கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கவி பாடலாம் வாங்க - 30

முன்பு ஏழு தளைகளின் பெயரை மாத்திரம் சொல்லி வெண்டளையின் இலக்கணத்தை விரிவாகச் சொன்னேன். தளை பார்க்கும் வழக்கம் வெண்பாவிலும்,

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:02 pm

கி.வா. ஜகந்நாதன்

2. தளை
முன்பு ஏழு தளைகளின் பெயரை மாத்திரம் சொல்லி வெண்டளையின் இலக்கணத்தை விரிவாகச் சொன்னேன். தளை பார்க்கும் வழக்கம் வெண்பாவிலும், கட்டளைக் கலித்துறையிலும் மட்டும் இருக்கிற தென்பதையும் முன்பு கூறினேன். மற்றத் தளைகளையும் இனித் தெரிந்து கொள்ளலாம்.
1. வெண்டளை: இரண்டு வகைப்படும்; இயற்சீர் வெண்டளை; வெண்சீர் வெண்டளை. மாமுன் நிரையும் விளமுன் நேரும் காய்முன் நேரும் வருவன வெண்டளை.
2. ஆசிரியத்தளை: நேரொன் றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை என்று இரண்டு வகைப்படும். நின்றசீர் ஆசிரியச் சீர் அல்லது இயற்சீராக இருக்க, வரும் சீரின் முதலசையோடு ஒத்து நிற்பது ஆசிரியத் தளை. மாமுன் நேர் வந்தால் நேரொன் றாசிரியத்தளை; விளமுன் நிரை வந்தால் நிரையொன் றாசிரியத்தளை. வருகின்ற சீர் எதுவாக இருந்தாலும் அதைக் கவனிக்க வேண்டியதில்லை. அதன் முதல் அசையை மாத்திரம் பார்த்தால் போதும். ஆனால், நிற்கும் சீர் ஈரசைச் சீராக இருந்தால்தான் ஆசிரியத்தளை வர முடியும்.
"காமன் வேவக் கண்ட கண்ணன்
யாமம் ஆடும் எந்தை யானைத்
தோலைப் போர்த்த சோதி
காலைப் பற்றிற் காமம் போமே'
இந்தப் பாடலில் எல்லாச் சீர்களுமே தேமாவாக வந்தது. பாட்டு முழுவதும் நேரொன் றாசிரியத்தளை வந்தது காண்க.
"திருமழை பொழிந்திடும் இருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப்
பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே'
இந்தப் பாட்டில் திருமழை-பொழிந்திடும் என்பதில் நிரையொன்றாசிரியத்தளை வந்தது. பொழிந்திடும்-இருணிற, இருணிற-விசும்பின், விண்ணதி - ரிமிழிசை, ரிமிழிசை-கடுப்ப, பண்ணமைந் -தவர்தேர் என்னும் இடங்களில் எல்லாம் நிரையொன் றாசிரியத்தளையே வந்திருக்கிறது. விசும்பின் - விண்ணதிர் என்பது நேரொன்றாசிரியத்தளை. கடுப்பப் - பண்ணமை என்பதும் அது. அவர்தேர் - சென்ற, சென்ற-வாறே என்ற இடங்களிலும் நேரொன் றாசிரியத்தளை வந்தது.
நின்ற சீர் ஆசிரியச் சீராக இருக்க, வரும் சீர் முதல் அசை ஒத்து நின்றால் ஆசிரியத் தளையாகும். ஒவ்வாமல் நின்றால் இயற்சீர் வெண்டளையாகும் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வது நலம்.
சற்றே விளக்கமாகப் பார்த்தால் இயற்சீர் அல்லது ஈரசைச் சீர் நிற்க, எந்தச் சீர் வந்தாலும் இயற்சீர் வெண்டளையும் ஆசிரியத்தளையும் அமையும். அவை தனித்தனி இவ்விரண்டு வகை.
மாமுன் நிரை
விளமுன் நேர் - இவை இயற்சீர் வெண்டளை.
மாமுன் நேர்
விளமுன் நிரை - இவை ஆசிரியத்தளை.
3. கலித்தளை: காய்ச்சீராகிய வெண்சீர் நிற்க, வரும் சீரின் முதல் நிரையாக வரின் கலித்தளையாகும். இது ஒரே வகை.
"செல்வப் போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி' இந்த அடியில் நான்கு சீர்களும் காய்ச்சீர்கள். காய் முன் நிரை வந்தமையால் கலித்தளையாயிற்று. செல்வப் போர்க் - தேமாங்காய், கதக்கண்ணன் - நிரை நேர்நேர் என்பதைக் காண்க.
4. வஞ்சித்தளை: கனிச் சீருக்கு வஞ்சிச்சீர் என்று பெயர். கனிச்சீர் நிற்க, வரும் அசை நிரையானால் ஒன்றிய வஞ்சித்தளை; நேர் ஆனால் ஒன்றாத வஞ்சித் தளை.
"மந்தாநிலம் மருங்கசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை'
இந்த அடிகளில் முதல் இரண்டில் தேமாங்கனி கருவிளங்காய் என்றவாய்பாட்டுச் சீர்கள் வந்தன. கனிமுன் நிரை வந்தமையின் இது ஒன்றிய வஞ்சித் தளை. மூன்றாவது அடியில் தேமாங்கனி - கூவிளங்கனி என்ற வாய்பாட்டுச் சீர்களில் கனிமுன் நேர் வந்தது. இது ஒன்றாத வஞ்சித்தளை. ஆகவே, மொத்தம் ஏழு தளைகள் இருத்தலைப் பார்த்தோம்.
1. இயற்சீர் வெண்டளை, 2. வெண்சீர் வெண்டளை, 3. நேரொன் றாசிரியத்தளை, 4. நிரையொன் றாசிரியத்தளை, 5. கலித்தளை, 6. ஒன்றிய வஞ்சித் தளை, 7. ஒன்றாத வஞ்சித் தளை.
ஈரசைச் சீர் நிற்க அமையும் தளைகள் மூன்று: 1. இயற்சீர் வெண்டளை, 2. நேரொன் றாசிரியத்தளை, 3. நிரையொன் றாசிரியத் தளை.
காய்ச்சீர் நிற்க அமையும் தளைகள் இரண்டு: 1. வெண்சீர் வெண்டளை, 2. கலித்தளை.
கனிச்சீர் நிற்க வரும் தளைகள் இரண்டு: 1. ஒன்றிய வஞ்சித் தளை, 2. ஒன்றாத வஞ்சித் தளை. 
வேறு ஒரு வகையிலும் இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம். ஒத்து வரும் தளைகள், ஒவ்வாது வரும் தளைகள் என்று பிரிக்கலாம்.
ஒப்பன: 1. வெண்சீர் வெண்டளை, 2. நேரொன் றாசிரியத்தளை, 3. நிரையொன் றாசிரியத்தளை, 
4. ஒன்றிய வஞ்சித்தளை.
ஒவ்வாதன: 1. இயற்சீர் வெண்டளை, 2. கலித்தளை, 3. ஒன்றாத வஞ்சித்தளை.
தளையைப் பற்றி இலக்கணத்தைச் சொல்லும் யாப்பருங்கலக் காரிகைச் சூத்திரம் வருமாறு:
"தண்சீர் தனதொன்றில் தன்தளை யாம்;
தண வாதவஞ்சி
வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்து; 
வல் லோர்வகுத்த
வெண்சீர் விகற்பம் கலித்தளை யாய்விடும்; 
வெண்டளையாம்
ஒண்சீர் அகவல் உரிச்சீர் 
விகற்பமும் ஒண்ணுதலே'
"தன் சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது தன் தளையாம். வஞ்சிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது ஒன்றாத வஞ்சித்தளையாம். வெண்பா உரிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது கலித்தளையாம். ஆசிரியவுரிச்சீர் நின்று வருஞ்சீர் முதலசையோடு ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாம்' என்பது இதன் பொருள்.
(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.