/

கவி பாடலாம் வாங்க - 19: இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் - 2

நேரிசை வெண்பாவைப் போலவும் இன்னிசை வெண்பாவைப் போலவும் மூன்று அடிகளால் வரும் வெண்பா, சிந்தியல் வெண்பாவாகும். சீரானாலும் அடியானாலும் மூன்றாக வந்தால் சிந்து என்ற அடையைப் பெறும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:41 pm

கி.வா. ஜகந்நாதன்

சிந்தியல் வெண்பா:

நேரிசை வெண்பாவைப் போலவும் இன்னிசை வெண்பாவைப் போலவும் மூன்று அடிகளால் வரும் வெண்பா, சிந்தியல் வெண்பாவாகும். சீரானாலும் அடியானாலும் மூன்றாக வந்தால் சிந்து என்ற அடையைப் பெறும். நான்கு அடி சரியான அளவு; மூன்று அடி சிந்து; இரண்டடி குறள். இவற்றை முன்பும் பார்த்தோம். இரண்டடியுள்ள வெண்பாவைக் குறள் வெண்பா என்பர். மூன்றடியுள்ள வெண்பாவைச் சிந்தியல் வெண்பா என்பர்.
நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியில் தனிச்சொல் வர, ஒரு விகற்பத்தாலோ இரண்டு விகற்பத்தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா.

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.

இது ஒரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை
நடத்தியவன் காந்தியெனும் நல்லான் - அடற்கெதிரே
ஆரேநின் றாற்றுகிற் பார்.

இது இரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.
தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலும் இரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

கண்ணன் அடியே கருதி வணங்குபவர்
எண்ணமெலாம் எண்ணியவா றீடேறும் என்பதனைத்
திண்ணமாய் நெஞ்சே தெளி.

இது ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

சொல்லிற்குள் ளேபொருளில் தோய்ந்துணர்வி லேயூறி
நல்லசுவை கண்டுவகை நாட்டமுடை யோர்பாவின்
இன்பமெலாம் காண்பர் இனிது.

இது இரு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல்
சூழாது நன்மைசெய்யும் தூயோர் அறமொன்றே
ஆற்றுவார் நல்லோர் அறி.

இது மூன்று விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. முதல் அடியில் தனிச்சொல் வந்தாலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவே ஆகும்.

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.