இந்த வார கலாரசிகன்

நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாகவே இருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன்தாள் பணிதல் சாத்தியம் என்கிற மணிவாசகப் பெருமானின் கூற்றைப்போல, நினைப்பதால் மட்டுமே எதுவும் நடந்துவிடுவதில்லை என்பதை வெள்ளிக்கிழமை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
இந்த வார கலாரசிகன்

நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாகவே இருக்கிறது. அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன்தாள் பணிதல் சாத்தியம் என்கிற மணிவாசகப் பெருமானின் கூற்றைப்போல, நினைப்பதால் மட்டுமே எதுவும் நடந்துவிடுவதில்லை என்பதை வெள்ளிக்கிழமை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

நாமக்கல்லில் "டிரினிட்டி அகாதமி' கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்னையிலிருந்து ஏற்காடு விரைவு ரயிலில் ஏறியபோது, இரண்டு சந்திப்புகளுக்குத் திட்டமிட்டிருந்தேன். முதலாவது, ஓமலூருக்குப்போய் பெரியவர் சொ.மு.முத்துவைச் சந்திப்பது. இரண்டாவது, நாமக்கல்லில் எனது அபிமான நாவலாசிரியர் சின்னப்பபாரதி வீட்டில் இரவு உணவு உண்பது.

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னால் பெரியவர் சொ.மு.முத்து, தன்னிடம் "தினமணி' பதிப்பாக வெளியிட்ட பழைய புத்தகங்கள் சில இருப்பதாகவும், அதை என்னிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார். அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக "தினமணி' நாளிதழின் வாசகர். அவரைப் பற்றி ஞாயிறு கொண்டாட்டத்தில் கட்டுரைகூட வெளிவந்திருக்கிறது. புத்தகங்களுக்காக இல்லாவிட்டாலும், "தினமணி' நாளிதழின் மூத்த வாசகர் என்பதாலும், தமிழ் மீதும், சமுதாயத்தின் மீதும் அக்கறையும் பற்றும் கொண்ட பெரியவர் என்பதாலும் அவரை நேரில் சந்திக்க நான் விரும்பினேன்.

சேலம் ரயில் நிலையத்தில் இறங்கியது முதல் ஒன்றன் பின் ஒன்றாக அலுவலகப் பிரச்னைகள். இதற்கிடையில், தலையங்கத்தை வேறு எழுதி சென்னைக்கு அனுப்பியாக வேண்டிய நெருக்கடி. நேரம் மாலை நான்கு மணியைக் கடந்துவிட்டது. ஐந்து மணி நாமக்கல் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு, அதுவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை வகிக்கும் நிகழ்ச்சிக்கு, விரைந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். பெரியவர் முத்துவைச் சந்திப்பதை, மனதில்லா மனத்துடன் ஒத்திப்போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

சரி, நாமக்கல்லுக்குப் போய் டிரினிட்டி கல்வி நிலைய விழாவில் கலந்து கொண்டு விட்டு, எழுத்தாளர் சின்னப்பபாரதியின் வீட்டில் உணவு உண்ண முடிந்ததா என்றால், அதுவும் இல்லை. விழா முடியும்போதே மணி இரவு 8.30 தாண்டிவிட்டது. 10 மணிக்கு சேலத்தில் ரயிலேறியாக வேண்டும். அவசர அவசரமாக, சின்னப்பபாரதியின் வீட்டிற்கு விரைந்து அவரைப் பெயருக்குச் சந்தித்துக் குசலம் விசாரித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். உணவு உண்ணாததில் அவர்களைவிட எனக்குத்தான் அதிக வருத்தம். சின்னப்பபாரதி வீட்டில் சாப்பிட்டவர்களுக்குத்தானே தெரியும் அதன் அருமையும், ருசியும்...

அப்படியாக ஒரு நாள் மின்னல் வேக நாமக்கல் பயணத்தில், பயண நோக்கம் நிறைவேறியது. ஆனால், ஆசைப்பட்ட இரண்டு விருப்பங்களும் நிறைவேற வேளை வரவில்லை. இதற்காக மட்டுமே சேலத்துக்குப் பயணித்தால்தான் என் மனது ஆறுதலடையும்.

டிரினிட்டி அகாதமி பற்றியும் அதன் தாளாளர் டாக்டர் குழந்தைவேலு பற்றியும் நான் இங்கே குறிப்பிடாமல் போனால் சரியல்ல. பொதுநல நோக்குடன் பத்து பேர் சேர்ந்து, ஒரு பள்ளியைத் தொடங்கி, கால் நூற்றாண்டு காலம் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் என்பது மட்டுமே பாராட்டுக்குரிய சாதனையல்ல. வியாபார நோக்கமில்லாமல், நன்கொடை எதுவும் வசூலிக்காமல், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாக மாற்றாமல், நல்லொழுக்கமும், நற்பண்புகளும் உள்ளவர்களாக உருவாக்கும் கல்விச்சாலையை நடத்துகிறார்கள் என்பதுதான் சிறப்பு.

-----------------------------------

விமர்சனத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் புத்தகங்களைப் பற்றி எழுதவே இடமில்லாத நிலையில், ஆங்கிலப் புத்தகங்களை விமர்சிப்பது தமிழுக்கே அடுக்காத செயலாகிவிடும். ஆனாலும், எதற்கும் விதிவிலக்கு இருக்கத்தானே செய்யும். தமிழைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் எனும்போது அது விதிவிலக்கு பெறுதல் நியாயம்தானே...

தமிழ்க் கவிதை என்பதன் இலக்கணம்தான் என்ன? ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய வகையின்பாற்பட்டவை மட்டுமே தமிழ்ப்பாவாகக் கருதப்படும்.

""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென

நாலியற் றென்ப பாவகை விரியே''

என்கிறது தொல்காப்பிய சூத்திரம். தொல்காப்பியர் அடிக்கடி "என்மனார் புலவர்' என்கிற வார்த்தையைக் கையாள்வதிலிருந்து இன்னொன்றும் தெரிகிறது. புலவர்கள் குறிப்பிடும் நான்கு பா வகைகள் அல்லாமல், வேறு "பா' வகைகளும் இருந்திருக்கக்கூடும் என்பதைத்தான்,

"கைக்கிளை தானே வெண்பா வாகி

யாசிரிய வியலான் முடியவும் பெறுமே'

போன்ற தொல்காப்பியச் சூத்திரங்கள் உணர்த்துகின்றன. இந்த அடிப்படையில்தான் நாம் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பல்வேறு விருத்தப்பா வகைகளைப் பார்க்க வேண்டும்.

தமிழின் முதன்மையான இலக்கணத் துறைகளுள் ஒன்று யாப்பிலக்கியம். 1911-இல் ஈ.ந. தணிகாசல முதலியார் என்பவர் சென்னை பச்சையப்பன் அரங்கில் எல்.டி. சாமிகண்ணு பிள்ளை தலைமையில் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வுரை நிகழ்த்தினார். இதுதான் தமிழ் யாப்பிலக்கியம் குறித்து நிகழ்த்தப்பட்ட முதலாவது உரையாகக் கருதப்படுகிறது.

இந்த உரையை அப்போது வெளிவந்து கொண்டிருந்த "சித்தாந்த தீபிகா' இதழ்

1913-14 ஆண்டுகளில் தொடர் கட்டுரையாக வெளியிட்டது. 1938-ஆம் ஆண்டு தான் பதிப்பித்த ஒரு நூலில் தணிகாசல முதலியார் அந்த ஆய்வுரையை இணைத்து வெளியிட விரும்பினார். அந்தக் கட்டுரைகள் கிடைக்காததால், அதே தலைப்பில் கட்டுரை ஒன்றை மறுபடி எழுதி இணைத்து "விருத்தப்பாவியல்' என்ற நூலை 1938-இல் வெளியிட்டார்.

கால் நூற்றாண்டு கால இடைவெளியில் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட "தமிழ் விருத்தத்தின் பரிணாமம்' (பட்ங் உஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் ர்ச் பஹம்ண்ப் யண்ழ்ன்ற்ற்ஹம்ள்) என்கிற சித்தாந்த தீபிகா இதழில் 1913-இல் வெளிவந்த தொடர் கட்டுரையும், 1938-ஆம் ஆண்டு வெளியான "விருத்தப்பாவியல்' புத்தகத்தில் வெளியான அதே தலைப்பிலான கட்டுரையும் இப்போது கிடைத்திருக்கின்றன. தமிழ் யாப்பிலக்கணத் துறையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட முன்னோடி ஆய்வான, ஒரே ஆசிரியரின், இரண்டு பதிவுகளும் கிடைத்திருப்பது, தமிழுக்குக் கிடைத்திருக்கும் அரியதொரு வரப்பிரசாதம்.

இந்த இரண்டு வடிவங்களையும் இணைத்து உஹழ்ப்ஹ் நற்ன்க்ண்ங்ள் ண்ய் பஹம்ண்ப் டழ்ர்ள்ர்க்ஹ் - பட்ங் உஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் ர்ச் பஹம்ண்ப் யண்ழ்ன்ற்ற்ஹம்ள் என்கிற ஈ.ந. தணிகாசல முதலியாரின் ஆய்வை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் துணைத் தலைவர் முனைவர் ய. மணிகண்டன் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ஆய்வு மாணவர்கள் மட்டுமல்ல, தமிழன்பர்களும் கட்டாயம் படித்துப் பாதுகாக்க வேண்டிய அற்புத முயற்சி இது. முனைவர் மணிகண்டனுக்குத் தமிழ்கூறு நல்லுலகம் சார்பில் நன்றி!


-----------------------------------

குறுஞ்செய்தியாக எனது கல்லூரித் தோழன் ஆவுடையப்பன் அனுப்பித் தந்திருந்த "கம்பம் புதியவன்' என்கிற கவிஞரின் ஹைக்கூ கவிதை, இன்று காலையிலிருந்து என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறது. "குறையொன்றுமில்லை' என்கிற அவரது கவிதைத் தொகுப்பில் காணப்படுகிறதாம் இந்தக் கவிதை. அந்தக் கவிதைத் தொகுப்பு எங்கே கிடைக்கும்?

மகன் கற்பித்த மறக்க முடியாத பாடம் முதியோர் இல்லத்தில் அம்மா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com