கம்பரின் கருஞாயிறும் அஞ்சன ஞாயிறும்
உலக வழக்கு, செய்யுள் வழக்கு பற்றிய இலக்கணங்கள் தொல்காப்பியத்தில் விரிவாகக் காணப்படுகின்றன.


உலக வழக்கு, செய்யுள் வழக்கு பற்றிய இலக்கணங்கள் தொல்காப்பியத்தில் விரிவாகக் காணப்படுகின்றன. அவற்றுள் மொழிநடையில் சொற்கள் அடைமொழிகளாக அமைதல் பற்றிய கருத்தாடலில் பண்புச் சொல் அடைமொழி பற்றியதை மட்டும் கீழ்க்கண்ட நூற்பா கூறுகிறது.
இனச்சுட் டில்லாப்
பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே
(தொல். சொல். கிள.18)
இதில் பண்பு அடைசொல் இனம் சுட்டாததாகச் செய்யுளில் வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இனம் சுட்டாதது என்றால் வேறொரு பொருள் இல்லாத ஒரே ஒரு பொருளுக்குரிய அடைமொழியாகும். எடுத்துக்காட்டாகச் "செஞ்ஞாயிறு' என்றால் சிவப்பு நிறத்தைத் தவிர வேறொரு சூரியன் இல்லாததால் அவ்வாறாகக் கூறுவது செய்யுள் நடை என்பது தொல்காப்பியர் கருத்து.
இந்த இலக்கணத்திற்கு மாறுபட்டவாறு கம்பர் இரண்டு செய்யுளில் இராமனைக் கருஞாயிறு என்றும் அஞ்சன ஞாயிறு என்றும் கூறுகிறார். இங்ஙனம் கூறுவது இலக்கண மீறலா? அல்லது சறுக்கலா? என எண்ண வேண்டிள்ளது.
கருஞாயிறு போல்பவர் காலொடு போய்
வருநாள் அயலே வருவாய் மனனே !
பெருநாள் உடனே பிரியா துழல்வாய்
ஒருநாள் தரியா தொழிவார் உளரோ?
இப்பாடல் பாலகாண்டக் கடிமணப் படலப்பாடலாகும் (4). மிதிலையில் இராமன் வில்லை முறித்ததும் அவனுக்கும் சீதைக்குமான திருமணம், நாளை நடப்பதாக முடிவானது. இந்நிலையில் காதல் வேதனையால் சீதை தன் மனத்தோடு பேசுகிறாள்.
"கருநிறமுடைய சூரியனைப் போன்ற இராமன் போனபோதே அவனுடன் போய்விட்ட மனமே! நீ நாளை மணக்க வரும்போதுதான் அவனுடன் வருவாயோ? பிறந்த நாள் தொட்டுப் பிரியாதிருந்த நீ, திருமணம் என்றதும் அவனோடே என்னை விட்டுவிட்டுச் சென்றாயோ? ஒருநாள் கூடத் திருமணத்திற்குப் பிறகு பிரியாதிருக்கப் போகும் என்னை விட மனம் பொறுக்காமல் அவனுடன் பிரியாதிருக்கச் சென்ற உன்போல் ஒருவரையும் பார்த்ததில்லை' எனக் காதல் பிரேமையால் புலம்பினாள்.
வில் முறித்தபோது கண்ணில் தென்பட்ட இராமன், திருமணத்திற்கு வரப்போகும் நாளை வரை அவன் கண்ணுக்கு மறைந்தவனாகவே இருப்பதால் அவனைக் காணாதிருக்கும் சோகத்தை வெளிப்படுத்தும் வெறுப்பில் "கருஞாயிறு' என்றாள் போலும்! ஏனெனில் வில் முறித்தபோது கண்ணில் தெரிந்தவன் மறைந்து விட்டதால் உலகியலின்படிப் பகலில் ஒளியாகத் தோன்றும் சூரியன் இருளில் மூழ்கியதால் கருப்பாகி விட்டதாகக் கற்பித்துக் கொள்வதால் கருஞாயிறு என்றாள் போலும்!
மேலும் ஒன்றைக் கருதலாம். இராமன் சூரிய குலத்தவன் என்பதாலும் அவனது நிறம் கருமை என்பதாலும் இவ்விரண்டையும் பொருத்தமுற நினைத்த நினைப்பில் கருஞாயிறு என்றாளோ? எனலாம்!
இவை எல்லாவற்றையும் கூட்டி நினைக்குமாறு கம்பர் கதாபாத்திர மனநினைப்பில் உளவியல் படிக் கதாபாத்திரக் கூற்றாகக் கருஞாயிறை உதிக்க வைத்ததால் வழுவில்லா வகையில் இலக்கண விழுமியத்தை நிலை நாட்டினார் எனலாம். மேலும், இது "ஞானத்தில் தன்பேச்சு, பிரேமையில் பெண் பேச்சு' எனும் ஆழ்வார் சாயலில் கம்பரின் கவிநயம் ஆகும். நாயக } நாயகி பாவனையில் ஆழ்வார் பாசுரத்திற்கான மதிப்பீட்டையே கம்பர் இப்படிப் பதிவு செய்தார் எனலாம்.
அடுத்துக் குகப் படலத்தில் கம்பர் கவிக்கூற்றாக இராமனை அஞ்சன ஞாயிறன்ன ஐயன் என்றது பற்றி உணரவேண்டும்.
செஞ்செவே சேற்றில் தோன்றும்
தாமரை, தேரில் தோன்றும்
செஞ்சுடர்ச் செல்வன் மேனி
நோக்கிய விரிந்த, வேறோர்
அஞ்சன ஞாயி றன்ன
ஐயனை நோக்கி செய்ய
வஞ்சிவாள் வதனம் என்னும்
தாமரை மலர்ந்த தன்றே!
குகனைச் சந்தித்த இராமன் அவனது இருப்பிடத்தில் இரவு தங்கி காலையில் புறப்படுகிறான். காலையில் சூரியனைப் பார்த்ததும் தாமரைகள் மலர்ந்தன. அவ்வாறே வஞ்சிக்கொடி போன்ற இலக்குமியாம் சீதையின் ஒளிபொருந்திய முகமாகிய தாமரை, கருநிற ஞாயிறான இராமனைப் பார்த்து மலர்ந்த தாம் என்று சீதை கண்விழித்து எழுந்தாள் என்பதைக் கம்பர் கற்பனையாகக் கூறினார், இது கவிக் கூற்றான செய்யுள்.
செஞ்ஞாயிறு எனக் கூறவேண்டியவர் அஞ்சன ஞாயிறு (அஞ்சனம் கருமை நிறம்) என்றது அணி இலக்கணப்படி இல்பொருள் உவமையாகும். இல்பொருள் என்பது இல்லாதபொருள் என்ற கருத்துக் கூறுங்கால் இராமன் இல்லாதவன் இல்லை. இருப்பவன் என்பதால் அச்சொல்லுக்கான (இல்பொருள்) பொருள் வேறொன்றாக இருத்தலாய் உணரலாம்.
இராமனுக்கு இணையாக வேறொருவர் இல்லாத நிலையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் இல்பொருள் அணி இலக்கணப் பொருள் நுட்பத்தில் கவிக்கூற்றாக "அஞ்சன ஞாயிறு' எனப்பட்டது. ஏனெனில் இராமன், "ஓவியத்தால் எழுத ஒண்ணா உருவத்தன்' எனக் கம்பரே வாலி மூலம் இராமனின் இல் பொருள் அழகை இருப்பதாக உணர வைத்தார்.
மேலும், இந்த இல்லாமையை வைத்தே முழு அழகை கம்பர் மிதிலைக்காட்சியில் பதிவு செய்துள்ளார். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்ற போது அவர்கள் யார் எனக் கூறும் கம்பர் "மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்' என இடையில்லாத சீதையும் குற்றமே இல்லாத குறையையுடைய இராமனுமாகிய இருவர் என்பதால் இல்லாமையைக் கற்பனையில் கண்ணேறாக கூறி அவர்களின் முழுமையை நினைவு கூர்ந்தது கம்பரின் இல்பொருள் அணி உத்தியின் உச்சம் ஆகும். ஆக இல்பொருள் என்றதன்படி அஞ்சன ஞாயிறு என்ற கவிக்கூற்று கவிகூறுலகம் போற்றும் புவிபுகழ் கூற்றாக உள்ளது எனலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...