கண்ட சுத்தியும் கவிவீரராகவரும்!

கவிஞர்களில் சிலர், தங்கள் கவிதைகளால் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் மிக்கவர்கள் என்றும், சொன்னது பலிக்கும் வாக்குப் பலிதம் உடையவர்கள் என்றும், ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். புலவர்கள், கவிஞர்களின் ஆற்
கண்ட சுத்தியும் கவிவீரராகவரும்!

கவிஞர்களில் சிலர், தங்கள் கவிதைகளால் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் மிக்கவர்கள் என்றும், சொன்னது பலிக்கும் வாக்குப் பலிதம் உடையவர்கள் என்றும், ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். புலவர்கள், கவிஞர்களின் ஆற்றல்களில் ஒன்று "கண்டசுத்தி'.

 ÷கண்டசுத்தி என்பது, ஒருவர் மனதில் எண்ணியதை, மற்றவர் தம் மனதால் கண்டுணர்ந்துப் பாடுவதாகும். "கண்ட சுத்தி' என்பதை, "கண்ட சித்தி' என்றும் கூறுவர். தனிப்பாடல் திரட்டு, அபிதான சிந்தாமணி முதலியவற்றில் இதுபற்றி அறியமுடிகிறது.

 ÷அபிதான சிந்தாமணியில், (அந்தகக்) கவி வீரராகவ முதலியார், கண்ட சுத்தி பாடுவதில் வல்லவர் என்றும், ஈழ நாட்டில் பாடி, தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றார் என்றும் குறிப்பு உள்ளது. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவராக இருந்தும், இறையருளால் கவிபாடும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தவர் அவர். கண்பார்வையற்ற கவிஞர் என்பதைக் குறிப்பால் உணர்த்த, "அந்தகக் கவி' (அந்தகன்-கண்ணில்லாதவன்) என்றனர். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம், திருவாரூர் உலா முதலிய நூல்களைப் பாடியுள்ளார். சீட்டுக் கவி பாடுவதிலும், நகைச்சுவையோடு கவிதை புனைவதிலும் வல்லவர். ""ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பெரும் புலவர் அவர்.

 ÷அவர் பாடிப் பரிசுபெறும் பொருட்டு ஈழ நாட்டுக்கு ஒருமுறை சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னன் ஒருநாள், சோலை சென்று உலாவியபோது கிளிகள் சில, ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து வெளியே வருவதும், பறந்து செல்லாமல் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாக இருப்பதைக்கண்டு காரணம் புரியாமல் மயங்கினான். கண்ட சுத்தியால், தன் மனதில் உள்ளதைப் புலப்படுத்துமாறு தன் அவைக்களப் புலவர்களிடம் கூறினான். அரசன் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுணர்ந்து பாடமுடியாத அவைக்களப் புலவர்கள், கண்டசுத்தி பாடுவதில் கவி வீரராகவ முதலியார் வல்லவர் என்று கூறி, அவரை மன்னனிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற கவி வீரராகவர், ""வடவைக் கனலை'' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அதில்,

 ""அடவிக் கதலிப் பசுங்குருத்தை

 நஞ்சுக் குழல்என்று அஞ்சியஞ்சி÷

 அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்டு

 அகலா நிற்கும் அகளங்கா!''

 என்ற வரிகளால், அரசன் மனதிலுள்ள சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினார்.

 ÷கிளிகள் மரத்தில் கூடுகட்டி வாழ்கின்றன. அம் மரத்தின் அருகே வாழை மரம் ஒன்று உள்ளது. அவ் வாழை மரத்தின் பசுங்குருத்து, கிளிகள் இருந்த கூட்டின் பக்கத்தே அசைந்து கொண்டு இருந்தது. கூட்டில் இருந்த கிளிகளுக்கு, அப் பசுங்குருத்து பாம்பாகத் தெரிந்தது. அதனால் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், அஞ்சிக் கூட்டுக்குள் சென்றன. பாம்பு போயிருக்கும் என்று நினைத்து, மீண்டும் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், மறுபடியும் பசுங் குருத்தைப் பாம்பாக நினைத்து மயங்கி, அது (பாம்பு) போகவில்லை என்று எண்ணி மீண்டும் கூட்டுக்குள் சென்றன. அப்பாடலுக்கான பொருள் இதுதான். கவி வீரராகவரின் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்த மன்னன் ஏராளமான பரிசுகளைக் கவிஞருக்கு வழங்கி கெüரவப்படுத்தினான். இதனால் கவி வீரராகவரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

 ÷ஈழத்து அரசன் பரராசசிங்கம், பரராசசிங்கத்தின் துணைவியார், கச்சியப்பர், கயத்தாற்று மன்னன் முதலியோர் கவி வீரராகவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்களின் பாடல்களைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம். ""கவி வீரராகவன் பாடிய நற் கவியே கவி'' என்ற பரராசசிங்கத்தின் பாராட்டும், ""போத வழகன் கவி வீரராகவன் போற்றுகவி ஓதையைக் கேட்டுக் கொண்டாடாத பேரில்லை'' என்ற பரராசசிங்கத்தின் துணைவியார் புகழுரையும் என்றும் நினைவுகூரத்தக்கவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com