பழமொழி - முதுமொழியா?

பழமொழி என்பது தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான ஒன்று. அதைத் தொல்காப்பியர் 'முதுமொழி' என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
பழமொழி - முதுமொழியா?

பழமொழி என்பது தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான ஒன்று. அதைத் தொல்காப்பியர் "முதுமொழி' என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அவ்வாறு புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. ""பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் எனும் ஏழும் மூவேந்தர் ஆளும் நாட்டகத்தே வழங்கும் நூல்களாகும்'' என்கிறார் தொல்காப்பியர் (தொல்.செய்.79).

மேற்குறித்த ஏழு செய்யுள்களில் உரை எனும் செய்யுள் வகையை 166-ஆவது நூற்பாவில் விளக்குகிறார். 80-ஆவது நூற்பா தொடங்கி 165-ஆவது நூற்பா வரை ஏழ்வகை இலக்கியத்தில் பாட்டு என்பதன் விளக்கத்தைக் கூறுகிறார். பின் 172 வரை நூலின் இலக்கணம் கூறுகிறார். அதன் பின்புதான் உரை பற்றி விளக்குகிறார். அதன் பின் முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி என்பனவற்றை விளக்குகிறார். ஆக, ஏழும் ஏழு செய்யுள் வடிவங்கள் என்று கொள்வதே பொருத்தமானதாகும்.

""நுண்மையும் சுருக்கமும் ஒளியு டைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப'' (தொல்.செய்.170)

எனும் தொல்காப்பிய நூற்பாவில் "ஏது நுதலிய முதுமொழி' என்கிறார். பழமொழி என்னும் வழக்காறும் ஏதேனும் ஒரு காரணம் பற்றியே வரக்கூடியது. இந்த ஓர் ஒப்புமையை வைத்துக்கொண்டு ஒரு முடிபுக்கு வருகின்றனர் பலர். அது சரியானதா என்பது கவனிக்கத்தக்கது. கூற்றுநிலையில் இருவரோ பலரோ பேசிக்கொள்ளும்போது இடையிடையே நடைபெறும் ஓர் உரையாடல்தான் முதுமொழி. அதுவும் தேவையான தருணத்தில் மட்டுமே சொல்லப்படும்.

முதுகுறை முதுமொழி எடுத்துக்காட்டி

(மணி.காதை.18,அடி.167)

முதுகுறை முதுமொழி கேட்டுவன் என்றே

(19,அடி.18)

முதுகுறை முதுமொழி எடுத்துக்காட்டி

(20,அடி.74)

என்று சீத்தலைசாத்தனார் சொல்வதுதான் முதுமொழிக்கான விளக்கம். முதுகுறை அதாவது முதுமை எய்திய பெண் ஒருவரால் நிகழ்த்தப்படும் உரை (பேச்சு) முதுமொழியாகும். இவ்வுரை ஒரு செய்யுள் வடிவத்தினைப் பெறும் தகுதியுடையது. இதனைக் கருத்தில் கொண்டே உரை செய்த இளம்பூரணர், "பழமொழி' என்று குறிப்பிட்டார். ஆனால், அது நாட்டார் வழக்காறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. தொல்காப்பியர் கருத்துப்படி அது ஒரு செய்யுள் இலக்கிய வடிவம் கொண்டது என்பது வெளிப்படை.

"பழமொழி நானூறு' என்னும் இலக்கியப் பாடுபொருளுக்கும் "முதுமொழிக்காஞ்சி' எனும் இலக்கியப் பாடுபொருளுக்குமான வேறுபாடு என்ன? முதுமொழிக்காஞ்சி சீத்தலைசாத்தனாரின் கருத்துக்கு உட்பட்டது. பழமொழி நானூறு நாட்டார் வழக்கியலின் பழமொழிக்குப் பொருந்துவது. தொல்காப்பியர் காலத்திலும் சாத்தனாரின் காலத்திலும் செய்யுள் வகையுள் ஒன்றாக இருந்த முதுமொழி, இடைக்கால உரையாசிரியர்களின் காலத்தில் உரை கூறும் முறையில் ஒன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டது. பிற்காலத்தில் நாட்டார் வழக்காற்றியல் வகையுள் ஒன்றாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. இம்மூன்று நிலைப் புரிதலில் இருந்து தொல்காப்பியர் கூற விழைந்த முதுமொழியை, சாத்தனாரின் பின்புலத்தில் இருந்து புரிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com