட கொன்றுக் குவிக்கப்பட்டனர்.
சாலைகள், பாலங்கள், கைப்பேசிக் கோபுரங்கள் ஆகியவைகளைத் தகர்த்தனர். ஆசிரமங்கள், விடுதிகள், பள்ளிகள் ஆகியவற்றையும் தகர்த்தனர்.
'பஞ்ச தந்திர' வியூகம்
அந்த மோசமான சூழலை மாற்றி, மக்களின் நம்பிக்கையை பெற மத்திய அரசு பெரும் அக்கறை காட்டியது. மாவோயிஸ்ட்டுகளின் வீழ்ச்சிக்கு மத்திய- மாநில அரசுகள் இணைந்து அறிவித்த 'செயல்பாடு, வளர்ச்சி, இணைப்பு, மக்களைச் சென்றடைதல், நீதி' என்கிற 'பஞ்சதந்திர' ஐம்முனை வியூகம் இறுதித் தீர்வுக்குக் கைகொடுத்தது.
முக்கிய ஆபரேஷன்களில் பசவ் ராஜு போன்ற மூத்தத் தலைவர்கள் கொல்லப்பட, மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டது. மத்திய -மாநில அரசுகள் 2026 மார்ச் 31- ஆம் தேதி இறுதிக் காலக்கெடு விதித்தன. இதன்படி நிகழாண்டு மார்ச் 11-ஆம் தேதி 108 மாவோயிஸ்ட்டுகள், 101 துப்பாக்கிகள், ரூ.3.61 கோடி பணத்துடன் சரணடைந்தனர். தொடர் எச்சரிக்கை மூலம் இயக்கங்களில் எஞ்சியிருந்த கடைசி மூத்தத் தலைவரான பாப்பா ராவ் உள்ளிட்டவர்கள் தனது குழுவுடன் ரூ.12 லட்சம் ரொக்கம், 18 இயந்திரத் துப்பாக்கிகளுடன் கடந்த மார்ச் 25 ஆம் தேதி சரணடைந்தனர். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பாதுகாப்புப் படையின் முகாம்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகளும் நிர்வாகத்தோடும், காவல் துறையோடும் மக்களுக்குள்ள இடைவெளியை குறைத்து நம்பிக்கை ஏற்படுத்தியது.
வளர்ச்சி - முன்முயற்சியான பிராந்திய வளர்ச்சியாக சேவா மையங்கள், பள்ளிகள் மீண்டும் திறத்தல், மின்சாரம், சுகாதாரங்களில் விரிவாக்கம் ஆகியவை நடைபெற்றன. இணைப்பு - பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான நடவடிக்கைகளால் உள்கட்டமைப்பு அதிகரித்தது. உள்ளூர் உள்கட்டமைப்பின் மேம்பாடு காரணமாக 1,300 கி.மீ. தூரத்துக்கும் மேற்பட்ட நீளமுள்ள முக்கியச் சாலைகள் கட்டமைக்கப்பட்டது. பிரதான இந்திராவதி பாலங்கள், 502 தொலைத்
தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இப்போது கைப்பேசி சேவைகள் கிடைக்கின்றன. கைப்பேசி கோபுரங்கள், ஏராளமான சாலைகள் அமைக்கப்பட்டன.
மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்கி, நம்பிக்கையின்மை தீர்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டெண்டுபத்தா (பீடி) சேகரிப்பில் ஆரம்பக் கட்டத்தில் ஒப்பந்ததாரர்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை அரசு எடுத்தது. அரசே நேரடியாக டெண்டுபத்தாவைச் சேகரிக்கிறது. இதற்கான பணம் அரசால் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படுகிறது; சேகரிக்கப்பட்ட இலைகள் பின்னர் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.
அரசின் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் ஆள்சேர்ப்பு, பழங்குடியினர் பாதுகாப்பு போன்றவைகளால் சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வுக் கொள்கை மிகவும் பலனடைந்தது. மாவட்ட மறுவாழ்வு மையங்கள் மூலம் தொழில் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.பல்வேறு மறுவாழ்வுகளால் மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர். நிலைமை மாறியது. சத்தீஸ்கரில் இப்போது மீண்டும் அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

