புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சொல் வேட்டை- 44

ஒரு கூற்றின் செல்லத்தக்க தன்மையை, காரண-காரிய முறையில் ஆராயும் அறிவியலே "லாஜிக்' ஆகும்.

News image
Updated On :7 செப்டம்பர் 2013, 7:41 pm

வெ. இராமசுப்பிரமணியன்

ஒரு கூற்றின் செல்லத்தக்க தன்மையை, காரண-காரிய முறையில் ஆராயும் அறிவியலே "லாஜிக்' ஆகும். இந்திய மெய்யியலின் அடிப்படையாகக் கருதப்படும் நியாயம், வைசேசிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் ஆகிய 6 தரிசனங்களில், நியாயம், வைசேசிகம் இரண்டும் தர்க்க சாத்திரத்தின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மாக்ஸ் முல்லர் போன்றோர் கிரேக்க நாட்டில் அரிஸ்டாட்டில் போன்றோரால் பேசப்பட்ட தர்க்க சாத்திரத்திற்கும், இந்திய நாட்டில் நியாயம், வைசேசிகம் ஆகிய தரிசனங்களில் காணப்பட்டுள்ள அடிப்படைக் கூறுகளுக்கும் உள்ள ஒற்றுமையை வியந்து போற்றியுள்ளனர். கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே கெளதமரால் அன்விக்சிகி வகையிலான தர்க்க சாத்திரம் உருவாக்கப்பட்டது என்றும், அதன்பிறகு பெளத்தர்களும், சமணர்களும் மிகப்பெரிய அளவில் தர்க்க சாத்திரத்தை வளர்த்தனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

தேவ நேயப் பாவாணர், தமிழ்த் தருக்க நூலையே "வடவர் வைசேடிகம்' என வகுத்தனர் என்று குறிப்பிடுகிறார். மேலும், தர்க்க பரிபாஷை என்ற நூலிற் காட்டப்பட்டுள்ள அகத்தியத் தருக்க நூற்பாக்களைக் காட்டி, தமிழ்த் தருக்க நூல் எழுபொருட் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும் பாவாணர் குறிப்பிடுகிறார். இச்செய்திகளோடு, இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

கோ.தமிழரசன், "லாஜிக்' என்ற சொல்லுக்கு கருத்துப்போட்டி, கருத்துப்போர், கருத்தாய்வு ஆகிய சொற்களையும், அ.கற்பூரபூபதி வாதப் பொருத்தம், பொருந்தும் வாதம் ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கின்றனர். சுப.தனுஷ்கோடி, "மெய்கண்டாரின் சிவஞான போதமும், அதனை அடியொற்றி சிவஞான சித்தியார் முதலான நூல்களில் "தர்க்கம்' என்ற சொல்லுக்கு "அளவையியல்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அருணந்தி தேவரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியாரில் சுபக்கம், பரபக்கம் ஆகிய இரு பகுதிகளில், "சுபக்கம்' என்ற பகுதியின் தொடக்கமே "அளவையிலக்கணம்' என்ற முதல் இயலுடன் அமைந்துள்ளது. 1977-இல் தமிழ்வழியில் பட்டப்படிப்பைக் கற்பிக்கத் தொடங்கியபோது, தமிழக அரசு லாஜிக் என்ற சொல்லுக்கு "அளவையியல்' என்ற சொல்லையே பயன்படுத்தியது. இதன் காரணமாக இச்சொல்லுக்கு "அளவையியல்' என்ற சொல்லே பொருந்தும்' என்று எழுதியுள்ளார்.

சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரிய தமிழ் ஆர்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியீடான ஆட்சிச் சொற்கள் அகர முதலியில், ஏரணம், தக்க இயல், கரணிய இயல் ஆகிய பொருள்களும், தமிழறிஞர் ப.அருளியாரின் அயற்சொல் அகரமுதலியில் "ஏரணம்' என்ற பொருள் தரப்பட்டுள்ளதாகவும், எனவே, தக்கம், கரணியம் என்னும் சொற்களும் பொருந்தும் என்கிறார்.

கோ.மன்றவாணன், ஏரணம், அளவை, அளவையியல், அறிவலசல், சரிநாட்டல், வாதுரை, சொற்போர், சீர்தூக்குரை, மெய்நோக்குரை முதலிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

பா.ஜம்புலிங்கம், அளவையியல், அளவை, வாதம் (அ) வாக்குவாதம், விவாதம், ஒரு பொருள் குறித்துப் பேசல், தொடர்பேச்சு என்றும், 1975-இல் புகுமுக வகுப்பில் லாஜிக் என்ற ஒரு தாளுக்கு அளவையியல் என்ற பொருள் தரப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரா.பொ.வீரையன் அளவை, அளவையியல் என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன் ஏரணம், அளவையியல் என்றும் கூறியுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், ஏரணம், அளவை நூல், தருக்க முறை, தருக்க முறை ஏடு, வாத முறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, வாதம், முறைமையாற்றல், மாறாநியதி, விலக்கமுடியாநிலை ஆகிய பொருள்களைத் தருகிறது.

"லாஜிக்' என்ற சொல்லுக்கு அளவை, அளவையியல், ஏரணம் முதலிய சொற்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் "அளவை' என்ற சொல் நாம் ஆராயத்தக்க சொல். கணிதத்தில் பயன்படுத்தப்படும்போது, எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, முகத்தல் அளவை மற்றும் நீட்டல் அளவை என்று நான்கு வகையாகக் கொள்ளப்படும் அதே சொல், மெய்யியலில் காண்டல் அளவை, கருதல் அளவை என்று அறிவைப் பெறுவதற்கான வாயில்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மெய்யியலில் வைசேடிகம், அறிவைப் பெறுவதற்கான வாயில்களாக perception மற்றும் inference ஆகிய இரண்டைக் குறிக்கிறது. இவை வடமொழியில் "ப்ரத்யக்ஷம்' மற்றும் "அனுமானம்' என்று அழைக்கப்படுகின்றன. அவை தமிழில் புலனுணர்வு (அல்லது கருதல் அளவை) என்றும், கருத்தளவை என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல், நியாய தரிசனம், அறிவைப் பெறுவதற்கான வாயில்களாக perception, inference, comparison மற்றும் verbal testimony  (வடமொழியில் ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம் மற்றும் சப்தம்) ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறது. மேலும், லாஜிக் என்பது மொழியிலக்கணம், கணிதம் ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாகக் கருதப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால், "அளவையியல்' என்ற சொல்லே மிகப் பொருத்தமாகும்.

எனவே, லாஜிக் என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமான இணைச்சொல் அளவையியல் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.