
பெண்களின் நடைக்கு அன்னத்தையும், பேச்சுக்குக் கிளியையும், குரலுக்குக் குயிலையும் எனப் பறவைகளைப் பெண்ணியல்புகளுக்கு உவமைப்படுத்துவது வழக்கம். அவ்வாறு கூறும்போது, அவை ஆண்பறவை, பெண்பறவை எனப் பால் பிரித்துக் கூறப்பெறுவதில்லை. ஏனென்றால், அத்தன்மைகள் குறிப்பிட்ட அப்பறவை இனத்திற்குரிய பொதுவான குணங்கள். ஆனால், மயிலினத்தில் மட்டும் கலவம் விரித்தாடும் ஆண்மயிலே அழகாகத் தோற்றமளிக்கிறது. எனவே, ஆண்மயிலே பெரும்பாலும் மகளிர்தம் அழகுக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.
மணிபுரை எருத்தின் மஞ்ஞை போல், நின்
வீபெய் கூந்தல் வீசுவளி உளர (நற்.264:4,5)
விரைவளர் கூந்தல் வரைவளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி (புறம்.133:4,5)
கொடிச்சி கூந்தல் போல் தோகை
யஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன் (ஐங்.300:1,2)
என்றெல்லாம் பெண்களின் கூந்தலுக்கு மயில்தோகை உவமைப்படுத்தப்பெற்றுள்ளது. தோகையால் அழகு பெற்றதால் மயிலின் சாயலும், நடையும், கண்ணும், மென்மைத் தன்மையும்கூட மகளிருடன் ஒப்புமைப்படுத்தப் பெற்றுள்ளன. தன் அழகால் ஆண்மயில், இலக்கியங்களில் மட்டுமின்றி, மேலும் பல பெருமைகளைப் பெற்றிருப்பினும் அவற்றிற்கு விலையாக ஓர் இழப்பையும் பெற்றுள்ளது.
தொல்காப்பியர், தமிழுலகம் காலம்காலமாகப் பின்பற்றிவரும் முறைமைகளை மரபியலில் வகுத்துத் தந்துள்ளார். அவற்றுள் விலங்கினங்களின் ஆண்பாற் பெயர்களைப் பட்டியலிடும் நூற்பா(2), பறவைகளுக்கான ஆணினத்திற்குச் சேவல் எனும் பெயரீடு வழக்கிலிருந்தமையைத் தெரிவிக்கிறது. ஆனால், ஆண்மயிலை மட்டும் சேவல் என அழைக்கும் மரபு இல்லை என்பதனை,
"சேவல் பெயர்க் கொடை சிறகொடு சிவணும்
மாயிருந்தூவி மயில் அலம் கடையே' (தொல்.மரபு.48)
என்றும் தெரிவித்துள்ளது. இந்நூற்பாவில், சிறகு என்பது பறவை இனத்தைக் குறிப்பிடும் சினையாகுபெயர். அதாவது, பெரிய தோகையையுடைய மயிலைத்தவிர, பிற சிறகுடைய ஆண்பறவைகளுக்குச் சேவல் எனும் பெயர் பொருந்தும் என்பது நூற்பாவின் பொருள்.
திருமாலின் ஊர்தியான கருடப்பறவையே, அவர்தம் கொடியிலும் இடம்பெற்றுள்ளது. (சிவன், சக்தி, திருமால் முதலான புராணக் கடவுளருக்கு ஊர்தியும், கொடியும் ஒன்றே). அதனால் திருமாலைச் சேவலங் கொடியோன் என்றும்(1:11, 4:36,37), சேவ லூர்தியுஞ் செங்கண் மாஅல்(3:60) என்றும் குறிப்பிடும் பரிபாடல் அடிகள், கருடப் பறவையைச் சேவல் என்றே குறிப்பிட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் மேலும்,
"வண்ணப் புறவின் செங்காற் சேவல்' (நற்.71:8), "உள்ளுறைக் குரீஇ காரணற் சேவல்' (நற்.181:1), கூகைச் சேவல் (நற்.319:4), "கானக் கோழி கவர்குரல் சேவல்'
(குற.242:1), "நீருறைக் கோழிநீலச் சேவல்' (ஐங்.51:1), "வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்' (அக.33:5),
"கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்' (அக.346:3), அன்னச் சேவல் (புறம்.67:1) என ஆணினத்தைச் சார்ந்த பிற பறவைகள் சேவல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், ஆண்மயிலைச் சேவல் என இலக்கியங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பின் நான்கு இயல்களுக்கும் அமைந்த மிகச்சிறந்த உரையாகக் கருதப்படுவது பேராசிரியர் உரையாகும். இவ்வுரையில், இந்நூற்பாவுக்குரிய விளக்கப் பகுதியில், ஆண்மயிலானது சேவல் என அழைக்கப்பெறாமைக்குப் பேராசிரியர் கூறியுள்ள காரணம் பின்வருமாறு:
""மாயிரும் தூவி மயில் என்றதனால் அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலின், ஆண்பால் தன்மை இல என்பது கொள்க'' அதாவது, ஆண்மயில் தன் தோகையால் பெற்ற ஆடலாலும் அழகு நடையாலும், பெண்தன்மைகளை ஒத்திருந்தமையால் , மற்ற ஆண்பறவைகள் பெற்ற சேவல் எனும் பெயரீட்டினைப் பெறவில்லை என்கிறார். மேற்குறிப்பிட்ட நூற்பாவை அடுத்து,
"ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப' (தொல்.மரபு.49)
என அமைந்துள்ள தொல்காப்பிய நூற்பா, பேராசிரியர் கருத்துக்கு அரண் செய்கிறது. ஆற்றல்மிக்க ஆண் விலங்கினங்கள் மட்டுமே ஏற்றை எனக் குறிப்பிடப்பெற்றது போன்று, வலிமையுடைய ஆணினப் பறவைகள் மட்டுமே சேவல் என அழைக்கப்பெற்றிருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்பெறும் கோழியின் ஆணினத்தை அகநானூறு, "மனையுறைக் கோழி மறனுடைச் சேவல்'(அக.277:15) எனக் குறிப்பிட்டுள்ளமை மேலும் பேராசிரியர் கருத்தை உறுதி செய்கிறது.
சண்டையிடும் போர்க்குணம் பெற்றுள்ளமையால் மனையுறை ஆண்கோழி, மறனுடைச் சேவல் எனப் புலவர் குறித்துள்ளார் போலும். இயற்கையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்ட மனித இனம், பிற பறவையினங்களை தன் சுற்றுப்புறச் சூழல்களில் அதிகம் காணமுடியாமையாலும், கோழியானது வீட்டில் வளரக்கூடிய வளர்ப்புப் பறவை என்பதாலும் சேவல் எனும் அப்பெயர், மனைக்கோழியின் ஆணினத்திற்கு மட்டுமே நிலைத்துவிட்டது.
சேவல் எனும் பெயரீட்டைப் பற்றிக் கூறுவதால் மற்றொரு செய்தியையும் இங்கு குறிப்பது இன்றியமையாததாகிறது. அதாவது, குதிரையுள் ஆணினைச் சேவல் எனக்கூறும் வழக்கமும் இருந்துள்ளமையைத் தொல்காப்பியர் மரபியலில் தெரிவித்துள்ளார்(69). சிறகுகள் உடைய பறவைகளுக்கே உரிய சேவல் எனும் ஆண்பாற்பெயரை, குதிரைக்குக் கூறிய காரணம் என்னவாக இருக்க இயலும்? பறவைகள் வானத்தில் பறப்பது போன்று காற்றில் விரைந்து செல்லும் இயல்புடைய குதிரையைச் சேவல் என்றழைத்துள்ளனரோ என எண்ணத் தோன்றுகிறது. அதுவே காரணம் என்பதனைத் தொல்காப்பியப் பேராசிரியர் உரை உறுதிப்படுத்துகிறது. மேலும், தொல்காப்பியரே கற்பியலில்,
"வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை
உள்ளம்போல் உற்றுழி உதவும்,
புள்ளியற் கலிமா உடைமையான' (கற்.53)
எனக் குறிப்பிட்டுள்ளமை மேற்காணும் கருத்தை உறுதி செய்கிறது. ஆக, பறவை போல் விரைவாக ஓடும் தன்மை பெற்றுள்ளதால், விலங்கினமான ஆண்குதிரைக்குச் சேவல் எனப் பெயரளித்துள்ளனர். ஆனால், பறக்கும் பறவையினமான ஆண்மயிலோ, பெண்ணுக்குரிய அழகுத் தன்மையைப் பெற்றுள்ளதால் சேவல் எனப் பெயர்பெறாது போயிற்று. பழந்தமிழரின் ஒவ்வொரு பெயரீடும் உறுதியான காரணங்களும், பொருளும் கொண்டு வழங்கப்பெற்றவை என்பதை இப்பெயரீடுகள் உணர்த்துகின்றன.
இத்தகைய காரணங்களால், சேவல் எனும் பெயரீட்டைப் பெற இயலாது போன ஆண்மயில், பொதுப்பெயர்களான மஞ்ஞை, மயில் என்ற பெயர்களாலேயே குறிப்பிடப்பெறுகிறது. ஆண்பறவை என்பதை அடையாளப்படுத்த வேண்டிய இடங்களில், தோகை அடைமொழியாகப் பயன்படுத்தப்பெறுகிறது. ஆண்பறவை என்பதனை அடையாளம் காட்டும் மயிலின் தோகையே, ஆண்பறவையினத்திற்குரிய சேவலெனும் பெயரைப் பெறாமைக்கும் காரணமாயிற்று. மயிலுக்குப் பேகனிடம் போர்வைக் கொடையைப் பெற்றுத்தந்ததும் தோகைதான்; சேவல் எனும் பெயர்க்கொடையை இழக்கச் செய்ததும் தோகைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.