இலக்கியம் பொழியும் மழை
சங்க இலக்கியங்கள் மழையைப் பற்றிய பல அறிவியல் செய்திகளைத் தெள்ளிதின் தந்து இன்பம் பொழிய வைக்கின்றன. திருவள்ளுவர் "வான் சிறப்பு' என்ற ஓர் அதிகாரத்தையே மழையாகப் பொழிந்துள்ளார்.


சங்க இலக்கியங்கள் மழையைப் பற்றிய பல அறிவியல் செய்திகளைத் தெள்ளிதின் தந்து இன்பம் பொழிய வைக்கின்றன. திருவள்ளுவர் "வான் சிறப்பு' என்ற ஓர் அதிகாரத்தையே மழையாகப் பொழிந்துள்ளார்.
மழை பொழிவதற்கு இன்றியமையாமை இரண்டு. அவை கடலும் சூரியனும். நீரில் பெரும் பகுதி கடலிலேயே காணப்படுவதால் அந்நீர் சூரியன் மூலம் நீராவியாக்கப்பட்டு மேகங்களாக உருப்பெறுகின்றன. அம்மேகங்கள் காற்று வீசுவதன் மூலம் மலைகளில் மோதி மழையாகப் பொழிகின்றன என்பதை,
""பனித்துறைப் பெருங்கடல் இறந்துநீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே'' (183)
என்று அகநானூறு செப்புகிறது. காற்று வீசும் திசைக்குக் குறுக்காக உள்ள மலைகள் மேகத்தை, மழையைத் தடுப்பதையும் சங்ககாலப் புலவர்கள் கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை,
""நளிகடல் முகந்து செறிதக இருளி
கனைபெயல் பொழிந்து...'' (நற்.289)
என நற்றிணை நமக்கு நவில்கிறது. இப்பாடல் வரிகள் அடர்த்தி மிகுந்து மழை பொழிவதை நன்கு காட்டுகிறது. மேலும், மழை மேகங்களை மலைகள் தடுத்து தம் முகடுகளில் மழையைப் பொழிய வைத்து அருவியாகக் கொட்டுகின்றன என்றும் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் என்ற புலவர் பாடியுள்ளார்.
""வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளி பொழி சாரல் தமர்மலர் தாஅய்'' (பதிற்.12)
என்று பதிற்றுப்பத்து பகர்கிறது. எல்லா மேகங்களினூடும் நீர் நிரம்பியிருக்காது. சில மேகங்களில் குறைவாகவும், சில மேகங்களில் நீர் நிறைந்தும் காணப்படும். நீர் குறைந்த அல்லது நீர் கொள்ளாத மேகத்தை, ""பெயில் உலர்ந்தெழுந்த பொங்கல் வெண் மழை'' என்றும், நீர் நிரம்பித் தாழ்ந்து செல்லும் மேகத்தை, ""கடுஞ்சூல் மகளிர்'' என்றும் சங்கப் புலவர்கள் முறையே தம் நெடுந்தொகையிலும், குறுந்தொகையிலும் குறிப்பிட்டுள்ளனர்.
பாரியின் வள்ளல் தன்மையை வாழ்த்திப்பாடும் கபிலரும், ""மாரியுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே'' (புறநா.107) என்கிறார்.
மழை பொழிதலில் சூரியனுக்கு மட்டுமன்று, காற்றுக்கும் பெரும் பங்கு உண்டு. கடலிலிருந்து சூரியதேவன் மூலம் மேகமாக மாறிய மழை, காற்றின் மூலம்தான் மற்ற இடங்களுக்குச் சென்று சேர்கிறது என்பதையும், அம்மேகக் காற்று பல திசைகளில் செல்கிறது என்பதையும் சங்கப் புலவர்கள் பெரிதும் பாராட்டிப் பாடியுள்ளனர். மேகக் காற்றானது வலப்பக்கமாகச் சுற்றுவதை, ஐங்குறுநூறும் (469),
""கடல் முகந்துகொண்ட காமம் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலனேர்பு''
(அகநா.43)
என்று அகநானூறும் தெள்ளிதின் மட்டுமின்றி நுண்ணிதின் விளக்குகின்றன.
உலகம் உய்வதற்கு உறுதுணையாக விளங்கும் மழையைப் பற்றி பல புலவர்கள் தம் பாடல்வழிப் பறைசாற்றியுள்ளனர். கார் கால மேகம் காற்றில் அடித்துச் செல்வதை ஐங்குறுநூறு ""நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே'' (492) என்று விளக்குகிறது.
திருவள்ளுவர், இவ்வுலகம் பெரிய கடலால் சூழப்பட்டதாக இருப்பினும் வானத்திலிருந்து மழை பொழியாவிட்டால் கடலோரம் தவிர மற்ற உள்நாடுகள் எல்லாம் உணவின்றி உயிர்களைப் பசி வதைத்துவிடும் என்பதை 13ஆவது குறளில் அருமையாகப் படைத்துள்ளார்.
மேற்காண் செய்திகள் மூலம் மழை பொழிவதற்கான அறிவியல் கூறுகளையும், மழை பொழியும் திசைகளையும் நன்கு அறிந்திருந்தனர் சங்கப் புலவர்கள் எனலாம்.
-புலவர் இராம.வேதநாயகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...