புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சொல் வேட்டை- 40

Fast food  என்ற சொல் முதன்முதலில் மொழியியல் அங்கீகாரம் பெற்று, 1951-இல் தான் மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலியில் அரங்கேற்றப்பட்டது என்றாலும், இவ்வகை உணவின் வரலாறு 1802-இல் தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson)  பாரிசின் சிறப்பு உணவான ஃப்ரென்ச் ஃப்ரையை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்திய நாள் முதலே தொடங்கிற்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2013, 8:54 pm

வெ. இராமசுப்பிரமணியன்

Fast food  என்ற சொல் முதன்முதலில் மொழியியல் அங்கீகாரம் பெற்று, 1951-இல் தான் மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலியில் அரங்கேற்றப்பட்டது என்றாலும், இவ்வகை உணவின் வரலாறு 1802-இல் தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson)  பாரிசின் சிறப்பு உணவான ஃப்ரென்ச் ஃப்ரையை அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்திய நாள் முதலே தொடங்கிற்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (மேலை நாடுகளில் இவற்றுக்கெல்லாம் கூட ஆராய்ச்சியாளர்கள் உண்டு). இதில் இன்னொரு சுவையான செய்தி என்னவென்றால், இவ்வகை உணவில் தலையானதாகக் கருதப்படும் ஹம்பர்கர் Hamburger தோன்றிய இடம் வேறு; அறிமுகப்படுத்தப்பட்ட இடம் வேறு; பிரபலமான இடம் வேறு. ஹம்பர்கர் ரஷ்யாவின் பழமையான உணவாகும். ரஷ்யாவில் பால்டிக் துறைமுகங்களுக்குப் பயணம் செய்த ஜெர்மானிய மாலுமிகள் ஹம்பர்கர்-ஐ தங்கள் ஜெர்மானிய நகரான ஹம்பர்க்-இல் அறிமுகப்படுத்தியதும், அவ்வுணவு ஹம்பர்க் நகரின் பெயரையே தனதாக்கிக்கொண்டது. அதன் பிறகு, இந்த ஜெர்மானிய மாலுமிகள் அமெரிக்காவில் போய், சின்சினாட்டி (Cincinatti) நகரில் குடியேறியபோது, அங்கு இவ்வுணவு அறிமுகப்படுத்தப்பட்டு அமெரிக்காவிலிருந்து கிளம்பி, அகில உலகை ஆக்கிரமித்தது.

தொழிற்புரட்சியும், நகர வாழ்க்கையும் மையமாக்கப்பட்ட காலகட்டத்தில் வீடுகளில் அன்றாடம் சமைக்கும் பழக்கம் விடைபெறத் தொடங்கியபோது, நடமாடும் உணவகங்கள் பெருமளவில் உருவாகின. 1916-இல் அமெரிக்காவில் வால்ட்டர் அன்டர்ஸன் (walter Anderson) முதன் முதலாக வொயிட் காசில் (White Castle) என்னும் இவ்வகை உணவகத்தை தொடங்கினார். அதன் நோக்கம், குறைந்த செலவில் அதிக அளவில், மிக விரைவில் ஹம்பர்கர் தயாரித்து விற்பதாகும். அதன் பிறகு மெக் டொனால்ட் ((Mc Donald), பர்கர் கிங் (Burger king), சப்வே (Subway), டாகோபெல் (Taco bell)), கே.எப்.சி (KFC) முதலிய உணவகங்கள் பெருமளவில் உருவாயின. இவற்றில் மெக் டொனால்ட் இன்று, 6 கண்டங்களில் 126 நாடுகளில், 31,000 உணவகங்களை நடத்துகிறது. சென்ற வாரம் இவ்வகை உணவகங்கள் தரும் கூலி மிகக் குறைவு என்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அமெரிக்காவின் 6 நகரங்களில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். இச்சுவையான தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

கோ.மன்றவாணன் இச்சொல்லுக்கு விரைவு உணவு, உடனுணவு, உடனடி உணவு, உடன் சமைப்புணவு, துரித உணவு ஆகிய சொற்களையும், மான்விழி, துரித உணவு, சூடான துரித உணவு ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கின்றனர்.

டி.வி.கிருஷ்ணசாமி, தி.அன்பழகன், சோலை. கருப்பையா, நா.முத்தையா ஆகியோர் "துரித உணவு' என்ற சொல்லையும், மு.தனகோபாலன் உடனடி உணவு என்றும், செ.சத்தியசீலன் விரைவுணவு, உடனடி உணவு, ஆயத்த உணவு என்றும், என்.ஆர்.சத்தியமூர்த்தி விரைவு உணவு என்றும் கூறியுள்ளனர்.

ஹரணி, "ஃபாஸ்ட் ஃபுட்' என்ற சொல்லுக்கு "துரித உணவு' என்ற சொல் ஏற்கெனவே பயனாக்கத்தில் உள்ளது என்றும், அதன் பயன்பாடு கருதி, தூய தமிழ்ச் சொல்லாக அவசர உணவு, விரைவுணவு, வேக உணவு, உடனடி உணவு, சாலையோர சிற்றுண்டி முதலிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

பா.ஜம்புலிங்கம் துரித உணவு, துரித சூடான உணவு, விரைவுணவு, உடனடி உணவு முதலிய சொற்களை எழுதியுள்ளார்.

இரா.தீத்தாரப்பன், "கதும்' என்ற சொல்லுக்கு "விரைவான' என்ற பொருள் உண்டு என்றும், அதற்கு, "கதுமெனத் தாம் நோக்கி'' (குறள்-1173) என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, "கதும் உணவு' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

பெரும்பாலான வாசகர்கர்கள் துரித உணவு, உடனடி உணவு, விரைவு உணவு ஆகிய சொற்களைக் கூறியுள்ளனர். இவற்றுள் துரித உணவு என்ற சொல் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், துரிதம் என்பது வடமொழிச் சொல். அதேபோல், உடனடி உணவு என்ற சொல்லும் பொருந்தாது. காரணம், இன்று பல வகை உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் (fast food), ஜங்க் ஃபுட் (junk food), இன்ஸ்டன்ட் ஃபுட் (Instant food) மற்றும் ஸ்ட்ரீட் ஃபுட் (Street food) என்றெல்லாம் தோன்றிவிட்டன. இவற்றில் ரெடிமேடாகத் (Readymade) தயார் செய்யும் வகையில் தரப்படும் நூடுல்ஸ் (Noodles) போன்றவை இன்ஸ்டன்ட் ஃபுட் வகையைச் சார்ந்தவை. இந்த இன்ஸ்டன்ட் ஃபுட் தான் உடனடி உணவாகும். எனவே, ஃபாஸ்ட் ஃபுட் என்ற சொல்லுக்கு மிகச் சரியான தமிழ்ச் சொல் "விரைவுணவு' ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.