குழவி வளர்ப்பும் நாடு காத்தலும்!

பெற்றோர் எப்பொழுதும் குழந்தை வளர்ப்பில் மிகக் கவனமாக இருப்பர். அதற்கு எந்த நோயும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை விளையாடும்போது கீழே விழுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
குழவி வளர்ப்பும் நாடு காத்தலும்!

பெற்றோர் எப்பொழுதும் குழந்தை வளர்ப்பில் மிகக் கவனமாக இருப்பர். அதற்கு எந்த நோயும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை விளையாடும்போது கீழே விழுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். அதன் உடல் வலுவாக இருக்க ஊட்டச் சத்துகள் அளிக்க வேண்டும். குழந்தையின் எதிர்காலம் வளமாக இருக்க, தக்க கல்வி புகட்ட வேண்டும்.

குழந்தை வளர்ப்பவர் போலவே நாட்டைக் காப்பாற்றுவோரும் இருக்க வேண்டும் நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாக்க வேண்டும். நாடு வளமாக இருக்க நீர்வளம்,  நிலவளம் பேண வேண்டும். நாட்டு மக்கள் வாழ்வில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் குழவி வளர்ப்பை நாடு காத்தலுக்கு உவமையாக்கி ஒரு புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. 

எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது. கோப்பெருஞ்சேரல் எனும் மன்னனுக்கு நரிவெரூஉத்தலையார் கூறும் அறிவுரை இது.

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்
கானக நாடனை! நீயோ, பெரும!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள் பவரின் ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே!    (பா.5)

"எருமை போன்ற வடிவுடைய கருங்கற் பாறைகளால் சூழப்பட்டு, அவற்றுக்கு இடையிலுள்ள இடங்களில் பசுமாட்டுக் கூட்டம் போல மேய்ந்து கொண்டிருக்கும் யானைகளைக் கொண்ட வலிமையுடைய காடுகளை அரணாக உள்ள நாட்டை உடைய அரசன் நீதானே பெருமானே!  நீ இங்ஙனம் பகைவரால் அணுகப்படாத இயற்கையாகவே பெருஞ்செல்வத்தை உடையவன் ஆதலால் உனக்கு ஒரு யோசனை சொல்வேன்,  கேட்பாயாக! 

அருளையும், அன்பையும் நீக்கி பாவச் செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது, நீ காத்து வரும் தேசத்தை குழந்தையை வளர்ப்பாரைப்போல கவனமாய்ப் பாதுகாப்பாயாக! அத்தகைய கருணைமிக்க செயல் உனக்குப் பெறுதற்கரிய அருமையுடைத்தது' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com