முல்லை பூத்ததோ?

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை தமிழர்தம் வாழ்வியல் முறைகளைத் தெள்ளத் தெளிவாய்த் தெள்ளு தமிழில் எடுத்துக்காட்டும் ஒரு கண்ணாடி.
முல்லை பூத்ததோ?
Published on
Updated on
1 min read

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை தமிழர்தம் வாழ்வியல் முறைகளைத் தெள்ளத் தெளிவாய்த் தெள்ளு தமிழில் எடுத்துக்காட்டும் ஒரு கண்ணாடி.

தலைவன் பொருள்தேடச் செல்ல முடிவு செய்கிறான். அதைக் கூறுவதற்காகத் தலைவியை ஒரு சோலையில் சந்திக்கிறான். அங்குள்ள ஒரு முல்லைக் கொடியைக் காட்டி ""கண்ணே! இந்த முல்லை மலர்கள் அரும்பும்போது நான் திரும்பி வந்துவிடுவேன்; நீ கவலைப்படாதே'' என்று தலைவியைத் தேற்றிவிட்டுச் செல்கிறான். கார்காலம் வந்தால் முல்லை பூக்கும் என்பது இயற்கை. அதனால் கார்காலத்திற்கு முன் வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்றவன் இன்னும் வரவில்லை. தலைவியோ அந்த முல்லைச் செடி அரும்புகிறதா, தலைவன் வரும் நாள் வந்துவிட்டதா என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

திடீரென்று கார்காலம் வந்துவிட்டதன் அறிகுறியாக மழை பொழிந்தது. தலைவன் சொல்லிவிட்டுச் சென்றது போல் முல்லைச் செடிகளும் பிறவும் அரும்புவிடத் தொடங்கிவிட்டன. தலைவி, தன் தலைவனின் வரவை எதிர்நோக்கி ஏக்கம் கொள்கிறாள். முல்லையோ பூத்துவிட்டது, ஆனால் தலைவன் சொன்னபடி வரவில்லை எனத் தோழியிடம் கூறி, தலைவன் சொன்ன சொற்கள் எல்லாம் பொய்யாய்விடுமோ என்றஞ்சி வருந்துகிறாள்.

தோழியோ, ""அம்ம! கவலைப்படாதே. இது தலைவனின் குற்றம் அல்ல; முல்லை மலர்களின் தவறுமல்ல; முட்டாள் மேகத்தின் தவறு'' என்று தலைவியைத் தேற்றுகிறாள். இந்த மேகம் என்ன செய்தது தெரியுமா? தலைவர் வரவேண்டிய வழியையுடைய அதோ அந்த மலைமேலே கல்மிசை, மலைப்பக்க மெல்லாம் நீர்க்கால் இறங்கி பெரிய ஆரவாரத்தைச் செய்தது. இடியிடிப்பதைச் செய்யா நின்றது. அதாவது மலைப்பக்கமெல்லாம் மறைந்து போகுமாறு இடியிடித்து மழை பொழிந்தது. மழை பொழிந்ததால் முல்லை பூத்தது. அவ்வளவுதான். இது மேகத்தின் அறியாமையால் வந்தது. இது உன் தலைவன் குறித்துச் சென்ற கார்காலம் அல்ல; அவர் குறித்த கார்காலமாயின் அவர் நிச்சயமாக வந்திருப்பார். அவர் ஒருபோதும் பொய்கூற மாட்டார்; கவலைப்படாதே'' என்று தலைவியைத் தேற்றுகிறாள். இனி இக்காட்சியை இடைக்காடனார் என்ற புலவர் நவில்வதைக் காண்போம்.

"மடவது அம்ம! மணிநிற எழிலி

மலரின் மெüவல் நலம்வரக் காட்டி

கயல்ஏர் உண்கண் கனங்குழை இவைநின்

எயிறுஏர் பொழுதின் ஏய்தருவேம் என

கண்அகன் விசும்பின் மதியென உணர்ந்தநின்

நன்னுதல் நீவச் சென்றோர் தம்நசை

வாய்த்து வரல்வாரா வளவை அத்தக்

கல்மிசை அடுக்கம் புதையக் கால்வீழ்த்து

தனிதரு தண்கார் தலைஇ

விளிஇசைத் தன்றால் வியலிடத் தானே'

(நற்.316)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com