மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வெண்ணிக் குயத்தியார் பாடலில் மனிதப்பண்பு!

புறநானூற்றுப் புலவர்கள் மனிதத்தையும் அதன் உரிமையையும் பெருமையையும் ஆற்றலையும் போற்றி வந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மதிப்பீடாகப் "புலவர்கள் வெற்றி பெற்ற அரசரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுபவர்' என்ற கருத்தோட்டமே நம் கண்முன் நிற்கும்.

News image
Updated On :5 மார்ச் 2016, 7:53 pm

புறநானூற்றுப் புலவர்கள் மனிதத்தையும் அதன் உரிமையையும் பெருமையையும் ஆற்றலையும் போற்றி வந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மதிப்பீடாகப் "புலவர்கள் வெற்றி பெற்ற அரசரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுபவர்' என்ற கருத்தோட்டமே நம் கண்முன் நிற்கும். அது நாமாகப் புரிந்து கொள்ளும் தவறான நிலையாகும். பரிசில் மட்டுமே வாழ்க்கையன்று; மனிதம் நிறைந்ததே வாழ்க்கை. மனித உரிமையைக் காப்பதே கடமை என்ற உணர்விற்கு முதலிடம் தந்தவர்கள் புலவர்கள். மனிதம் என்ற ஒன்றையே மனங்கொண்டவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட பலருள் ஒருவர்தான் வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற்புலவர்.இவரது பாடலில் பதிவாகியுள்ள மனிதப் பண்பின் சிறப்பை அறிவோம்.

சேரனும் சோழனும் பேரரசர்கள். வலிமை பொருந்தியவர்கள். இவ்விருவரும் தமக்குள் போரிட்டுக் கொண்டனர். வெற்றியா? தோல்வியா? என்று அறிய முடியாதபடி அரிதான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சோழன் எறிந்தவேல் சேரனின் மார்பில் பாய்ந்து மார்பைத் துளைத்து முதுகின் வழியே ஊடுருவிச் சென்றது. சேரமானோ வேல் உடலைத் துளைத்தபோது அயராது களத்தில் நின்றான். வேல் அவனது மார்பில்தான் தைத்தது. ஆனால், அது முதுகின் வழியே வெளிப்பட்டதால் முதுகிலும் புண் ஏற்பட்டது.

வேல் மார்பில் தைத்து முதுகின் வழியே ஊடுருவியதால், முதுகிலும் புண் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், சேரனுக்கோ மார்பில் தைத்தைவிட முதுகில் புண் உண்டாக்கியதே பெரும் வருத்தத்தைத் தந்தது. வேல் துளைத்தும் இறவாத வலிய உடலை வடக்கிருந்து இறக்கச் செய்தான் சேரன். முதுகில் புண் என்பது எத்துணை மானப்பிரச்னை என்பதைவிட மார்பில் புண்பட்டு இறத்தலே கடமை என்று வாழ்ந்த நம் முன்னோர்களைப் போற்றுவதற்குச் சொல்லே இல்லை எனலாம்.

அச்சேரமானின் மறப்பண்பைக் கண்ட பெண்பால் புலவர், அனலிடை மெழுகென உருகி நின்று அவனது நிலையைத் தன் பாட்டில் வடித்தார். அவர் சேரனின் மாண்பை மட்டும் கூறியிருந்தால் அப்பாட்டு அவ்வளவு சிறப்பாகக் கருதப்பட்டிருக்காது. சோழனின் தலையில் ஒரு குட்டு வைத்துப் பாடியுள்ளார்.

"சோழனே! நீ வல்லவன், ஆனால், சேரன் நல்லவன்' என்று கூறி மனிதத்தை மகுடமேற்றியுள்ளார். இவ்வரிய கருத்தால்தான் இப்பாடல் என்றும் இறவாத் தன்மை உடையதாக விளங்குகிறது. அப்பாடல் பின்வருமாறு:

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக

களிஇயல் யானைக் கரிகால் வளவ

சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற

வென்றோய் நின்னினும் நல்லவன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப்புகழ் உலகம் எய்திப்

புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.

(புறம் 66)

மேற்பாடல் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாகும். இவ்விடத்தில் அப்பாடல் எழுந்த சூழலையும் நோக்க வேண்டும்.

வெண்ணி சோழநாட்டு ஊர், அவ்வூரில் பிறந்த குயத்தியார் சோழனின் ஆட்சிக்கு உட்பட்டவர். தான் பிறந்த ஊரில் தன்னுடைய மன்னன் வெற்றி பெற்று நிற்கும்போது அவனைப் புகழ்ந்து பாடுவதுதானே குடிமகளாகிய குயத்தியாரின் கடமை. ஆனால், குயத்தியரோ சோழனைப் பார்த்து உன் பகைவன் உன்னைவிட நல்லவன் என்று கூறியுள்ளாரே. இவ்வாறு கூறுவது தவறல்லவா என்று கேட்கலாம். அத்துடன் நாட்டுப்பற்றும் என்ன ஆயிற்று என்றும் வினா எழுப்பலாம். இவ்விடத்தில்தான் அக்காலப் புலவர்களின் செம்மாந்த வாழ்வை அறிய முடியும்.

மேலும், அக்காலப் புலவர் பெருமக்கள் இனம், மொழி, நாடு முதலிய அனைத்தையும் கடந்த மனிதப் பண்புமிக்கவர்கள். இதற்குச் சான்றாக வெண்ணிக் குயத்தியார் திகழ்கிறார். பகைவனைப் புகழ்ந்ததற்காக மன்னன் தண்டிக்கக்கூடும் என்ற அச்ச உணர்வின்றி உன்னைவிட நல்லவன் என்று கூறிச் சேரனினும் நல்லவராக அப்புலவர் உயர்ந்து நிற்கிறார்.

-முனைவர் அ. சிவபெருமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.