திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடுமழை காத்த "பனங்குடை'

'குடை' என்றால் கருமைநிறம்தான் என்ற நிலை மாறி தற்காலத்தில் வகைவகையான, பல வண்ணக் குடைகள் தயாரிக்கப்படுகின்றன.

News image
Updated On :10 பிப்ரவரி 2018, 9:56 pm

'குடை' என்றால் கருமைநிறம்தான் என்ற நிலை மாறி தற்காலத்தில் வகைவகையான, பல வண்ணக் குடைகள் தயாரிக்கப்படுகின்றன. சங்க காலத்தில் பனை ஓலைகளால் பின்னப்பட்டுத் தயாரிக்கப்பட்ட குடைகளை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். பனையோலை மழைநீரை உள்வாங்காமல் எதிர்த்து வெளியேற்றும் தன்மையுடையது. இதனை நன்கு அறிந்து வைத்திருந்த சங்ககாலப் பறவைகள் கூட மழையில் நனையாமல் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்காகப் பனை ஓலைகளாலான கூடுகளை மரங்களின் மேல் அமைத்துக்கொண்டு வாழ்ந்தன என்பதை இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன. பறவைகளின் இத்தகைய கூடுகள் "குடம்பை' என்று அழைக்கப்பட்டன. உயர்ந்த மணல் திடலில் நெடிது வளர்ந்திருந்த மரமொன்றின் உச்சியில், நெருங்கிய பனைமடலாற் கட்டிய கூட்டின்கண் இருக்கும் வெண்ணிற நாரை பற்றிக் கூறும் நற்றிணை (பா.199),

'ஓங்கு மணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடற் குடம்பைப் பைதல் வெண்குருகு'

என்கிறது. அன்றில் பறவையும்கூட, இவ்வாறே மழைத்துளி நுழையாத பனைமடலால் "குடம்பை' யை உருவாக்கி, அதில்; வதிந்திருந்த செய்தியை மற்றொரு பாடலில் (நற்.303) விளக்குகின்றது.
"குடை' என்ற நிலையில் பனை ஓலைக் குடைகளினூடே, தென்னையோலை, தாழைமடல் என்பனவற்றால் பின்னப்பட்ட தென்னங் குடைகளும் தாழங்குடைகளும் பயன்பாட்டில் இருந்தன. என்றாலும், அவற்றிற்கு விறைப்புநிலை மாறிச் சுருங்கும் தன்மையுண்டு என்பதனால், மழைத்துளிகள் எளிதில் உட்புகாத பனங்குடைகளை மக்கள் பெரிதும் விரும்பியிருக்கக்கூடும்.
தற்கால துணிக்குடைகளைப் போலவே முற்காலத் தாழை, தெங்கு, பனங்குடைகள் மடக்கக்கூடியன அல்ல. இத்தகைய குடைகள் 20-ஆம் நூற்றாண்டுவரைத் தமிழகச் சிற்றூர்களில் ஆங்காங்கே புழக்கத்திலிருந்தன. இதே காலகட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கைவினைக் கலைஞர்களால் கலைநுணுக்கத்துடன் பல வண்ணங்கள் தோய்க்கப்பெற்றுப் புழங்கப்பட்டன.
மழையை மறைத்து மனிதனைக் காத்த பனைஓலைக் குடை குறித்து ஒளவையார் புறநானூறு இலக்கியத்தில் (பா.290) பாடியுள்ளார். தற்காலக் குடைகள் சாதாரண மழையை மட்டும் தாங்கவல்லன. ஆனால் முற்காலப் பனங்குடைகளோ, கடுமழையிலிருந்தும் காக்கவல்லன; இதனை நன்கு அறிந்திருந்த ஓளவையார், குடையின் சிறப்பினை ஓர் உவமையின் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்.
ஓர் அரசன் இன்னொரு அரசனுடன் பகை கொண்டான். பகைவன் வெட்சிப் பூச்சூடி வந்து இவனது ஆனிரைகளைக் கவர்ந்து சென்றுவிட்டான். உடனே இவன், கரந்தை பூச்சூடி அவற்றை மீட்கப் புறப்பட்டான். போர்ப் பறை முழங்கிற்று. வீரர்கள் அனைவரும் போருக்காகத் திரண்டனர்.
அரசன் படைத் தலைவர்களைக் கூட்டி, "உண்டாட்டு' ஒன்றினை நிகழ்த்தினான். இதில் ஒவ்வொரு படைமறவரின் குடிச்சிறப்பையும் சான்றோர் ஒருவர் மன்னனிடம் எடுத்துரைப்பது வழக்கம். அதற்காக ஒளவையாரும் அங்கு வந்திருந்தார்.
படைவீரர் ஒவ்வொருவரின் குடிப்பிறப்பு, செயல்திறம் போன்றவற்றை எடுத்துரைத்த பின், அவற்றைக் கேட்கும் அரசன் மகிழ்ந்து பாராட்டி, தக்கன கூறிப் பொற்கிண்ணத்தில் இனிய கள்ளினை ஊற்றி அருந்தத் தருவான்.
ஒளவையார், வீரர்களின் குடிச்சிறப்பைத் தனித்தனியே எடுத்துரைக்கிறார். அவ்வரிசையில் வீரன் ஒருவன் எதிர்ப்படுகிறான். அவனது பெருமையைக் கூறுமுகத்தான் இனிய பாடலொன்றினை அவர் பாடுகின்றார்.
"வேந்தனே! இக்கள்ளை முதலில் இந்த வீரனுக்குத் தந்துவிட்டுப் பின்னர் நீ உண்பாயாக! அந்த அளவுக்குச் சிறப்புடையவன் இந்த வீரன். எப்படியென்றால், இவனது பாட்டனாகிய வீரன், உனது பாட்டனாராகிய வீரத்தலைவனைக் காக்கும் நோக்கில், பகைவர் எறிந்த வேல், வண்டிச் சக்கரத்துக் குடத்துள் பதிந்த ஆரக்கால் போலப் பதியுமாறு தனது மார்பில் ஏற்று மாண்டு போனான். அவனது பெயரனாகிய இவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?
எத்துணைக் கடுமையாகப் பொழியும் மழையையும் தடுத்துத் தன்னைப் பிடித்திருப்போரைக் காக்கும் பனையோலையால் மிடையப்பட்ட "பனங்குடை' போல, பகைவர் உன் மீது எறிய, விரைந்து வரும் வேலினைத் தான் இடைநின்று ஏற்று, உன்னைக்காக்கக் கூடியவன், பல போர் செய்து மறப்புகழ் பெற்றவன்' என்கிறார்.

"இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர் 
இனக்களிற் றியானை யியறேர்க் குரிசில்
நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்
அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும்
உறைப்புழி யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே'

மேற்குறித்த பாடலில், பனங்குடை பற்றி வருணிக்காவிட்டாலும், இடைமறித்துக் காக்கும் சிறந்த மறவன் ஒருவனின் செயல் திறனுக்கு அதனை உவமையாக்கிக் கூறுவது பொருத்தமென்று கருதியே, ஒளவையார் இவ்வாறு "பனங்குடை' யை உவமித்துப் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.