பொன்னம்பலனாரின் ‘நீதி வெண்பா’ உரை!

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட பல நீதிநூல்கள் உள்ள நம் தமிழில் ‘நீதிவெண்பா’ என்றொரு நூலும் நீதிநெறியைக் கூறும் நூலாகும்.
பொன்னம்பலனாரின் ‘நீதி வெண்பா’ உரை!

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட பல நீதிநூல்கள் உள்ளன. தமிழில் "நீதிவெண்பா' என்றொரு நூலும் நீதிநெறியைக் கூறும் நூலாகும். இந்நூலை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை. கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்களைக் கொண்ட அருமையான நூல் இது. இதற்கு யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவரான பொன்னம்பலனார் என்பவரின் உரை விளக்கம் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
 "உணவே மருந்தாகும்' என்பது நம் முன்னோர் வாக்கு. நோய்கள் பல நம்மை அச்சுறுத்துவதற்குக் காரணம் சரியான உணவை முறையாக உண்ணாமைதான். நமது உணவு பழக்கங்களே நோய்களைத் தீர்மானிக்கின்றன. திருவள்ளுவப் பெருந்தகை, "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது / அற்றது போற்றி உணின்' (942) என்று உணவு உண்ணும் முறையைச் சொல்லியிருக்கிறார். நீதி வெண்பாவில் உணவு உண்ணும் முறையை நான்கு வகைகளில் உரைக்கிறார் அதை இயற்றிய புலவர்.
 "ஒருபோது யோகியே யொண்டளிர்க்கை மாதே
 இருபோது போகியே யென்ப - திரிபோது
 ரோகியே நான்குபோ துண்பா னுடல்விட்டுப்
 போகியே யென்று புகல்' (பா. 9)
 "ஒருபோது (ஒரு வேளை) மட்டும் உணவு உண்பவன் யோகி எனப்படுவான்; இரண்டு வேளை உண்பவன் போகி எனப்படுவான்; மூன்று வேளை உண்பவன் நோயாளியே; நான்கு வேளை உண்பவன் இறப்பவனே' என்கிறார். மூன்று வேளை உணவு உண்பது நோய்க்கு இடம் தரும் என்கிறார். நம் முன்னோர் காலை, மதியம் என்று இரண்டு வேளை மட்டுமே உணவு உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள்.
 யோகிக்கு ஒருவேளை போஜனமும், போகிக்கு இரண்டு வேளை போஜனமும் உரியன; மூன்று கால போஜனம் நோயையும், நான்கு கால போஜனம் மரணத்தையும் உண்டாக்கும் என்கிறார்.
 ஒருவனுக்குத் தாய் இறந்துவிட்டால் சுவையான உணவு கிடைக்காது. தந்தை இறந்துவிட்டால் சிறந்த கல்வி கிட்டாது. உடன்பிறந்த சகோதரர்கள் இறந்துவிட்டால் துணையாக நிற்கும் தோள் வலிமை போய்விடும். ஆனால், மனைவி இறந்தாலோ இவை அனைத்தும் போய்விடும் என்கிறது மற்றொரு பாடல்.
 "மாதா மரிக்கின் மகனாவி னற்சுவைபோந்
 தாதா வெனிற்கல்வி தானகலும் - ஓதினுடன்
 வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போமனையேல்
 அந்தோ இவையாவும் போம்' (பா. 61)
 உறவினர் இல்லாத இல்வாழ்வு துன்பம் தரும் என்பதை, "பந்தமில்லாத மனையின் வனப்பின்னா' என்று கபிலர் குறிப்பிட்டுள்ளார். இல்லற இனிமைக்கு மனைவியே துணை என்பதை சங்க நூல்கள் சொல்கின்றன.
 "தாயில்லாத சிறுவனுக்குப் போஜன சுகமும், பிதா இல்லாத சிறுவனுக்குக் கல்வியும், சகோதரர் இல்லாதவனுக்குத் தைரியமும், மனைவி இல்லாதவனுக்கு எல்லாச் சுகமும் கெடும்' என்பது பொன்னம்பலனார் உரை.
 -சே. ஜெயசெல்வன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com