சொல் வேட்டை- 45

Updated on
2 min read

ஒருவரது செய்கை அல்லது செயலின்மையின் காரணமாக இன்னொருவருக்கு இழப்போ அல்லது தீங்கோ நேரிடின், அச்செயலோ, செயலின்மையோ "டார்ட்' என்றழைக்கப்படுகிறது. சுருங்கக்கூறின், இது ஓர் உரிமையியல் குற்றம் (Civil wrong) ஆகும். "டார்ட்' என்ற சொல் இலத்தீன் மொழியில் வளைந்த அல்லது கோணலான என்ற பொருள் கொண்ட டார்டம் (tortum) என்ற சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது. இச்சொல் நேரான என்ற பொருள் கொண்ட ரெக்டம் (rectum) என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் எதிர்மறைச் சொல்லாகும். நேரான, நேர்மையான பாதையிற் செல்லாமல், வளைந்த, கோணலான பாதைகளில் வாழ்க்கையைச் செலுத்துவோர், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கின்றனர் என்ற பொருளில் இச்சொல் ஆதியில் பயன்படுத்தப்பட்டது.

முதன்முதலில் "டார்ட்' என்பதன் தோற்றம் "அத்துமீறல்' (trespass) குற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. பின்னாளில், கவனக்குறைவு (negligence), அக்கறை கொள்ள வேண்டிய கடமையிலிருந்து (duty of care) தவறுதல் போன்றவற்றால் மற்றவர்க்கு விளையும் தீங்கிற்கும், இழப்பிற்கும் ஈடுகட்ட வேண்டிய பொறுப்பை நிர்ணயிக்கும் பிரிவாக "டார்ட்' என்னும் சட்ட வகைப் பிரிவு பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது.

சில சமயங்களில், இவ்வகைச் சட்டப்பிரிவின் கூறுகளை முழு மனதோடு ஏற்றுக்கொள்வது நம்மில் பலருக்கும் சற்றுக் கடினம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவைக் கலக்கிய கொலை வழக்காகிய ஓ.ஜே.சிம்சன் வழக்கைக் குறிப்பிடலாம். புகழ் பெற்ற அமெரிக்கக் கால்பந்தாட்டக்காரரும், நடிகருமான ஓ.ஜே.சிம்சன், 1994-இல் அவருடைய முன்னாள் மனைவியையும், அம்மனைவியின் நண்பரையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டார். 1995 அக்டோபர் 3-ஆம் நாள் ஜூரிக்கள் சிம்சன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பைத் தொலைக்காட்சிகளிலும், நேரிலும், தொலைபேசி மூலமாகவும் கேட்பதற்காகக் கிட்டத்தட்ட பத்து கோடி மக்கள் அன்று ஆர்வத்தில் துடித்தனர் என்றும், நியூயார்க் நகரப் பங்குச்சந்தையில் அந்த ஒரு நாளில் மட்டும் வணிகம் 41 சதவீதம் குறைந்தது என்றும், அமெரிக்க நாடே அந்தத் தீர்ப்பிற்காக ஒரு சில மணித்துளிகள் இயக்கமற்றுப் போனது என்றும் பத்திரிக்கைகள் தெரிவித்தன.

குற்றவியல் நீதிமன்றத்தால் ஓ.ஜே.சிம்சன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அவருடைய முன்னாள் மனைவியின் குடும்பத்தாரும், அம்மனைவியின் நண்பரின் குடும்பத்தாரும் சிம்சனின் மேல் இழப்பீடு கோரி, உரிமையியல் வழக்கைத் தொடுத்தார்கள். அந்த உரிமையியல் வழக்கில், 1997-ஆம் ஆண்டு சிம்சன் தான் அவருடைய மனைவி மற்றும் அம்மனைவியின் நண்பர் ஆகியோரின் இறப்பிற்குக் காரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டாலருக்கு மேலான தொகையை இழப்பீடாக சிம்சன் வழங்க வேண்டுமென்று உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே, ஒருவரது செய்கை குற்றவியல் சட்டக்கூறுகளால் தண்டிக்கப்படத்தக்க குற்றமாகாமல் போனாலும், அது ஓர் உரிமையியல் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டவியலே "டார்ட்' ஆகும். இதைக் கருத்திற்கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், தீங்கு, பொல்லாங்கு, கேடு, தீமை, பொல்லாங்குக் குற்றம், குறைகூறல் என்றும், ஹரணி, பொல்லாங்கு, அநியாயம், இழப்பீட்டுத் தீது என்றும், கோ.தமிழரசன், அநியாயச்செயல், பொல்லாங்குக் குற்றம், பழிக்குப்பழி என்றும், இரா.பொ. வீரையன், உரிமையியல் ஊறு, தீங்கு, தீமை ஆகிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

அ.கு.மான்விழி, தீங்கியல் இழப்பீடு, இழப்பீட்டுச்சட்டம், இழப்பீட்டு வழிகாட்டுச் சட்டம், தவறான தீமை, நோக்கமற்ற தீங்கு, இழப்பீடு ஏது ஆகியச் சொற்களைக் கூறியுள்ளார்.

கோ.மன்றவாணன், தீங்கு, தீங்கியல், தடையறு, பொல்லாங்கு, உரிமைத்தீங்கு ஆகிய  சொற்களையும், சட்டத் தமிழ் நூல்களில் நீண்டகாலமாகத் தீங்கு, தீங்கியல் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

பா.ஜம்புலிங்கம், கடமைமீறல், பொல்லாங்கிழைத்தல், தவறுசெய்தல், தீங்கிழைத்தல், குற்றப்பாங்கு, அநீதியில் ஈடுபடல் ஆகிய சொற்களைக் கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில், பொல்லாங்குக் குற்றம் என்ற பொருளும், சட்டப் பேராசிரியர் ஆ. சந்திரசேகரனின் சட்டச் சொற்களஞ்சியத்தில், தீங்கு, உரிமைத்தீங்கு ஆகிய பொருள்களும் தரப்பட்டுள்ளன.

"குற்றம்' என்ற சொல்லைப் பொதுவாகத் தண்டிக்கத்தக்க குற்றமாகவே நாம் உணர்ந்து கொள்கிறோம். அதேபோல், "பொல்லாங்கு' என்ற சொல்லும் புறங்கூறுதல் போன்ற பல்வேறு பொருள்களை உள்ளடக்கியது. "தீங்கியல்' என்ற சொல் சிறந்தாக இருப்பினும், அது ஓர் உரிமையியல் கடப்பாட்டை (civil liability) நேரடியாகக் குறிக்கவில்லை. எனவே, வீரையன் எழுதியுள்ள "உரிமையியல் ஊறு' என்பதே "டார்ட்' என்ற சொல்லின் இலக்கணமாகிய civil wrong என்பதைக் குறிப்பதாக அமைகிறது. எனவே, "டார்ட்' என்ற சொல்லுக்கான இணைச்சொல் "உரிமையியல் ஊறு'.

அடுத்த சொல் வேட்டை: ஈண்ஞ்ண்ற்ஹப் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com