பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழ்க் கடவுளை போற்றும் வாரப்பதிகம்

தமிழ்க் கடவுளான குமரக் கடவுளின் அறுபடை வீடுகளும் அவன் புகழ்பாடும் திருத்தலங்களாகும். இத்தலங்களுக்கென பல தனிப் பாடல்கள் உள்ளன.

News image
Updated On :1 மார்ச் 2015, 2:31 am IST

தமிழ்க் கடவுளான குமரக் கடவுளின் அறுபடை வீடுகளும் அவன் புகழ்பாடும் திருத்தலங்களாகும். இத்தலங்களுக்கென பல தனிப் பாடல்கள் உள்ளன. இந்த அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாகக் "கந்தர் சஷ்டி கவசம்' உள்ளதைப் பலரும் அறிவர். ஆனால், தனித்தனியாக வாரப்பதிகம், மாதப்பதிகம் பாடப்பட்டுள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவ் வாரப் பதிகங்களில் கிழமையின் பெயரை பாடலின் இறுதி அடியில் அமையுமாறும், மாதப் பதிகங்களில் பனிரெண்டு தமிழ் மாதப் பெயர்களை ஒவ்வொரு பாடலின் இறுதி அடியில் அமையுமாறும் பாடப்பட்டுள்ளன.

1890-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ள இப்பதிக முகப்பு அட்டையில், திருப்பழனி சிவசுப்பிரமணியக் கடவுள் பெயரில் மாதப்பதிகம், வாரப்பதிகம் என்றுள்ளது. இதில், "திருத்தணிகை ஆறுமுக சுவாமிகளால் பரிசோதித்து' என்றுள்ளதால், இதைப் பாடியவர் வேறு புலவரா அல்லது திருத்தணிகை ஆறுமுக சுவாமிகளா என்பது விளங்கவில்லை. வாரப்பதிகம் பின்வருமாறு:

வாதித்தசூரரை வடிவேலெடுத்து வளைந்துகொண்டு

சாதித்துவென்ற தயாபரனேயெந்தன் சஞ்சலத்தைச்

சோதித்துப்பார்த்து துயர்தனைநீக்கிநற் றோகையுடன்

ஆதித்தவாரம் வருவாய்பழனிநல் லாண்டவனே.

உங்கள்தகப்பன் தரக்கனிக்காயுல கேழுஞ்சுற்றிக்

கண்கள்சிவந்திட வந்துநின்றாயந்தக் கபடதுபோல்

எங்கள்மேற்குற்ற மியாதிருந்தாலு மிரங்கிமனந்

திங்கட்கிழமை வருவாய்பழனிநற் றேசிகனே.

கொவ்வாயிதழுண்ணும் வள்ளிதெய்வானைக்குகந்தவனே

தவ்வாயகப்பட்ட பாம்பதுபோலுந் தமிழ்மறையோன்

அவ்வாயிற்சிக்கி அலையப்படாதடியார்க் கிரங்கிச்

செவ்வாய்க்கிழமையில் வருவாய் பழனிநற்றேசிகனே.

சதமெனும் வேதமுதலெழுத் தோகத் தலையிற்குட்டி

விதமெனக் கேட்டருள் வேலவனே யொரு விண்ணப்பங்கேள்

பதமதுபாடக் கலித்துறை சொல்லவும் பண்புதந்து

புதமெனும் வாரம் வருவாய்பழனிநற் புண்ணியனே.

கருவாயெழுந் திருகைகான்முனைத்துக் கழித்தபின்பு

உருவாய்ப்பிறப்பித்தவுத்தமனே யொரு வுண்மைசொல்லேன்

திருவாய்மலர்ந்து முன்னின்றிடவேணுமுன் சேவலுடன்

குருவாரநாளில் வருவாய்பழனிநற் குருபரனே.

உள்ளிற்கருதி நின்றஞ்சலி செய்வோர்க்குகந்துவந்து

அள்ளிவிபூதி யிடுமையனே யடியார்க்கிரங்கி

வள்ளிதெய்வானையுடனே மயிலேறி மனதுகந்து

வெள்ளிக்கிழமை வருவாய்பழனி நல்வேலவனே.

சனியான பாவியிளமையிலே யென்னைத் தான்றொடுத்தான்

இனியாகினுஞ் சற்றிரங்கிலையே மனதெப்படியோ

பனியானதைவந்து கதிரோன் விலக்கிடும் பாவனைபோல்

சனிவாரநாளில் வருவாய்பழனிநற் சண்முகனே.

எளிமையாகவும், அழகு தமிழிலும், கலித்துறையிலும் அமைந்துள்ள இப்பாடல்கள் பழனித் தலத்துக்குரியன என்பது சொல்லாமலே விளங்கும். சுப்பிரமணியக் கடவுளின் திருவிளையாடல்களையும், அறுபடை வீடுகளை அறிமுகப்படுத்துவதாகவும், நவக்கிரகங்களைக் குறிப்பனவாகவும் இப்பதிகங்கள் அமைந்துள்ளது மேலும் சிறப்பு. செவ்வாய், வெள்ளிக்கிழமைப் பாடல்களில் மட்டும் வள்ளி தெய்வானையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, அம்மனுக்கு ஏற்ற நாள்கள் என்பதைக் குறிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதா என்பது சிந்திக்கத்தக்கது.

இத்தலத்துக்குரியது போன்றே மற்ற ஐந்து படைவீடுகளுக்கும் தனித்தனியே வாரப்பதிகம், மாதப்பதிகம் இருந்திருக்க வேண்டும். முருகனுக்கு இருப்பது போல வேறு எந்தத் தெய்வத்துக்கும் தமிழில் வாரப்பதிகம், மாதப்பதிகம் பாடப்பட்டுள்ளனவா என்பது கேள்விக்குறியே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.