புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சொல் வேட்டை- 38

1912-ஆம் ஆண்டில், வியன்னாவின் பொருளாதார மேதை டாக்டர் வால்டர் ஸ்டீன் (Dr.Walter Stein) பழைய புத்தகக் கடை ஒன்றில் பார்சிபல் (parsifal) என்ற புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதைப் புரட்டினார்.

News image
Updated On :27 ஜூலை 2013, 8:57 pm

வெ. இராமசுப்பிரமணியன்

1912-ஆம் ஆண்டில், வியன்னாவின் பொருளாதார மேதை டாக்டர் வால்டர் ஸ்டீன் (Dr.Walter Stein) பழைய புத்தகக் கடை ஒன்றில் பார்சிபல் (parsifal) என்ற புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதைப் புரட்டினார். அந்நூல் இயேசுநாதர், கடைசி விருந்தின்போது திராட்சை ரசம் அருந்துவதற்குப் பயன்படுத்திய திருக்கலம் அல்லது வட்டில் (Holy Grail)) பற்றிய நூலாகும். அந்நூலில் எழுதப்பட்டிருந்தவைகளைவிட, அந்நூலை ஏற்கெனவே படித்த யாரோ ஒருவர் அதில் போட்டிருந்த கோடுகளையும், பென்சிலால் எழுதியிருந்த குறிப்புகளையும் பார்த்துவிட்டு வால்டர் ஸ்டீன் அசந்து போனார். உடனே, அந்நூலை விற்றவரின் பெயரையும், முகவரியையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்நபரைச் சந்தித்தார். மாயாஜாலங்களைப் பற்றியும், மறைச்சக்தியைப் பற்றியும், ஆழ்ந்த நுண்ணறிவும், தீவிரமான (மூட) நம்பிக்கையும் கொண்டிருந்த அந்நபர் வேறு யாருமல்லர்; ஆறு லட்சம் யூதர்களைக் கொன்று குவித்து, இரண்டாம் உலகப்போரில் மனிதகுலத்திற்குப் பேரழிவை ஏற்படுத்திய அடால்ஃப் ஹிட்லர்தான் அவர். ஹிட்லரின் அதே நம்பிக்கைகளைக் கொண்டே, அவரை வீழ்த்தும் வகையில், இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலகப்போரில் வியூகம் அமைத்தார். அப்படி வியூகம் அமைப்பதற்கு ஆலோசனை வழங்கியவர்களுள் ஒருவர் மேற்கூறிய டாக்டர் வால்டர் ஸ்டீன் ஆவார். ஹிட்லருக்கு மாயாஜால விஷயங்களில் இருந்த நம்பிக்கையைப் பற்றி வால்டர் ஸ்டீனுக்குத் தெரிந்த செய்திகள் இரண்டாம் உலகப்போரில், ஹிட்லருக்கு எதிராகப் பயன்பட்டன. இப்படி ஹிட்லருக்கு முன்னும், பின்னும், மனிதர்களுடைய நம்பிக்கை மாயாஜாலங்களின் மீதும், மந்திரதந்திரங்களின் மீதும் காலகாலமாகத் தொடர்கிறது. இவை அறிவியலுக்குத் தொடர்பற்றவை அல்லது அப்பாற்பட்டவை என்று கருதப்பட்டாலும், மொழியியல் இவற்றை அக்கல்ட் சயன்ஸ் என்றே அழைக்கிறது. இத்தகவல்களை நினைவில் நிறுத்தி, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

புலவர் செ.சத்தியசீலன், அக்கல்ட் என்ற சொல்லுக்கு, படகம், ஏவல், செய்வினை, மாயவித்தை எனவும், அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு மறைபொருள் ஆய்வு, படக ஆய்வு, புதுமை ஆய்வு, மாயவித்தை ஆய்வு எனவும் கூறியுள்ளார்.

டி.வி.கிருஷ்ணசாமி, அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு அபூர்வக் கல்வி அல்லது பிரமிக்க வைக்கும் கலை, மாயாஜாலம், மாயவித்தை போன்ற பொருள்களைக் கூறலாம் என்கிறார்.

ஹரணி, அக்கல்ட் என்ற சொல்லுக்கு, மறைபொருள், மாயவித்தை, சூன்யப்பொருள், இயல்பைக் கடந்தது, உணர்த்தமுடியாத அறிவு என்றும், அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு மாயக்கூற்று அறிவியல், மறைபொருள் விஞ்ஞானம், மந்திரதந்திர விஞ்ஞானம், அமானுஷ்ய அறிவியல், ஆன்ம அறிவு விஞ்ஞானம் போன்ற பொருள்களையும் இணையாகக் கூறலாம் என்கிறார்.

சோலை.கருப்பையா, அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு புலனறிவுக்கு உட்படா ஆய்வறிவியல், அரூப விந்தை ஆய்வறிவியல், மாயசூட்சும ஆய்வியல் ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்றைக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம் அக்கல்ட் என்ற சொல்லுக்கு மறைபொருள், தெரியாத, புரியாத, பார்வைக்குப் புலப்படாத, இயல்பான அறிவுக்கு அப்பால் மற்றும் சூன்யம் தொடர்பான ஆகிய சொற்களையும், அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு, மறைபொருள் அறிவியல், மறையியல் அறிவியல், சூன்யவியல் ஆகிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, அக்கல்ட் என்ற சொல்லுக்கு மாயமான, ஜாலமான, புதிரான, ரகசியமான, மறைந்திருக்கிற, புரியாத, இயல்புக்கப்பால், விந்தையான, உள்ளுறை முதலிய பொருள்களையும், அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு மறைஞானம், உள்ளுறைஞானம், புதிர்ஞானம் என்னும் சொற்களையும் எழுதியுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், அக்கல்ட் என்ற சொல்லுக்கு மாயை, கண்கட்டுவித்தை, மாயவித்தை, மந்திரதந்திரம், மாந்திரீகம், செப்படி வித்தை, மூடுமந்திரம், படகம் ஆகிய சொற்களையும், அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு மாயவியல், மாயமந்திர ஆய்வியல், உள்மறை அறிவியல், உள்ளுணர் அறிவியல், மறைபொருள் அறிவியல், படகவியல், மாயாவாதவியல், மந்திரவாதவியல், புதிராய்வு ஆகிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

மான்விழி, அக்கல்ட் என்ற சொல்லுக்கு ப்ளேக் மேஜிக், ப்ளேக் ஆர்ட்ஸ் என்னும் சொற்கள் கொடிய வித்தைகள், கருங்கலைகள் என்று அழைக்கப்படுவதாகவும், அக்கல்ட் என்ற சொல் சயன்ஸ் என்ற சொல்லோடு பயன்படுத்தப்படும்போது, மறைபொருள் அறிவியல், மறைகலை அறிவியல், கொடுவினை அறிவியல், மாயக்கலையியல், மறைபொருளியல், கருங்கலையியல், கொடுங்கலையியல், கொடுவினையியல், தீவினை அறிவியல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்.

நா.முத்தையா அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு "வியப்பூட்டும் மறைபொருள் சார்ந்த அறிவியல்' என்றும், "இரகசியமான மறைபொருள் கல்வி' என்று தெ.முருகசாமியும், அக்கல்ட் என்ற சொல்லுக்கு "வியத்தகு மறைபொருள்' என்று அ.கற்பூரபூபதியும் பரிந்துரைத்துள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் ச் சொற்களஞ்சியம், அக்கல்ட் என்ற சொல்லுக்கு மறைவாக வைக்கப்பட்ட, மறைவியலான, மறைபொருளான, சிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள, புரியாத, பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட, தெய்வீகமான, இயற்கைமீறிய நிகழ்ச்சிகளைக் கொண்ட, மாய மந்திரஞ் சார்ந்த, மறைத்து வை, தற்காலிகமாகப் பார்வைக்கு மறை, (வான) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை ஆகிய பொருள்களைத் தருகிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி, இச்சொல் செயப்படுபொருள் குன்றாவினைச் சொல்லாகும் போது (transitive verb) இதன் பொருள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட என்று கூறுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி, இச்சொல் பெயர்ச்சொல்லாக வரும்போது, அறிவுநிலை கடந்த அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது மாயவித்தை ஆகிய பொருள்களைத் தரும் என்று குறிப்பிடுகிறது.

எனவே, அக்கல்ட் என்ற சொல்லுக்கு மறைபொருள் என்ற சொல்லும், அக்கல்ட் சயன்ஸ் என்ற சொல்லுக்கு மாயக்கலையியல் என்ற சொல்லுமே பொருத்தமான இணைச்சொற்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.