துடரி - துடரிப்பழம்

துடரி - துடரிப்பழம்

சங்க இலக்கியங்களில் எண்ணற்ற பழவகைகள் கூறப்பட்டாலும் 'துடரி' என்னும் பழம் பற்றிய தெளிவு தற்போது தேவையாகிறது. புறநானூற்றுப் பாடலில் அப்பழம் பற்றிய குறிப்பு உள்ளது.

சங்க இலக்கியங்களில் எண்ணற்ற பழவகைகள் கூறப்பட்டாலும் "துடரி' என்னும் பழம் பற்றிய தெளிவு தற்போது தேவையாகிறது. புறநானூற்றுப் பாடலில் அப்பழம் பற்றிய குறிப்பு உள்ளது.

""புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்

தீம்புளிக் களாவொடு துடரி முனையின்

மட்டுஅறல் நல்யாற்று எக்கரி ஏறி

கருங்கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்

பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குடநாட்டு''

(புறம். 177:8-12)

இப்பாடல், மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது. மல்லி (சீவில்லிபுத்தூர்) நாட்டை ஆண்ட மல்லிகிழான் நாட்டு கொண்டாட்டத்தை விளக்குகிறது இப்பாடல். அவன் நாட்டில் வாழும் ஆடவர் புளிப்பு சுவையுடைய கள்ளினை உண்டு கண் சிவந்தது. அப்புளிப்பு சுவை குறையாமல் இருக்க களாம் பழத்தினையும் துடரி பழத்தினையும் உண்கின்றனர் என்கிறது பாடல்.

இங்கு அறிய வருவது புளிப்புச் சுவையுடைய பழங்களை ஆடவர் உண்கின்றனர் என்பது. நாவல் கனியும் களாம் பழமும் புளிப்பு சுவையுடையது என்பது அனைவரும் அறிந்ததே. துடரி எனும் பழம் எது? என்பதே கேள்வி. பழைய உரையாசிரியர்களும் 20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களும் அதனைச் சரியாக விளக்கவில்லை. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அதை ஈச்சம் பழம் என்கிறார். பெயரைப் பொருத்த வகையில் சரியாக இருப்பினும் சுவை நிலையில் ஈச்சம் பழம் இனிப்பு சுவையுடையது. அதன் காய் துவர்ப்பு சுவையுடையது. அப்பொழுது அது என்ன பழம்?

"பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குடநாட்டு' எனும் அடி கவனிக்கத்தக்கது. செடி, கொடிகள் நிறைந்த நாடு என்கிறார். அதுவும் பின்னிப் பிணைந்த செடிகொடிகள் உடைய நாடு. செடி, கொடி என்பதால் மரம் என்பதும் கொண்ட நாடு என்கிற மூன்றையும் இணைத்தே இங்கு விளக்குகிறார். களாம் பழம் செடியில் இருந்து பெறப்படுவது. நாவல்கனி மரத்தில் இருந்து பெறப்படுவது. அப்பொழுது கொடியில் இருந்து பெறப்படும் பழம் "துடரி' என்பது தெளிவாகிறது. எனவே, துடரி என்பது ஈச்சம்பழம் அன்று என்பது தெளிவு. துடரிக் கொடி பற்றி விளக்கமாகக் காண்போம்.

நடு நாட்டில் "மூக்குசளிப்பழம்' என்றொன்றுண்டு. பச்சை பசேல் என்று காணப்படும் கொடி அது. இருதயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் போன்ற இலைவடிவம் உடையது. சுக்கங்காய் கொடி போன்றது. இலைக்கு அடுத்தடுத்து மலர் மலரும். இலைக்கு அடியில் பற்றுக் கோடாக விழுதுகள் தொங்கும். அவை எங்கும் அக்கொடி பற்றிப்படர ஏதுவாக இருக்கும். மேலும், கொடிமுழுதும் ஒருவித சுணசுணப்பு இருக்கும். பூவைச் சுற்றி நார் போன்ற அமைப்பு அதைப் பாதுகாக்கும். இக்கொடியை எந்த விலங்கும் உண்பதில்லை. பூ - காயாகிப் பின் பழுக்கும். காயும் கொடி நிறத்திலே இருக்கும். பின் நன்கு பழுத்தால் வெளிறிய மஞ்சள் நிறத்தில் மாறும்.

கனிந்தவுடன் அதனைப் பறித்து கையால் அழுத்தினால் கொழகொழப்புடன் வெள்ளை நிறத்தில் மாதுளம் சுளைகள் இணைந்தது போன்று இருக்கும். அது புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கனியைச் சுற்றியும் அந்த சுணசுணப்பு இருக்கும். அத்திப்பழத்தைவிட கொஞ்சம் பெரியதாக இருக்கும். ஆனால், அதன் தோல் மெல்லியதாக இருக்கும்.

கொடி எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரமும் இலைக்கு ஒன்றாக அதன் மலரோ, காயோ, பழமோ தொடர்ந்து காணப்படும். இப்படித் தொடர்ந்து காணப்படுவதால் "தொடரி பழம்' என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பின் அது "துடரி' என்றானது. அக்கொடிக்கும் "துடரிக்கொடி' என்றே பெயர். நடு நாட்டில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இதன் கனி "மூக்குசளிப்பழம்' என்று அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து அமைதலை "தொடரி' என்று அழைக்கும் மரபு சங்க இலக்கியங்களில் உண்டு.

""வேரு முதலுங் கோடு மொராங்குத்

தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்

கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின்...''

(குறுந்.257:1-3) என்றும்,

""புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்'' (ஐங்கு.463:1) என்றும், ""மனை விளக் குறுத்து மாலை தொடரி'' (அகம்.86:4) என்றும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ஒரு ஒழுங்கோடு அமைக்கப்படுவது "தொடரி' என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே தொடர்ந்து இலைக்கொன்றாகக் காய்த்து கனியும் கனி "தொடரிக்கனி' எனப்பட்டது. ஒகரம் உகரமாவது தமிழ் மரபில் பேச்சு வழக்கில் இயல்பாகக் காணப்படக்கூடிய ஒன்று.

செடி - களாம்பழம், கொடி - துடரி பழம், மரம் - நாவல் பழம் ஆகிய பழங்களைக் (புளிப்பும் இனிப்பும் கலந்த) கள்ளுண்டு களித்த ஆடவர்கள் உண்கின்றனர் எனும் புறநானூற்றுப் பகுதியில் இடம்பெறும் "துடரிபழ'த்தின் பொருளை மேற்குறித்தவாறு அறியலாம்.

-முனைவர் கா.அய்யப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com