குழந்தைக் கவிஞர் எனும் இந்திரஜாலக் கவிஞர்
குழந்தைக் கவிஞர்களுக்கும், குழந்தைக் கவிதைகளுக்கும் அங்கீகாரம் பெற்றுத்தந்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.


குழந்தைக் கவிஞர்களுக்கும், குழந்தைக் கவிதைகளுக்கும் அங்கீகாரம் பெற்றுத்தந்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. உணவிற்கு வங்கிப் பணியை மேற்கொண்டு, மொழி, கவிதை உணர்விற்கு எழுத்துப்பணி என வரையறுத்து வாழ்ந்தவர் அவர்.
தாலாட்டு என்பது, கவிதையாகிய பாட்டை தாலாகிய நாவை ஆட்டிப்பாடி தொட்டிலையும் ஆட்டி குழந்தைகளைத் தூங்கவைக்கும் பாடலாகும்.
கவிதை என்பது கருத்தை விதைப்பது. நல்ல கருத்தைப் பாட்டாக்கி, எளிய நடையில் குழந்தைகளை மகிழ்ச்செய்வது "குழந்தைப் பாடல்கள்'.
செட்டிநாட்டுச் சேர்ந்த இராயவரம் என்கிற சிற்றூரில் அழகப்ப செட்டியார்- உமையாள் ஆச்சி தம்பதிக்கு மூன்றாவது மகனாக நூறு ஆண்டுகளுக்கு முன் 1922 நவம்பர் மாதம் 7-ஆம் தேதி பிறந்தவர் அழ.வள்ளியப்பா இவர் சிறுவயதில் அவ்வூரில் உள்ள காந்தி பாடசாலையில் படித்தார். கவிதை எழுதும் ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர்கள், அவர் படித்த பள்ளிக்கூட ஆசிரியர்களே ஆவார்கள். அவர்கள் பாரதியார் பாடல்களையும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்களையும் சொல்லிக்கொடுத்து இவர் கவி ஆர்வத்தை வளர்த்துள்ளனர்.
பள்ளியில் படித்தபோது மாணவர்களோடு சேர்ந்து "கானாத காடு" எனும் திரைப்படம் பார்க்கச் சென்றபோது,
காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு
ஏழைகள் படுவதோ அரும்பாடு
டிக்கெட் விலையோ பெரும் போடு
என்று காடு - ஓடு- தேடு- பாடு- போடு எனப் பாடல் வரிகளை அமைத்துப் பாடி, பாராட்டுப் பெற்றவர் வள்ளியப்பன்.
நூல்கள் படிப்பதில் கவனம் செலுத்தினார். அதற்காக நூலகம் சென்று வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டார். அவ்வூரில் இருந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து 'பாரதி வாலிபர் சங்கம்' என்ற பெயரின் சங்கம் தொடங்கி தன்னார்வ சேவையிலும் ஈடுபட்டார் வள்ளியப்பன்.
அவ்வூரைச் சேர்ந்த வை. கோவிந்தன் நடத்தி வந்த "சக்தி' இதழின் காரியாலய காசாளராகப் பணியாற் வாய்ப்பு வந்தபோது அதனை ஏற்றுப் பணியாற்றினார். அங்கு பணியாற்றும்போது எழுத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் கவிதை, கட்டுரை, கதைகளை எழுதத் தொடங்கினார். எழுத்தாளனாக வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.
எழுத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்ற பெற்றோரின் அறிவுரையை ஏற்று நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய பணிவாய்ப்பு தேடினார். இந்தியன் வங்கியில் எழுத்தர் பணி கிடைக்கவே அதில் சேர்ந்து பணியாற்றினார்.
உணவிற்கு வங்கிப் பணி, உணர்விற்கு எழுத்துப்பணி என வரையறுத்து செயல்பட்டதோடு குழந்தை இலக்கியம் எனும் தனித்துறையை உருவாக்கி அதனை ஏற்றம் பெறச்செய்த பெருமையும் அழ. வள்ளியப்பாவையே சாரும்.
உள்ளூரிலேயே இருந்த வள்ளியம்மை மனைவியாய் அமைந்தார். ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார். கவிமணியை குருவாக ஏற்று, அவரைப்போலவே, குழந்தைகளுக்காக எளிய நடையில் கவிதைகளை எழுதியவர் அழ வள்ளியப்பா.
அவர், முதன் முதலாக 23 பாடல்களைக் கொண்ட "மலரும் உள்ளம்' என்ற தலைப்பிலான கவிதை நூலை பழநியப்பா பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். பின் குழந்தைப் புத்தக நிலையத்தை தானே தொடங்கி, அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார் அழ. வள்ளியப்பாவின் குருவான கவிமணி அவரை வாழ்த்தி தந்த வாழ்த்துப் பாடலில்
பாலும் பழமும் ஏனம்மா?
பசியே இல்லை எனக் கூறி
சீலச்சிறுவர் சிறுமியர்கள்
சிறந்த "மலரும் உள்ளம்' இதை
காலை மாலை என்றென்றும்
கற்று மகிழச் செய்யும் - இந்திர
ஜாலக் கவிஞன் வள்ளியப்பன்
தழைத்து வாழ்க! வாழ்கவே!
என்று வாழ்த்திப் பாடியுள்ளார்.
கவிதை நடையிலேயே "காந்தி கதை', "நேரு தந்த பொம்மை', "சுதந்திரம் பிறந்த கதை', "சிரிக்கும் பூக்கள்', "பாடிப் பணிவோம்' என அடுக்கடுக்காய் நூல்களை வெளியிட்டவர் வள்ளியப்பா. குழந்தைகளுக்காக 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தானே சொந்தமாக சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு எதை எழுதக்கூடாதோ, அதை எழுதவே கூடாது என்ற கொள்கையில் உறுதியாய் இருந்தவர் அழ. வள்ளியப்பா.
முந்நூறு கவிஞர்களை இணைத்து குழந்தைக்கவிஞர் பரம்பரையை உருவாக்கியவரும் இவரே.
தன் குருவான கவிமணி பெயரால் சங்கம் அமைத்து, மாதம் ஒருமுறை கூடச் செய்து பலருக்கும் குழந்தைக் கவிதை எழுதும் திறமையை வளர்த்த பெருமகன் அழ. வள்ளியப்பா.
வங்கிப்பணி நிறைவிற்குப் பின் குழந்தை இலக்கியப் பணியை தீவிரமாக கைக்கொண்டார் அழ. வள்ளியப்பா. இவர் எழுதிய பாடல்கள் கணக்கிலடங்கா.
குழந்தைகள் பிறந்தநாள் பற்றிப் பாடும்போது,
அன்பு காட்டி வாழவும்
அறிவை வளர்த்துக் கொள்ளவும்
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்ல நாள்
எனப் பாடியவர்.
தன்னம்பிக்கையின் தாரக மந்திரமாக,
ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்
என்ற அழ வள்ளியப்பாவின் பாடல் டாக்டர் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த பாடலாகும்.
"நிலா நிலா', "வா மழையே வா', "லட்டும் தட்டும்', "கிழமைப்பாட்டு', "டமாரம்', "நமது கொடி', "காந்தி வழி', "அன்னை மொழி', "வேண்டாத குணங்கள்', "மாம்பழமாம் மாம்பழம்' போன்ற பல நூறு பாடல்களைத் தந்தவர் அழ. வள்ளியப்பா. அவர் மறைந்துவிட்டாலும், இன்றும் பாடநூல்கள் வழியும், குழந்தைக் கவிதைகள் வழியும் மக்கள் மனதிலே நிறைந்து நிற்கிறார் அவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நாளை (நவ. 7) குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா நூற்றாண்டு நிறைவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...