மூவேந்தரில் புலவர் மேல்...

தவத்திரு இராமானந்த சுவாமிகள் சிரவையில் அமைத்த திருமடம் "கெளமாரத் திருமடாலயம்' என்றும், அதன் வழி உருவான ஆதீனம் "சிரவை ஆதீனம்' என்றும் போற்றப்படுகிறது. இதன் குரு முதல்வர் இராமானந்த சுவாமிகள்.
மூவேந்தரில் புலவர் மேல்...


தவத்திரு இராமானந்த சுவாமிகள் சிரவையில் (கோவையில் உள்ள சிரவணம்பட்டி ஊரை "சிரவை' எனவும் அழைப்பர்) அமைத்த திருமடம் "கெளமாரத் திருமடாலயம்' என்றும், அதன் வழி உருவான ஆதீனம் "சிரவை ஆதீனம்' என்றும் போற்றப்படுகிறது. இதன் குரு முதல்வர் இராமானந்த சுவாமிகள்.

ஒரு சமயம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை செய்த அரும்பணியைப் பாராட்டி, கோவை மாநகரில் பெரிய விழா ஒன்று நடத்தி, அதில் அவரை கெளரவிக்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் விரும்பினர்.

சிரவை ஆதீன கெளமார மடாலய 2-ஆவது மகா சந்நிதானமாக விளங்கிய தவத்திரு கந்தசாமி சுவாமிகள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குறித்து ஏற்கெனவே ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அப்பாடல் இதுதான்:

தும்பியே நிகர் மீனாட்சி சுந்தரம்
பிள்ளை என்போன்
பம்பிசைத் தலபுராணம் பலபல
பாடித் தீர்த்தோன்
அம்பிகை மயூரமாகி அரனைப் பூசித்த ஊரில்
வெம்பிணக் கணுவும் இன்றி மிகக்
களித்து உறவானனே!

என்று கண்கண்ட புலவர்கள் வரிசையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பர்கள் விரும்பியதுபோல, 80 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் அவரைப் போற்றிப் பாராட்டுவதற்காக சிரவை ஆதீன கெளமார மடாலயத்தின் மூன்றாவது சந்நிதானமாக எழுந்தருள இருக்கும் தவத்திரு சுந்தர சுவாமிகளும், புலவர் பெருமக்களும் சேர்ந்து, அவர்களின் ஞானாசிரியராக விளங்கும் கந்தசாமி சுவாமிகளிடம் சென்று, விழாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை வாழ்த்திப்பாட பாடல் பாடித் தரவேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

இதைக் கேட்ட கந்தசாமி சுவாமிகள், சிறிது நேரத்தில் 10 பாடல்கள் கொண்ட ஒரு பதிகத்தை எழுதித் தந்தார். அதில் ஒரு பாடலைச் சொல்லி அவர் பெருமையை விளக்கினார்.

இசை கொள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
என்பவர் மூவரும் மகிமைத்
திசைகொள் சீர்பாண்டி ஒன்றினை ஆட்சி
செய்தனர் ஒருவன் நீ முப்பேர்
நசைகொளத் தாங்கி ஆங்குஅதற் கேற்ப
நாடொரு மூன்றிலும் என்றும்
மிசை கொள்சீர் பெற்று வேந்தரில்
புலவர் மேலெனல் விளக்கினை மாதோ!

உமா தேவியார் மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு "மீனாட்சி' என்ற
பெயரில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார். அகிலாண்டேஸ்வரரான சிவபெருமான் சோம "சுந்தரம்' என்ற பெயரில் ஆட்சி செய்தார்.

"பிள்ளை'யாகிய முருகப் பெருமான் உக்கிரகுமார பாண்டியனாக ஆட்சி செய்தார். மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு மீனாட்சி, சுந்தரம், பிள்ளையாகிய மூவரும் பாண்டிய நாடு ஒன்றையே ஆட்சி செய்தனர்.

ஆனால் பெருந்தகையீர் நீங்கள், "மீனாட்சிசுந்தரம் பிள்ளை' என்ற மூவருடைய பெயரையும் தாங்கி சேர, சோழ, பாண்டிய நாடாகிய மூன்றிலும் என்றும் தமிழ் இசையாகி புகழ்பெற்று, மூவேந்தரில் புலவர் மேல் என்பதை விளக்கி மெய்ப்பித்துக் காட்டினீர். "மன்னருக்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை; கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்ற வகையில் தமிழ் விளங்கும் மூன்று நாட்டிலும் சிறப்பாக விளங்குகின்றீர்' என்ற நயமுடன் அமைந்தது கந்தசாமி சுவாமிகள் அருளிய பாடல்.

இந்த இனிய பாடலைக் கேட்ட புலவர் பெருமக்கள் பெரிதும் மகிழ்ந்து, சந்நிதானத்தைப் போற்றி வாழ்த்தி வணங்கினர் என்பது வரலாறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com