விகடச் சக்கர விநாயகர்

திருவாவடுதுறை ஆதீனப் புலவர் மாதவச் சிவஞான முனிவர் இயற்றிய காஞ்சிப் புராணத்தில் அவர் வணங்கிப் போற்றும் விநாயகர் வணக்கப் பாடல் பிறர் பாடும் விநாயகர் வணக்கப் பாடலுக்கு வேறுபட்டதாக உள்ளது.
விகடச் சக்கர விநாயகர்

திருவாவடுதுறை ஆதீனப் புலவர் மாதவச் சிவஞான முனிவர் இயற்றிய காஞ்சிப் புராணத்தில் அவர் வணங்கிப் போற்றும் விநாயகர் வணக்கப் பாடல் பிறர் பாடும் விநாயகர் வணக்கப் பாடலுக்கு வேறுபட்டதாக உள்ளது.

பிறர் புராணப் பாங்கோடு மட்டும் பாடுவர். ஆனால், முனிவரோ புராணப் பாங்கை குடும்பப் பாங்கோடும் சேர்த்துப் பாடியதுதான் சிந்தனைக்கு விருந்தாக உள்ளது.

தன் தந்தையாகிய சிவனை தன் தாய் மாமனாகிய திருமால் ஆயிரம் மலர்களால் அருச்சித்து வழிபட்டபோது ஒரு பூ குறைந்ததால் தனது ஒரு கண்ணை மலராகக் கருதி எடுத்து அருச்சித்தார். இச் செயற்கரிய  செயலுக்காகத்தான் தந்தை தன் மாமாவுக்குச் சக்கரத்தைப் பரிசாகத் தந்தார்.

அச்சக்கரம் சலந்தராசூரனைக் கொன்ற அளவில் குருதிக் கறையுடன் முடைநாற்றம் வீசும் நிலையிலேயே வழங்கப்பட்டது. இதனால் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் பழிநேர்ந்தது.

இவ்விருவரின் குறைகளைப் பார்த்த விநாயகர் அப்பழியையும் ரத்தக்கறையான குறையையும் போக்க வேண்டும் என்ற குடும்ப அக்கறையில் மாமாவிடமிருந்து அச்சக்கரத்தை வாங்கிப் பார்த்து, திருப்பித் தராமல் காலம் தாழ்த்தினார்.

சக்கரமில்லாமல் தவித்த திருமாலின் நிலையைக் கண்டு வருந்திய படைத்தளபதி விஸ்வக்சேனன் விநாயகரிடம் சென்று,  அச்சக்கரத்தை வேண்ட அவரோ, "விகடக் கூத்தாடி என்னை மகிழ்வித்துச் சக்கரத்தை வாங்கிச்செல்' என்றபடி அவனும் விநாயகர் சிரிக்கும்படியாக, கால்களை வளைத்தும் வாயை, மூக்கைக் கோணலாக்கியும், கண்களை மாறுகண்ணாகவும் காட்டி ஒரு வித்தியாசமாக நடனமாடினான். இதைக் கண்ட மகிழ்ச்சியில் விநாயகர் சக்கரத்தை நல்க, அந்த விஸ்வக்சேனன் அதைத் திருமாலிடம் சேர்த்தான் என்பது புராண வரலாறு.

இதனால் விநாயகர், "விகடச் சக்கர விநாயகர்' எனப்பட்டார் என்ற அளவில் வணக்கம் கூறாத சிவஞான முனிவர் கதையைச் சற்று நீட்டிக்கின்றதில்தான் பிறரின் வணக்கப் பாடலோடு ஒப்பிட்டு முனிவரை உயர்த்திக் காட்டியது.

விழிமலர்ப்பூ சனையுஞற்றத் திருநெடுமால்
         பெறுமாழி மீள வாங்கி
வழியொழுகாச் சலந்தரன் மெய்க் குருதிபடி
         முடைநாற்றம் மாறு மாற்றால்
பொழிமதநீர் விரையேற்றி விகடநடப்
         பூசைகொண்டு புதிதா நல்கிப்
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த
         மதமாவைப் பணிதல் செய்வாம்!

இப்பாடலில் "பழி தபு தன் தாதையினும் புகழ்படைத்த மதமா' என்றதுதான் புராணப் பாங்கைக் குடும்பப் பாங்குடன் இணைத்துக் கூறிய சிவஞான முனிவரின் புலமைக்கான முத்திரைப் பதிவாகும். 

பொதுவாக நல்ல பொருளையே பரிசாக வழங்க வேண்டும். ஆனால், ஈண்டு சிவனோ ரத்தக்கறை படிந்த குறையுடன் சக்கரத்தைத் தந்ததுதான் தன் தந்தைக்குப் பழியானது. இந்தப் பழியுடன் சக்கரத்தைப் பெற்றதால் மாமாவின் குறையையும் களைய எண்ணிய விநாயகர் சக்கரம் கேட்டு வந்த தளபதியை விகடக் கூத்தாடிக் காட்டச் சொன்னார்.

கூத்தாடிய நேரத்தில் விநாயகர் தன் கன்னத்திலிருந்து வழியும் மதநீரில் அச்சக்கரத்தின் ரத்தக் கறையைக் கழுவி தூய்மைப்படுத்தி, புதிதாகப் பளபளப்
பானதாய் (பாலிஷ் போட்டு) தந்தார். அத்துடன் புலால் நாற்றத்தை மாற்ற மதநீரில் கழுவியதோடு புதுவாசனையை (விரை) ஏற்றிக் கொடுத்தாராம்.

இவற்றால், குடும்பத்திற்கு வரும் பழியை அக்குடும்ப உறுப்பினர் எவரேனும் துடைக்க வேண்டும் என்ற உலகியல் கருத்தைச் சொல்லாமல் சொல்ல, தெய்வக் குடும்பத்து மூத்த பிள்ளையாரை முன்மாதிரியாகக் காட்டினார் முனிவர் எனலாம். மேலும், மூத்த என்றது வயதால் மட்டுமின்றி அறிவால் மூத்த என்பதும் ஆகும். 

குடும்பத்தில் பிறக்கும் முதல் பிள்ளை மூத்த பிள்ளை என்றதோடு, அறிவு மூத்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை காஞ்சிப் புராணக் கணபதி மூலம் வாஞ்சையுடன் சுட்டியது சிந்தனைக்கு விருந்தன்றோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com