சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

சித்பவானந்தரின் தெய்வீகத் தமிழ்ப்பணி

தம் உண்மையான துறவு நெறியினாலும் அரிய கல்வித் தொண்டினாலும் தமிழுலகத்தின் ஞான வேள்வியில் புதியதொரு மறுமலர்ச்சியை மலரச் செய்த எழுஞாயிறு. தம் பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் மக்களின் அறியாமை இருளகற்றி, அறிவொளி பாய்ச்சிய அற்புதத் துறவி சுவாமி சித்பவானந்தர்.

News image
Updated On :16 நவம்பர் 2014, 1:45 am IST

தம் உண்மையான துறவு நெறியினாலும் அரிய கல்வித் தொண்டினாலும் தமிழுலகத்தின் ஞான வேள்வியில் புதியதொரு மறுமலர்ச்சியை மலரச் செய்த எழுஞாயிறு. தம் பேச்சாற்றலாலும் எழுத்தாற்றலாலும் மக்களின் அறியாமை இருளகற்றி, அறிவொளி பாய்ச்சிய அற்புதத் துறவி சுவாமி சித்பவானந்தர்.

பொள்ளாச்சி அருகில் உள்ள "செங்குட்டைப்பாளையம்'தான் இம் மகான் அவதரித்த புனித தலம். 11.3.1898-இல் பெரியண்ணன் - நஞ்சம்மையார் தம்பதியர்க்கு மகவாக அவதரித்தவர். இவரது இயற்பெயர் சின்னு.

மக்களை உய்விக்கும் பொருட்டு நல்லதங்காள், நந்தனார் முதலிய பக்தி நாடகங்களை மாணவப் பருவத்திலேயே நடத்திக் காட்டியவர்.

சாதுக்களோடும் அருளாளர்களோடும் நெருங்கிய உறவு பூண்டொழுகியதன் பயனால், இளம் பருவத்திலிருந்தே ஆன்மிக உணர்வு துளிர்விட்டது. "சுவாமி விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்' எனும் நூலைப் படித்தறிந்த பின்னர் தம்மை ஆன்மிகப் பணியில் அர்ப்பணிக்க விரும்பினார்.

1920-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். முன்னாள் கல்வி அமைச்சர் டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் இவருடைய ஒருசாலை மாணாக்கர். இருவரும் அடிக்கடி சென்னை மயிலை இராமகிருஷ்ண மடத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் காரணமாக சுவாமிஜி தம் கல்லூரிக் கல்வியைக் கைவிட்டார். அப்போது இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி பிரேமானந்தர் அம்மடத்தின் தலைவராக இருந்தார். அங்குதான் சின்னுவின் ஆன்மிகப் பணி தொடங்கியது. சுவாமியின் பேரன்பிற்குப் பாத்திரமானார்.

வடமொழி பயிலும் பொருட்டு கல்கத்தாவில் சிறப்புற்று விளங்கிய பேலூர் இராமகிருஷ்ண மடம் சென்று துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போதிலிருந்து "திரையம்பக சைதன்யர்' என்ற பெயருடன் அங்கே இருந்தார்.

1926 ஜூன் 26-ஆம் நாள் முழு துறவியானார். அதுமுதல் "சித்பவானந்தர்' எனும் திருநாமம் சூட்டப்பெற்றார். இவரால் தோற்றுவிக்கப்பட்ட "அந்தர்யோகம் எனும் சத்சங்கம்' இன்றும் தமிழகம் எங்கும் வீறுநடை போட்டு அவர்தம் புகழினை மேலோங்கச் செய்து வருகிறது.

1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை தந்தார்கள். சிவானந்தர் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி சுவாமிஜி கைலாய யாத்திரையை மேற்கொண்டார்.

1940-ஆம் ஆண்டு திருப்பராய்த்துறையில் தபோவனம் அமைத்து, குருகுலக் கல்விக்கு வித்திட்டார். எண்ணற்ற கல்விச் சாலைகளைத் தோற்றுவித்தார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் மிக்க புலமையுடையவராகத் திகழ்ந்தார். இராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.

சுமார் 70க்கும் மேற்பட்ட நூல்களை தெய்வீகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். "தர்மச்சக்கரம்' இதழில் சுவாமி தாயுமானவர் பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை எழுதியுள்ளார். தாயுமானவரின் பராபரக்கண்ணியை ஆங்கிலத்தில் (The Garland of Paraparam) மொழியாக்கம் செய்துள்ளார். திருவாசகத்திற்கு உபநிஷத விளக்கத்துடன் கூடிய பேருரை எழுதியுள்ளார்.

 1951-ஆம் ஆண்டு இவர் எழுதிய "பகவத்கீதை விளக்கவுரை' இராமகிருஷ்ண தபோவன வெளியீடாக மலர்ந்தது. லட்சக்கணக்கான பிரதிகளின் விற்பனையே இந்நூலின் பெருமையைப் பறைசாற்றும். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எளிமைப்படுத்தித் தந்தார்.

படைத்தளித்த தெய்வீக நூல்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு), மஹாபாரதம் (தமிழ், ஆங்கிலம்),

இராமாயணம் (தமிழ், ஆங்கிலம்) திருவாசகம்-பேருரை, ஸ்ரீ தாயுமானவ சுவாமி பாடல்கள், ஆத்ம சக்தி, ஒரு சொல், சுகவாரி, எங்கும் நிறைகின்ற பொருள், கருணாகரக் கடவுள், ஆனந்தமான பரம், சின்மயானந்த குரு, மௌனகுரு வணக்கம், பைங்கிளிக் கண்ணி, பரிபூரணானந்தம், பரசிவ வணக்கம், தாயுமானவசுவாமி வரலாறு, தாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு, அருள்மூவர் நூல்கள், ஸ்ரீ பரமஹம்சரின் ஆப்தமொழி, ஸ்ரீ பரமஹம்சரின் பெருமை, ஸ்ரீ ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி, ஸ்ரீ சாரதா தேவியார் சரிதம், ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம், ஸ்ரீ விவேகானந்த ஜீவிதம் முதலிய பல நூல்கள்.

நாடகங்கள்

ஏகலைவனின் குருபக்தி, ஹரிச்சந்திரன், விரதவீரர் பீஷ்மர், வாலி மோட்சம், பாண்டவ கெüரவ பெருமை, தானவீரன் கர்ணன், பாதுகா பட்டாபிஷேகம், தவப்புதல்வர்கள், விபீஷணன் சரணாகதி, பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கர்வபங்கம், பிரஹ்லாதன், மார்க்கண்டேயன், தபோபலன். இவை தவிர, மாணவர்க்கு ஒரு சொல், குழந்தைகளின் களிக்கூடம், ஆசிரியன் - மாணாக்கன், எதிர்கால இந்தியா, கல்வி, வர்ணாச்ரம தர்மம் என 30க்கும் மேற்பட்ட பிற (வகை) நூல்களையும் படைத்துள்ளார்.

இதிகாசம், நாடகம், தியானம், வரலாறு, விளக்கவுரை, விரிவுரை, பேரூரை, தத்துவம், உபதேசம் என அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதித்த சுவாமி சித்பவானந்தர், 1985-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் நாள் (87 வயது) இறைவனடி சேர்ந்தார். இவர் அருளிய நூல்கள் அனைத்தும் காலத்தால் அழியாது நிலைத்து நிற்பவை. அவரது நினைவு நாளான இன்று (16.11.2014) அவருடைய தெய்வீகத் தமிழ்பணியை நினைவுகூர்வோம்.

-இராஜை என். நவநீதகிருஷ்ண ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.