மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கற்பனை வள தமிழ்ச் சொற்கள்!

மொழிக்கு அடிப்படை எழுத்து. எழுத்து தனித்த நிலையிலும் பொருள் தரும் (ஆ-பசு; மா-விலங்கு).

News image
Updated On :23 ஜூலை 2022, 6:30 pm

DIN

மொழிக்கு அடிப்படை எழுத்து. எழுத்து தனித்த நிலையிலும் பொருள் தரும் (ஆ-பசு; மா-விலங்கு). இப்படித் தனித்த நிலையிலும் பொருள் தரக்கூடிய ஓரெழுத்து ஒரு மொழி, தமிழில் 64 உள்ளன. எழுத்துகள் இணைந்தும் சொல்லாகப் பொருள் தரும் (புல், மரம்). தமிழில் எல்லாச் சொற்களும் ஒரு காரணத்தின் அடிப்படையில் உருவாயின என்று தொல்காப்பியர் சொன்னார். ஆனால், நெடுங்காலம் ஆகிவிட்டால் அந்தக் காரணம் நினைவிலிருந்து நீங்கிவிடும் என்றார். அந்த நிலையில், காரணம் தெரியாத சொற்களை "இடுகுறிப்பெயர்' என்று சிலர் சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் முன்பு ஒவ்வொரு வீட்டிலும் "அம்மி' என்ற அரைக்கும் கல் இருந்தது.  "அம்மி' தமிழனின் அடையாளப் பொருள். சிந்துவெளி நாகரிகம் உயர்ந்தோங்கிய மொகஞ்சதாரோவிலும் இது கிடைத்தது. மெக்சிகோ நாட்டு மாயன் நாகரிகத் தமிழர் வீட்டிலும் இது பயன்பட்டது. பிறகு தென் அமெரிக்காவிலிருந்து நீளவடிவமுடைய சிவப்புப் பழம் ஒன்று தமிழகத்திற்கு வந்தது. காரச்சுவை கொண்ட அது "மிளகுகாய்' என்று சொல்லப்பட்டது. மிளகுகாய், பிறகு மிளகாய் ஆனது. இதை அம்மியில் வைத்து அரைப்பதற்கு அம்மியும் குழவியும் பயன்பட்டன.

அம்மியைப் பயன்படுத்தி அரைத்த இல்லத் தலைவிக்கு உடல் நலம் இயல்பாக-எளிதாகக் கிடைத்தது. பிறகு மிக்சி வந்தது, அம்மி மறைந்தது, மகளிரின் உடல் உழைப்பு குறைந்தது -நலம் குன்றியது.

அம்மி, குழவிக்கல் ஆகியவை முதலில் வடிவமைக்கப்பட்டபோது - இந்தப் பொருள்களுக்குப் பெயர் வைக்க வேண்டிய தேவை வந்தபோது, ஆதித்தமிழனின் உள்ளத்தில் கற்பனை உதித்தது. கவிதை உள்ளம் கொண்டிருந்த அவனுக்கு, அம்மாவும் அவள் மடியிலுள்ள குழந்தையும் நினைவுக்கு வந்தன. இதன் அடிப்படையில், அடியிலிருந்த பெரிய கல்லை அம்மா போன்றிருந்த அந்தக் கல்லை - அம்மி என்று சொன்னான். அதன் மேலிருந்த உருளைக் கல்லைக் குழவிக்கல் என்றான் (குழவி-குழந்தை என்று பொருள்) அம்மியும், குழவியும், தாயையும் குழந்தையையும் நினைவுபடுத்தும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் ஒரு பெண்ணின் தன்மைகள். நாணம் உடைய பெண், ஊடல் காலத்தில் (பொய்க்கோபம் கொள்ளும் சமயத்தில்) தலைவியை சமாதானப்படுத்துவதற்காக தலைவன் அவளைத் தொடுவான்; தோள் மேல் கை வைப்பான். அதை ஏற்காதவள் போல், தலைவி சிணுங்குவாள்; அதாவது உடம்பில் மென்மையான அசைவை ஏற்படுத்துவாள். தமிழகத்தில், ஆற்றங்கரை ஓரத்தில், பசுமையான ஒரு செடி படர்ந்து வளரும். அது அழகாக, சிறிதாக, காம்பில் வரிசையாக, மெல்லிய இலைகளைப் பெற்றிருக்கும். அந்த இலைகளை  மெதுவாகத் தொட்டாலும் அவை உடனே இணையும், கண் இமைகள் மூடிக்கொள்வதைப் போல் இலைகள் மூடிக்கொள்ளும்.

இந்தக் காட்சியை முதலில் ஒருவன் கண்டான், கற்பனை எழுந்தது. பெண் சிணுங்கும் காட்சி மனக்கண் முன் தோன்றியது. அந்தச் செடிக்குத் "தொட்டால்சிணுங்கி' என்று பெயர் சூட்டினான். தொட்டால் சிணுங்கிச் செடியைப் பார்க்கும்போது, ஊடலின்போது சிணுங்கும் பெண் நினைவுக்கு வரலாம். 

அது தண்ணீரில் வாழும் உயிரினம். அதனுடைய நீளமான உடலின் இரு பக்கங்களும், மிகவும் பளபளப்பான வெண்மை நிறம் அமைந்ததாக உள்ளன. அந்த உயிரி நீரில் பிறழும்போது மின்னல் அடித்தது போல் தோன்றும் அப்படி மின்னும் காரணத்தால், "மின்' என்ற வினைச்சொல்லின் முதல் நீண்டு, அதற்கு "மீன்' என்ற பெயர் வைக்கப்பட்டது.

இரவு நேரத்தில், நிலவு இல்லாத வானத்தில், சிறு சிறு புள்ளி போன்றவை மின்னின. அவற்றைக் கண்டு மகிழ்ந்த மனிதனுக்கு-தமிழனுக்குத் தண்ணீரில் பிறழ்ந்து மின்னிய மீன் போல் அவை தெரிந்தன. ஆகவே, அவற்றுக்கு "விண்மீன்' என்று பெயர் தந்தான். விண்மீன், அவனுக்கு நீரில் வாழும் மீனை நினைவூட்டும். கற்பனை வளத் தமிழ்ச் சொற்கள் பட்டியலில் மேலும் பல சொற்கள் உள்ளன.

கற்பனை வளத்தால் அற்புதச் சொல் படைக்கும் பண்டைய வழக்கம் இன்றும் தமிழரிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. "தமிழின் இயல்புகள் 16' என்றார் தேவநேயப் பாவாணர். அவற்றுடன் "கற்பனை வளச் சொற்படைப்பு' என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.