பூமி சூரியனையும், சந்திரன் பூமியையும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றும் நிலையில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஏறக்குறைய ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வரும்போது, இப்பொழுது பூமியை நோக்கியிருக்கும் சந்திரனின் பாகத்தில் சூரிய ஒளி படுவதில்லை. எனவே, நம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. இந்நிகழ்ச்சி நிகழும் நாளையே "அமாவாசை' என்பர்.
"அமா' என்றால் "அண்மை' என்றும், "வாசி' என்றால் "வசித்தல்' என்றும் பொருள். அதாவது, சூரியனுடைய அண்மையில் (அருகில்) சந்திரன் வசிப்பதால், "அமாவாசை' என்ற பெயருண்டாயிற்று. அமாவாசைக்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் சந்திரனின் ஒளி இரண்டிரண்டு நாழிகை அளவில் வெளிப்படுகிறது. இதை "வளர்பிறை' என்பர்.
அமாவாசை முடிந்தபின் வளர்பிறையில் முதல்முறை (பிரதமை) நிகழும்போது சந்திரன் வானில் இரண்டு நாழிகை விளங்கும். இரண்டாம் பிறையில் (துவிதியை) நான்கு நாழிகையும்; மூன்றாம் பிறையில் (திரிதியை) ஆறு நாழிகையும்; நான்காம் பிறையில் (சதுர்த்தி) எட்டு நாழிகையும்; ஐந்தாம்பிறையில் (பஞ்சமி) பத்து நாழிகையும்; ஆறாம்பிறையில் (சஷ்டி) பன்னிரண்டு நாழிகையும்; ஏழாம்பிறையில் (சப்தமி) பதினான்கு நாழிகையும்; எட்டாம்பிறையில் (அஷ்டமி) பதினாறு நாழிகையும்; ஒன்பதாம் பிறையில் (நவமி) பதினெட்டு நாழிகையும்; பத்தாம்
பிறையில் (தசமி) இருபது நாழிகையும்; பதினொன்றாம் பிறையில் (ஏகாதசி) இருபத்திரண்டு நாழிகையும்: பன்னிரண்டாம் பிறையில் (துவாதசி) இருபத்திநான்கு நாழிகையும்; பதிமூன்றாம் பிறையில் (திரயோதசி) இருபத்தாறு நாழிகையும்; பதினான்காம் பிறையில் (சதுர்த்தசி) இருபத்தெட்டு நாழிகையும் விளங்கும். பதினைந்தாம் நாள்
பெளர்ணமி நிகழும் என்பதால், அன்றிரவு முப்பது நாழிகையும் சந்திரன் வானில் விளங்கும். இக்குறிக்கப்பட்ட வளர்பிறை தோன்றும் நாழிகைக் கணக்கை சுந்தரானந்தரின், "சோதிட முகூர்த்த சிந்தாமணி' என்ற நூற்பாடல் எடுத்துரைக்கிறது.
சீர்த்திஅமா வாசைதனை முதலாய் வைத்துத்
தினம்இரண்டு நாழிகையாய்ப் பெருக்கி மேலும்
நேர்த்தியுடன் எத்தனைநாள் ஆகு தென்று
நேர்மையுடன் நாழிகையை எண்ணிப் பார்க்கில்
ஆர்த்தியுடன் அந்த நாழிகை வரைக்கும்
அருமையுள்ள நிலவிருந்தே மறைய லாகும்
கீர்த்தியுடன் மறையாமல் பதினைந்தாம் நாள்
கிருபையுடன் பூரணமாய் இருப்பான் தானே!
(செய்:344)
அமாவாசை முடிந்தபின் ஒவ்வொரு நாளும் சந்திரனின் ஒளி இரண்டிரண்டு நாழிகை (48 நிமிடம்) அளவில் கூடிக்கொண்டே இருக்கும் என்கின்ற வானியல் உண்மையை, இப்பாடல் உணர்த்துகிறது.
இப்பாடல் கருத்தின்படி முதல்நாள் முதல்பிறை நிகழும்போது சந்திரனின் ஒளி வானில் இரண்டு நாழிகை (6 மணி முதல் 6-48 மணி வரை) மட்டுமே காணப்பெறும்; அதற்குமேல் சந்திரனின் ஒளியைக் காணமுடியாது என்பதையும் ஊன்றி உணர வேண்டும். இதனைத்தான் சுந்தரானந்தர் ""அந்த நாழிகை வரைக்கும் அருமையுடன் நிலவிருந்து மறையலாகும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுகாறும் அமாவாசையைப் பார்த்தோம், இனி பெளர்ணமியைப் பார்ப்போம். இந்நாளில் சூரியன் நின்ற இராசியிலிருந்து 180ளி (நூற்றி எண்பது பாகையில்) சந்திரன் சூரியனை நோக்கி வந்துகொண்டேயிருக்கும். பெளர்ணமிக்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் சந்திரன் இரண்டிரண்டு நாழிகை கழித்தே வானில் தோன்றும், ஆதலால்தான் அந்நாள்களைத் தேய்பிறை என்று குறிப்பிடுகின்றனர்.
பெளர்ணமி முடிந்த பின்னர் தேய்பிறையில் முதல் பிறை நிகழும்போது சந்திரன் வானில் இரண்டு நாழிகை கழித்து விளங்கும். அதாவது, அன்றிரவு இருபத்தெட்டு நாழிகை (28) வரையில் சந்திரன் வானில் விளங்கும். இரண்டாம் பிறையில் இருபத்தாறு நாழிகையும்; மூன்றாம் பிறையில் இருப்பத்து நான்கு நாழிகையும்; நான்காம் பிறையில் இருபத்திரண்டு நாழிகையும்; ஐந்தாம் பிறையில் இருபது நாழிகையும்; ஆறாம் பிறையில் பதினெட்டு நாழிகையும்; ஏழாம்பிறையில் பதினாறு நாழிகையும்; எட்டாம் பிறையில் பதினான்கு நாழிகையும்; ஒன்பதாம் பிறையில் பன்னிரண்டு நாழிகையும்; பத்தாம் பிறையில் பத்து நாழிகையும்; பதினொன்றாம் பிறையில் பன்னிரண்டு நாழிகையும்; பன்னிரண்டாம் பிறையில் ஆறு நாழிகையும்; பதிமூன்றாம் பிறையில் நான்கு நாழிகையும்; பதினான்காம் பிறையில் இரண்டு நாழிகையும்; பதினைந்தாம் நாளான அமாவாசையன்று இரவு முப்பது நாழிகையும் சந்திரன் ஒளிவீசாமல் (விளங்காமல்) மறைக்கப்படுவான். மேற்கூறப்பட்ட தேய்பிறை குறையும் நாழிகைக் கணக்கைச் சுந்தரானந்தர்,
நன்னமாய்ப் பூரணையை முதலாய்க் கொண்டு
நாள்ஒன்றுக்கு இரண்டுநா ழிகைவகுத்து
சொன்னபடி எத்தனைநாள் ஆகுதென்று
சூட்சமுடன் நாழிகையை எண்ணிப்பார்த்துத்
தன்மையாய் அந்தநா ழிகைகழித்துத்
தான்வருவான் சந்திரனும் சரியாய்ப்பாரு
முன்னமுள அமாவாசை வருமேயாகில்
முக்கியமாய்ச் சந்திரனும் மறைவான்பாரோ!
(செய்.345)
என்ற பாடலில், பெளர்ணமி முடிந்தபின் ஒவ்வொரு நாளும் சந்திரன் ஒளி இரண்டிரண்டு நாழிகை (48 நிமிடம்) அளவில் குறைந்து கொண்டேவரும் என்கின்ற வானியல் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
-முனைவர் அ. சிவபெருமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


