சேக்கிழாரின் "ஏழாம் வேகம்'!

பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாகத் திகழும் பெரியபுராணம், சிறந்த வாழ்வியல் நூலகத் திகழ்வதுடன், சாத்திரக் கருத்துகள் அமையத் தோத்திரமாகவும் விளங்கும் "கலைக்களஞ்சியம்' போன்று விளங்குகிறது.
சேக்கிழாரின் "ஏழாம் வேகம்'!
Published on
Updated on
1 min read

பன்னிரு திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாகத் திகழும் பெரியபுராணம், சிறந்த வாழ்வியல் நூலகத் திகழ்வதுடன், சாத்திரக் கருத்துகள் அமையத் தோத்திரமாகவும் விளங்கும் "கலைக்களஞ்சியம்' போன்று விளங்குகிறது. பல்வேறு விதமான அறிவியல் செய்திகளும் பொதிந்திலங்கும் இந்நூலுள் அப்பூதியடிகள் புராணம் காட்டும் "ஏழாம் வேகம்' மருத்துவ அறிவியல் சார்ந்தது.

ஆளுடை அரசு அமுது உண்ண அப்பூதியடிகளின் மனைவியார் ஏற்பாடு செய்தார். நா அரசு உண்ண வாழைக் குருத்தின் இலை பறிக்க மூத்த திருநாவுக்கரசை (மூத்த மகன்) ஏவினர். அவனோ, "நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப் பெற்றேன்' என விரைந்தான்.

இலை பறிக்கச் சென்ற மைந்தனைப் பையரவு - பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் உணவுண்ணக் காலம் தாழ்க்குமே எனத் தன் கையில் சுற்றிய பாம்பை உதறி, மகன் ஓடினான். இங்கேதான், சேக்கிழார் "ஏழாம் வேகம்' என்ற தொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

அதாவது, விஷக்கடி ஏற்பட்டால், அசைவின்றி இருத்தல் வேண்டும். கடிவாயில் கீறி விஷத்தை வெளியேற்றி, அசைவின்றி வைத்தல் முதல் உதவி! பிறகு மருத்துவ உதவி செய்யப்பட வேண்டும் என்பர். அசைவு ஏற்படுமானால், விஷம் பரவும் என்பது மருத்துவ உண்மை! இந்த விஷம் - நஞ்சு உடலில் எவ்வாறு பரவும் என்பதும் அது சார்ந்த மருத்துவமும் முறைகளும் இன்று தனித்துறையாக வளர்ந்து வருகின்றன.

இதனையே, சேக்கிழார் "ஏழாம் வேகம்' என்கிறார். அதாவது, பாம்பின் நஞ்சானது, கடிபட்ட இடத்திலிருந்து இரத்த ஓட்டத்துடன் கலந்து, உடல் முழுவதும் ஒரு சுற்று வருவது ஓர் ஓட்டம் அல்லது ஒரு வேகம் எனப்படும்.

முதல் ஓட்டத்தால் / வேகத்தால் பாதிக்கப்படுவது ஜீரண மண்டலம் Digestion System ஆகும். இரண்டாம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது இரத்த மண்டலம் (Blood System); மூன்றாம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது சுக்கிலம் எனப்படும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம் (Harmone System); நான்காம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம் (Nerve System); ஐந்தாம் ஓட்டத்தால் பாதிக்கப்படுவது தசை மண்டலம் (Muscular System); ஆறாம் ஓட்டத்தில் எலும்பு மண்டலமும் (Bone System), ஏழாம் ஓட்டத்தில் தோல் மண்டலமும் (Epidermal System) பாதிக்கப்படும். ஆகவேதான், தோல் கருத்தால் பிழைப்பதற்கு வழியில்லை என்பார்கள் மருத்துவர்கள்! "ஏழாம் வேகம்' ஏறிய மூத்த திருநாவுக்கரசு வாழையின் குருத்தை, தாயாரிடம் கொடுத்துவிட்டு விழ, பின்னர் நாவரசர் பதிகம் பாடி (ஒன்றுகொலாம் 4:18) பிழைப்பித்தமை அற்புதம்! சேக்கிழாரின் அப்பாடல் வருமாறு:

எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட "ஏழாம் வேகம்'

தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து

விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்

பரிகலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படிமேல் வீழ்ந்தான்!

(5:திருநின்ற சருக்கம்-1809-27)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com