இல்லறம் இல்லேல் துறவறம் இல்

மானுடவாழ்வில் அறம், இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுக்கப்படக் காணலாம்.
இல்லறம் இல்லேல் துறவறம் இல்

மானுடவாழ்வில் அறம், இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுக்கப்படக் காணலாம். துறவு என்பது இல்லற நெறி வாழ்ந்து பின் மேற்கொள்ளும் ஒழுக்கம் என்பதே பழந்தமிழர் நெறியாக இருந்தது. இவ்வுண்மையைப் புறநானூற்றில் மாரிப்பித்தியார் எனும் புலவர் இருபாடல்களில் (251, 252) சித்திரிப்பது கற்போரைக் கவரும் வகையாக அமைகிறது.

தலைவனது இல்லம், ஓவியம் போன்று அழகு மிகுந்து காட்சியளிக்கிறது. அதுபோன்றே, அவனும் பேரழகனாக விளங்கினான். கொல்லிப்பாவையையொத்த பேரழகு மிக்க இளமகளிர், அவன் அழகில் மயங்கினர். மோகத்தால் அவர்கள் உடல் நெகிழவே, அணிந்திருந்த அணிகலன்களும் நெகிழ்ந்து வீழ்ந்தன. அவனைப் பார்த்த, பெண்கள்தான் அம்மாதிரியான நிலையை அடைந்தார்களேயன்றி அப்பெண்கள் அவனுள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. 

அத்தகைய தலைவனைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு புலவர் சந்திக்க நேரிடுகிறது. அப்போது அவன் மூங்கில் வளர்ந்த நெடிய மலைகளையுடைய செறிந்த காட்டில் துறவுக்கோலத்தில் இருப்பதை காண்கிறார்.

அங்கு வாழும் காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகினால் வெப்பம் மிகுந்த செந்தீயை எழுப்புகிறான். அத்தீயின் வெப்பத்தால் தன்முதுகின் மேல் கிடந்த ஈரமான சடைமுடியைப் புலர்த்துகின்றான். இதனை,

ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
கான யானை தந்த விறகிற
கடுந்திறல் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே
என்ற பாடல்வழி (புறம் : 251) அறிகிறோம். 

செல்வக்குடியில் பிறந்த தலைவன் என்பதை ஓவத்தன்ன இடனுடை வரைப்பு என அவன் இல்லம் வருணிக்கப்படுவதிலிருந்து அறியலாம். ஆகவே அவன் வறுமை காரணமாக துறவு பூணவில்லை என்பது வெளிப்படை. பெண்களால் விரும்பப்படாத காரணத்தாலும் துறவு பூணவில்லை என்பதை மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளன்  என்பதிலிருந்து அறியலாம். 

அவன் செய்த தவபலத்தால் யானைகளும் இவன் ஏவலுக்குக் கட்டுப்பட்டு செந்தீக்கான விறகுகளைக் கொண்டு வந்து தருகின்றன. இதனைக் கான யானை தந்த விறகிற் என்ற தொடர் உணர்த்துகிறது. அவனது தவத்தின் சிறப்பையும் இதன் மூலம் அறிய முடிகிறது. தவசீலர்க்கு யானை போன்ற விலங்குகளும் கட்டுப்படும் என்பதை செந்தீ பேணிய முனிவர் வெண்கோட்டு களிறுதரு விறகின் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் (498-500) குறிப்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

முதற்பாடலில் இல்லறக் காட்சியை விளக்கி, பின் துறவறக் காட்சியை அமைப்பவர் இரண்டாவது பாடலில் துறவறக் காட்சியை முன்கூறி பின்னர் இல்லறக் காட்சியை அமைக்கிறார். இவ்வாறு புலவர் அமைப்பது துறவின் சிறப்பை உணர்த்தவும் கருத்தை வலுப்படுத்தவும் எனக் கொள்ளலாம். 

இப்பாடலில் அவனது துறவுக்கோலத்தை, நாடோறும், ஒலிக்கின்ற வெள்ளிய அருவியில் நீராடுவதால் முன்பிருந்த அவன் கருமயிர், உருமாறி புல்லென் சடையோடு காட்சியளிக்கிறது. செல்வச்செழிப்போடு வாழ்ந்த அவன் அவற்றையெல்லாம் துறந்து பசியாற்ற காட்டில் வளரும் தில்லந்தளிர்களைக் கொய்து அதை உண்டு வாழ்கிறான். 

இல்லத்தில் வாழ்ந்த போது மனையாளோடு இன்முகத்துடன் உரையாடி மகிழ்பவனாகவும் தன் உரையாடும் திறத்தால் அவளைத் தன் வலையில் அகப்படுத்தும் அன்பு மிக்கவனாக விளங்கியதையும்,

கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம் பெயர்ந்து
தில்லை யன்ன புல்லென் சடையோ
டள்ளிலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே
என்ற வரிகளில் (புறம் : 252) உணர்த்துவார் புலவர். 

கரிய தலைமுடி நாடோறும் காட்டருவியில் நீராடுவதால் சிவந்த சடாமுடியானது; உயிரைக் காக்க காட்டில் வளரும் தளிர்களை உண்பது அவனது துறவு நிலையை உணர்த்தும். இல்லத்தில் இல்லக் கிழத்தியோடு மகிழ்ச்சியோடிருந்த நிலையை உணர்த்த அவளை மடமயிலாகவும் அம்மயிலைத் தன் பேச்சுத்திறத்தால் அகப்படுத்தும் வேட்டுவனாகவும் அவன் இருந்ததை மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் என உவமிப்பதிலிருந்து அறிகிறோம். 

சொல்வலை வேட்டுவன் எனும் உவமை தலைவன் - தலைவியின் மகிழ்ச்சியான இல்லறத்தை உணர்த்துவதால் தலைவன், தலைவியோடு பிணங்கி மனம் வேறுபட்டு துறவு கொண்டவனல்லன் என்பதும் வெளிப்படை. 
மாரிப்பித்தியாரின் இவ்விரு பாடல்களும் வாகைத்திணை, தாபதவாகைத் துறையுள் அமைகின்றன. காமத்தை வென்றவனாக தலைவன் குறிக்கப்படுவதால் வாகைத்திணையாயிற்று எனக் கொள்ளலாம். தாபத வாகையாவது, தாபத முனிவர் தவத்தொடு முயங்கி ஓவுதல் அறியா வழக்குரைத்தன்று (பு.வெ.மா. 177) என்பார் ஐயனாரிதனார். 

தவம் செய்யும் துறவியர் அவ்வொழுக்கத்தினின்று சற்றும் பிறழாது மேம்பட்டமையே தாபதவாகைத்துறையாகும். தொல்காப்பியர் இதனை நாலிரு வழக்கிற் தாபதபக்கம் (தொல்.புறத் 5) என்பது குறிக்கத்தக்கது. இப்பாடல் தாபதவாகை என்ற துறையில் கூறப்படுவதால் துறவுவாழ்வின் சிறப்பை இப்பாடல் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

மேலும் மாரிப்பித்தியாரின் இரு பாடல்களையும் ஆழ்ந்து நோக்கின், அவை அகக்கூறுகளைக் கொண்டு விளங்குவதைக் காண முடியும். அகத்திணையும் சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார் என்ற அகத்திணை இலக்கணத்திற்கேற்ப இப்பாடல்களில் தலைவன் தலைவியர் பெயர் சுட்டப்பெறாதது குறிக்கத்தக்கது.  

அகப்பொருள் கூறுகளைக் கொண்ட பாடல்களாயினும் இல்லத்தைத் துறந்து புறம் (காடு) சென்று கடுந்தவம் புரியும் செய்திகளைக் கூறுவதால் புறப்பொருள் வரிசையில் சேர்க்கப்பட்டதாகக் கொள்ளலாம். புறநானூற்றில் இதுபோன்று அகப்பொருள் கூறுகள் அமைந்த சில பாடல்களும் உண்டு என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

மாரிப்பித்தியாரின் இவ்விரு புறப்பாடல்களும், இல்லறவாழ்வு வாழ்ந்து முடிவில் மறுமைப் பேற்றிற்காக  துறவு மேற்கொள்ளும் ஒழுக்கமே பழந்தமிழர் பண்பாடாக இருந்தது என்பதையும் இல்லறத்தில் ஈடுபடாமல் நேரடியாகத் துறவு கொள்ளும் சிந்தை அக்காலத் தமிழ் சமூகத்திற்கு இல்லை என்பதையும் உணர்த்தக் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com