3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நிலையாமையும் அழியாமையும்

சக்கர வியூகத்தையே ஊடறுத்துச் சென்று போரிடும் திறனுடைய அபிமன்யுவின் வீரம் ஒருபுறம் இருப்பினும், அவனது பின்புலம் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல. அவனுடைய  தாய்மாமன் கண்ணபிரான்;

News image
Updated On :23 அக்டோபர் 2022, 1:18 pm

இரா. சுந்தரபாண்டியன்

சக்கர வியூகத்தையே ஊடறுத்துச் சென்று போரிடும் திறனுடைய அபிமன்யுவின் வீரம் ஒருபுறம் இருப்பினும், அவனது பின்புலம் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல. அவனுடைய  தாய்மாமன் கண்ணபிரான்; தந்தை தலைசிறந்த வில்லாளி அருச்சுனன்; பாட்டனார் தேவர்களின் தலைவன் இந்திரன். 

இவை போதாதென்று குருúக்ஷத்திர  போரில் பாண்டவர்
களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மன்னர்
களும், கோடிக்கணக்கான தலைசிறந்த வீரர்
களும் பக்கபலமாக இருந்தபோதும், ஜெயத்திரதனால் அபிமன்யுவின் உயிர் பறிக்கப்படுவதை யாராலும் தடுக்க இயலவில்லை. இதனை,

மாயனாம் திருமாமன்
தனஞ்செயனாம் திருத்தாதை
வானோர்க்கெல்லாம் நாயனாம் பிதாமகன்
மற்றுமொரு கோடி நராதிபராம் நண்பராய் வந்தோர்
சேயனாம் அபிமனுவாம்
ஜெயத்திரதன் கைப்படுவான்
என்று "வில்லிபாரதம்' குறிப்பிடுகிறது.

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம் என்பதை வள்ளுவப் பேராசான்,
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு 
என்ற குறளில் குறிப்பிடுகிறார்.

உடல் கூட்டுக்குள் உயிர் இருக்கும்வரைதான் அவரவர் பெயர் அவரவருக்கு உரியது. கூடுவிட்டு ஆவி பிரிந்தால் அனைவருக்கும் ஒரே பெயர்தான் என்பதையும் நெருப்பில் சுட்டு, நீரில் மூழ்கி எழுவதோடு ஒருவரது வாழ்வு நிறைவடைகிறது என்பதையும் திருமூலரின் திருமந்திரம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர்இட்டு,
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே
மன்னாதி ஹமன்னரும், மலைபோல் வலிமையுடைய யானையின் மீது மதிபோல் குடையுடன் செல்லும் அரசரும் ஒருநாள் மடிந்தனரே தவிர, ஒருவரும் இம்மண்ணில் எஞ்சவில்லை என்பதை நாலடியார்,
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்
என்று குறிப்பிடுகிறது.

"யாக்கை நிலையாமை' என்பது மனிதர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதல்ல. 
கடவுளின் அவதாரங்களுக்கும்கூட விதியும் அதுதான். கதியும் அதுதான் என்பதை மாகாகவி பாரதியாரின்,
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
என்ற கவிதை வரிகள் எடுத்துரைக்கும்
யாக்கை மட்டுமல்ல, இளமையும் செல்வமும் கூட நிலையாமைத் தன்மை உடையவையே. இம்மூன்றின் நிலையாமையை எடுத்துரைக்கும் விதமாக ஏராளமான பாடல்கள் தமிழிலக்கியங்களில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. அப்படியானால், நிலையாமை குறித்து தமிழ் இலக்கியப் பாடல்கள் கூறும் கருத்துகளைப் படிக்கும்போது ஒருவருக்கு மனச்சோர்வும், வாழ்வின் மீது பற்றின்மையும் ஏற்படாதா? பின் எதுதான் நிலைத்த தன்மை உடையது என்கிற கேள்விகள் இயல்பாகவே  எழுகின்றன. அவற்றுக்கான பதில் திருக்குறளில் உள்ளது.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி 
ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும் என்பதே இக்குறளின் பொருளாகும். யாக்கை, இளமை, செல்வம் ஆகிய மூன்றும் நிலையாத்தன்மை உடையவையாக இருக்கின்றன; ஆனால், கல்வி ஒன்றே ஏழேழ் பிறவிக்கும் நிலைத்தன்மை உடையதாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.