இந்த வாரம் கலாரசிகன் - (10-07-2022)
வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்று சொல்வார்கள். அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, நடிகர் சிவகுமாருக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும்.


வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்று சொல்வார்கள். அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, நடிகர் சிவகுமாருக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகக் கழித்தல் என்பதில் அவர் ஓர் எடுத்துக்காட்டு. எதிலும் ஒரு ஒழுங்குடனும், திட்டமிடுதலுடனும் இருப்பது என்பதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டும்தான்.
எனக்கும்கூட டைரி எழுதும் பழக்கம் உண்டு. ஆனால், நடிகர் சிவகுமாரின் டைரியைப் போல எந்தவொரு விவரமும் விடுபடாமல் என்னால் எழுத முடியவில்லை. நானும்கூட எனது கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றவற்றை பாதுகாப்பவன்தான். ஆனால், அவரைப்போல திட்டமிட்டு, ஒழுங்காக சேகரிக்க முடியவில்லை. ஒரு வகையில் பார்த்தால், அவர் நடந்த பாதையையொட்டி தத்தித் தத்தித் தளர்நடை போடத்தான் என்னால் முடிந்திருக்கிறது.
ஓவியராக, திரையுலக நட்சத்திரமாக, நாடக மேடை அனுபவசாலியாக, சின்னத்திரை நடிகராக என்று பல பரிமாணங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து, ஒரு கட்டத்தில் தனக்குப் பின்னால் இருக்கும் ஒளிவட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இலக்கியம் பேச அவர் முற்பட்டபோது, ஒட்டுமொத்தத் தமிழகமே அவரை வியந்து பார்த்தது. நானும் ஏதோ இலக்கியம் பேசுகிறேன் பேர்வழி என்று மேடையில் வழியாமல், ஆழ்ந்து படித்து, அறிஞர் பெருமக்களுடன் ஆய்வு நடத்தி, கம்பனின் ராமகாதையையும், மகாபாரதத்தையும் அவர் தமது பாணியில் அரங்கேற்றியபோது, அறிவுலகம் ஆச்சரியத்தில் சமைந்தது.
கடந்த மூன்றாண்டுகளாக ஒட்டுமொத்த உலகத்தையும் கொள்ளை நோய்த்தொற்று முடக்கிப் போட்டிருக்கிறது. ஆனால், நடிகர் சிவகுமார் அந்த வாய்ப்பையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு விட்டார். நான்தான் முன்பே சொன்னேனே, தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பயனுற வாழும் வித்தகத்தைக் கற்றுத் தேறியிருக்கிறார் அவர் என்று.
சென்ற வாரம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. புதிதாக எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், தேர்ந்தெடுத்த சில நண்பர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளும் பண்பாளர் அவர். தனது அடுத்தகட்ட இலக்கியப் பங்களிப்பு குறித்து சொன்னார். இந்த முறை அவர் கையிலெடுத்திருப்பது திருக்குறள்.
திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் உரையெழுதிய பிறகு புதிதாக சிவகுமார் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். அதில் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். 50 பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை சுவாரசியமாகப் பதிவு செய்து, அந்த நிகழ்வைப் பிரதிபலிக்கும் குறளை அதன் பொருளுடன் விளக்கும் புதிய பாணியைக் கடைப்பிடித்திருக்கிறார் அவர்.
அவரது "திருக்குறள் 50' புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அதன் அரங்கேற்றம் அடுத்த மாதம் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் திடலில் நடக்க இருக்கிறது. "நண்பர் டாக்டர் எல்.பி.தங்கவேலுடன் வந்து விடுங்கள்' என்கிற அவரது அழைப்புக்கு நன்றி. புத்தகத்தைப் படித்துவிட்டேன். அவர் சொல்லக் கேட்கும் இன்பத்துக்காகக் காத்திருக்கிறேன்.
""கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்''.
---------------------------------------------------
"சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில், உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி, பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து, அதே நினைவில் நெகிழ வைத்த புத்தகம் எது' என்று யாராவது என்னைக் கேட்டால், தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல்.எஸ்.கரையாளர் எழுதிய "திருச்சி ஜெயில்' என்பதாகத்தான் இருக்கும். 1941-இல் நவயுகா பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு, 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர், தனது 27-ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58 -ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.
காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940-ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்டனை பெற்றார். தென்காசி தாலுகா கமிட்டித் தலைவரான கரையாளர் சங்கரன்கோவிலில் சத்தியாகிரகம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டப் பேரவை உறுப்பினராக டி.எஸ்.சொக்கலிங்கம் (தினமணி முன்னாள் ஆசிரியர்) தென்காசியில் சத்தியாகிரகம் செய்ய தீர்மானித்தார் என்பதுதான்.
""1940 டிஸம்பர் மாதம் 4-ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன். 1941, மே மாதம் 23-ஆம் தேதி விடுதலையடைந்தேன். இதற்கிடையே நான் கண்டதும் கேட்டதும், நான் அனுபவித்த சுகமும், கஷ்டமும்தான் இந்நூலாக வெளிவந்திருக்கிறது'' - இந்தளவுதான் அவர் புத்தகத்துக்கு எழுதியிருக்கும் முன்னுரை. அணிந்துரை தந்திருப்பது யார் தெரியுமா? சென்னை ராஜதானியின் பிரதமர், மத்திய- மாநில அமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்த ப.சுப்பராயன்.
சிரிப்பும், சுவாரசியமுமாக சிறைச்சாலை அனுபவங்களைத் தேர்ந்த எழுத்தாளர் போல சட்டநாத கரையாளர் எழுதியிருப்பதை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியதில் வியப்பென்ன இருக்கிறது? அவருடன் வேலூர், திருச்சி சிறைகளில் கழித்த 245 தியாகிகள் குறித்த குறிப்பு அல்லது சம்பவம் இந்தச் சிறிய புத்தகத்தில் இருக்கிறது. ராஜாஜி, டி.எஸ்.சொக்கலிங்கம், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே.சந்தானம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அவருடன் சிறையில் இருந்த ஆளுமைகள் குறித்த பதிவுகளைப் படித்தால்தான் ருசிக்கும். சொல்லி விளக்க முடியாது.
ஜாதி, மத பேதமின்றி, மொழி துவேஷமின்றி விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகள் உண்மையான சமத்துவ உணர்வுடன் இருந்தார்கள் என்பதை சட்டநாத கரையாளரின் "ஜெயில் டைரி' படம்பிடித்துக் காட்டுகிறது. படிக்கத் தவறாதீர்கள் என்று நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது!
------------------------------------------------------------
அமெரிக்காவில் நடந்த "ஃபெட்னா' தமிழ் மாநாட்டுக்குச் சென்றுவிட்டு, அங்கே சுற்றுப் பயணத்தில் இருக்கும் பேராசிரியர் ஹாஜாகனி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இளங்கவி அதிரை.
என்.ஷஃபாத் எழுதிய கவிதையொன்றை
அனுப்பித் தந்திருந்தார்.
ஆசையாய் வளர்த்த கிளி
செத்துப் போய்விட,
அதுவரை காய்த்திடாத
மாமரத்தடியில் புதைத்தேன்...
அடுத்த வருடம்
பூக்கத் தொடங்கியது மரம்.
காய்த்த மாங்காய் அத்தனைக்கும்
செத்த கிளியின்
செதுக்கிய மூக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...