கல்லா இளமையும் கனிந்த முதுமையும்!

இளமை என்பது இளம் பருவத்தின் தென்றல் காற்று; முதுமையோ பக்குவத்தின் அனுபவக்கீற்று.
கல்லா இளமையும் கனிந்த முதுமையும்!


இளமை என்பது இளம் பருவத்தின் தென்றல் காற்று; முதுமையோ பக்குவத்தின் அனுபவக்கீற்று. இளமை ஆர்ப்பரிக்கும் அருவி; முதுமையோ அமைதியாய் ஒடுங்கி ஓடும் சிற்றோடை. ஆடிக்களித்து அகமகிழும் வாழ்க்கைக்கு வரவேற்பு வளையம் வைப்பது இளமை; முதுமையோ, ஆடி அடங்கிக் கழிந்த வாழ்க்கையில் எண்ணங்களால் நினைவு மண்டபம் அமைப்பது. திசைகாட்டிய  வாழ்க்கையை அசை போடவைப்பது முதுமை. தொடர்ந்து வந்த வாழ்க்கைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது முதுமை.

இளமைப்பருவம் கழிந்ததை எண்ணிப் பார்க்காத இதயங்கள் உண்டா? இதுவும் ஒருவகையில் கையறு நிலைதான். கழிந்த காலங்களை நினைந்து வருந்தும் வருத்தத்தை  "கல்லா இளமை அளிதோ தானே யாண்டுண்டு  கொல்லோ' என்கிற புறப்பாடல் (243) ஒன்றில்  பழைய நினைவுகளை அசைபோடுவதுடன், அதை  அருமையாகக் காட்சிப்படுத்துவார் தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர். 

இளமை கழிந்த ஏக்கத்தை ஒரு ஜப்பானியப் பாடலும் சுட்டியிருப்பது புறநானூற்றுப் பாடலோடு ஒப்பு நோக்குதற்குரியது. "மூங்கில் வெட்டும் முதியோன்' என்பது பாடலின் தலைப்பு. அதை எழுதியவர் "யமோனா ஒகூரா' என்பவர். அக்கவிஞர் தம் வாழ்க்கை நுகர்ச்சியைப் புறநானூற்றுப் புலவர் போலவே பதிவு செய்துள்ளார். இளமை கழிந்து முதுமையுற்றதை எண்ணிப் பார்த்து, 

"காலத்தின் முன்னாக 
உதவி அற்றவர்கள் நாம் 
ஆயிரமாயிரம் துயர்கள்... 
ஒன்றை ஒன்று தொடரும்... 
கைவளை அணிவித்து மகளிரோடு 
கைகோத்துக் கழித்த நாள்கள் 
களிப்போடு கழிந்தன 
அப்பருவம்  நில்லாமல் 
விரைவாகக் கழிந்ததே! 
நத்தையின் உட்பகுதி 
வெண்மையைப்போல 
நரையை அல்லவா 
தந்துவிட்டது காலம்! 
கண்களிலே ஒளிவீச்சும் 
காமத்தின் இளமையும் 
கழிந்தன கழிந்தன... 
 
உறையிலிருந்து 
உருவிய  வாளினைக் 
கையில் பிடித்துக் 
குதிரை ஏறிக்குவித்த வெற்றிகள்... 
 அந்த இளமைக்காலம் 
இப்போது துணை செய்யுமா? 
கைகோத்துப் படுத்துறங்கிய காலங்கள் 
இனி வருமா? 

என்பது அப்பாடல். இருமொழிப் புலவர்களின் சோக உணர்ச்சிகள் ஒன்று போலவே உள்ளன. காதலும், இளமை வீரமும் துடிப்போடு அமைந்த இளமைக் காலத்திற்கான அடையாளங்கள் எனில், அவற்றை எண்ணிப் பார்க்கும் முதுமைக் காலம் அனுபவத்தின் முகவரி அல்லவா? இளமை கழிந்ததை எண்ணியும், நெஞ்சில் கனிந்த நேய உணர்வுகளை நினைத்தும் பார்ப்பதாகிய இவை போன்ற பாடல்கள் எந்த மொழியில் இருந்தாலும், உணர்ச்சிச் சிறகு விரித்து இலக்கிய வானில் உலா வரும்போது அவற்றை வரவேற்று மகிழ்வது இயல்புதானே! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com