கம்பர் செய்த பிழை!

"கம்பர் செய்த பிழை' என்னும் தலைப்பே மலைப்பாக இருக்கிறதல்லவா? கல்வியில் பெரியவர் கம்பர் பிழை செய்வாரா? அப்படிக் கம்பர் செய்த பிழைதான் என்ன என்று கேட்டுவிடாதீர்கள்!
கம்பர் செய்த பிழை!


"கம்பர் செய்த பிழை' என்னும் தலைப்பே மலைப்பாக இருக்கிறதல்லவா? கல்வியில் பெரியவர் கம்பர் பிழை செய்வாரா? அப்படிக் கம்பர் செய்த பிழைதான் என்ன என்று கேட்டுவிடாதீர்கள்! கம்பர் தம் காப்பியத்தில் "பிழை' என்ற சொல்லை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளார். பாத்திரப் படைப்பிலும், பொதுமைப்பட வரும் கவிக் குரலிலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் "பிழை' என்ற சொல் இடம் நோக்கிக் கம்பரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

"பிழை' என்ற சொல்லின் நேரடிப் பொருளையும் குற்றம், குறை, தவறு, கொல்லுதல், துன்பம், தீமை, தவறுவது அல்லது தப்புவது ஆகிய பொருள்களிலும் "பிழை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கம்பர் எடுத்துரைக்கிறார். இக்காப்பியத்தில் குறை, தவறு என்று பொருள்தரும் இடங்களே மிகுதியாகஉள்ளன.

""பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே'' என அகலிகை, கோதமர் காலில் விழும் நிகழ்வில் பிழை நேரடியாக "சிறியவர் செய்த பிழையை பெரியவர் பொறுத்தல்' என்ற பொருளில் எடுத்தாள்கிறார். கோசலையின் மன வருத்தத்தை, ""என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால்'' எனக் காட்சிப்படுத்துகிறார்.

நகர் நீங்கு படலத்தில் இலக்குவனிடம் இராமன் "நதியின் பிழையன்று' என்று வரும் பாடலில் "விதியின் பிழை' என அவன் சொல்கிறான். சூர்ப்பணகை கூற்றாக ""பின் இவளை ஒருவரும் பாரார் என்றே அரிந்தீர்; பிழை செய்தீரோ'' எனச் சொல்கிறாள்.

தாடகையை வாலி கடிந்து உரைக்கும் சூழலில், ""என் செய்தாய் பிழைத்தனை பாவி; உன் பெண்மையால்'' என்று பேசுகிறான். மேலும் பல இடங்களிலும் "தவறு' என்ற பொருளிலேயே கம்பர் "பிழை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

அயோத்தியா காண்டத்தில் கைகேயியிடம் தசரதன் கெஞ்சும் இடத்து, ""பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழையாமையோ'' என்ற இடத்தும்; சடாயு உயிர் நீத்த படலத்தில், ராகவன் சீற்றத்தை ஜடாயு தணிவிக்கும் இடத்து, ""உம் பிழை என்பதல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?'' என வருமிடத்தும்; வாலி வதையில், ராமனை வாலி இகழ்ந்துரைக்குமிடத்து, ""பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு, ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ'' என வருமிடத்தும்; விபீடணன், ராவணனிடம் விடைபெற்று இலங்கையை விட்டுப் போகும்போது, ""அத்த! என் பிழை பொறுத்தருள்வாய்'' என்று சொல்லுமிடத்தும், குற்றம் என்று பொருள் தருமாறு "பிழை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கம்பர்.

தவறுதல் அல்லது தப்புதல் என்று பொருள் தருமாறும் "பிழை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலகாண்டத்தில் வழிநடைக் காட்சியாக, ""பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்'' எனக் காட்டுமிடத்தும்; வீடணன் கூற்றாக ""பேரருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பதுண்டோ?'' எனச் சொல்லுமிடத்தும், சுந்தர காண்டத்தில், ""வரம் பிழைக்கும் மறை பிழையாதவன்; சரம் பிழைக்கும், என்று எண்ணுதல் சாலுமோ?'' என்று ராவணனிடம் அனுமன் பேசும் இடத்தும்; அதிகாயன் அனுமனிடம் வீரம் பேசும்போது, ""பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்'' என்ற இடத்தும், மற்றும் சிற்சில இடங்களிலும், தப்புதல் அல்லது தவறாத என்ற பொருளில் "பிழை' என்ற சொல்லைக் கம்பர் கையாண்டிருக்கிறார்.

தாடகையைக் கொல்லச் சொல்லும் கோசிக முனிவர் கூற்றில் ""நாண்மையே உடையார்ப் பிழைத்தால்'' என வருமிடத்து, பிழைத்தல் என்பதற்குக் "கொல்லுதல்' என்று பொருள்படுமாறு கூறுவார். பிழை என்பது துன்பம் என்ற பொருளில் வருவதையும் காண முடிகிறது.

சூர்ப்பணகை புலம்புமிடத்து, ""பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை'' என வருவது துன்பம் என்ற பொருளில் ஆகும். தீமை என்ற கருத்தினைத் தருவதற்கும் பிழை என்ற சொல்லைக் கம்பர் பயன்படுத்துவார். அனுமன் மண்டோதரியைக் காணும்போது, ""பிழைகொல் நன்மை கொல் பெறுவது என ஐயுற்று'' என வருமிடத்துத் தீமை என்ற பொருள் தரும்படி எடுத்தாள்கிறார்.

கைகேயி மீது தசரதன் கொண்ட கோபம் தணியுமாறு வரும் யுத்த காண்டம் மீட்சிப் படலத்தில், ""ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது '' என்று தொடங்கும் பாடலில் அடிதோறும் பிழை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இங்குக் கம்பரால் நமக்கு நல்லதொரு தமிழ்ச்சொல் கிடைக்கிறது. "இமாலயத் தவறு' என்று ஒரு வழக்கு உண்டல்லவா! "நான் இமாலயத் தவறு செய்துவிட்டேன்' என்று சொல்வது வழக்கம். கண்ணுக்குத் தெரியும் இமயத்தைக் காட்டிலும், "வான் பிழை' என்று சொல்வது சரியாய் இருக்குமல்லவா?

"வான்பிழை' என்கிற கம்பரின் சொல்லாடல், நல்லதொரு தமிழ்ச் சொல்லாகப் (வழக்காடலாக) பயன்படுத்த உகந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com