இந்த வாரம் கலாரசிகன் - (30-10-2022)
ஆழமான நட்பும், நெருக்கமும் இருந்தால் மரணம்கூட ஒருவரை நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது என்பதை சமீபகால நினைவுகள் பல எனக்கு உணர்த்துகின்றன.


ஆழமான நட்பும், நெருக்கமும் இருந்தால் மரணம்கூட ஒருவரை நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது என்பதை சமீபகால நினைவுகள் பல எனக்கு உணர்த்துகின்றன. என்னை அறியாமலேயே நேற்று எழுந்தது முதல், என் நினைவு பெரியவர் ப. முத்துகுமாரசுவாமியை சுற்றிச்சுற்றி வந்தது. யோசித்தபோது நேற்று அவரது இரண்டாவது நினைவு தினம் என்பது உறைத்ததும் ஒரு நிமிடம் நான் மெளனமானேன். என்னை நிசப்தம் சூழ்ந்தது.
கொள்ளை நோய்த்தொற்று பல உறவுகளையும், நட்புகளையும், ஆளுமைகளையும், பண்பாளர்களையும் நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அப்படி தமிழ்கூறு நல்லுலகம் இழந்த ஒரு பொக்கிஷம் பெரியவர் ப. முத்துகுமாரசுவாமி ஐயா. அவர் அடிக்கடி கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்க சென்றுவிடுவார். திரும்பும்போது பிரசாதத்துடன் என்னை சந்திக்க அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ வந்துவிடுவார். அவர் எழுதிக் குவித்தது ஏராளம் ஏராளம். அந்த மாபெரும் ஆளுமையின் தொடர்பில் நானும் இருந்தேன் என்பது வாழ்நாள் பேறு என்பதல்லால், வேறென்ன சொல்ல?
முனைவர் தெ. ஞானசுந்தரம் எழுதிய "காப்பிய விருந்து' புத்தகம், இத்தனைக் காலம் எனது பார்வைக்கு வராதது ஏன்? விமர்சனத்திற்கு வந்திருந்தன புத்தக பிரதிகள்.
முனைவர் ச.வே. சுப்பிரமணியத்தின் உலகத் தமிழ் இயக்கம் 1986-இல் வெளிக்கொணர்ந்த புத்தகம்தான் "காப்பிய விருந்து'. உலகத் தமிழ் இயக்ககத்தில் வான்மீகத்தையும், கம்பரையும் ஒப்பிட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த முனைவர் தெ.ஞா.வைப் பணித்திருக்கிறார் ச.வே.சு. அப்போது சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரியில் பணியாற்றி வந்த தெ.ஞா. ஆற்றிய உரையின் நூல் வடிவம்தான் "காப்பிய விருந்து'. அதன் மறுபதிப்பே இப்போது விமர்சனத்துக்கு வந்திருந்தது.
"கம்பரைப் படிக்கும்போதெல்லாம் என் அறிவின் சிறுமையை உணர்கிறேன். அவரை அணுகும்போது, என் அறியாமையின் பரப்பு நன்கு தெரிகிறது. அதனால் அவரை "அவன்' என்று உரிமை பற்றிக்கூட அழைக்க என் மனம் கூசுகிறது' என்கிற முன்னுரைக் குறிப்பு, முனைவர் தெ.ஞா.வுக்கும் பொருந்தும் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
முனைவர் தெ.ஞா. படைத்திருக்கும் "கம்பகாதைக் காப்பிய விருந்து, வான்மீகத்தின் பிசின் அகற்றி, சுளையெடுத்து, தேனும் வார்த்துப் பரிமாறிய பெருவிருந்து. வான்மீகத்தில் உள்ள எந்தெந்தப் பகுதிகள் கம்பரால் தவிர்க்கப்பட்டிருக்கின்றன, எவையெல்லாம் கம்பரால் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்கிற ஆய்வுதான் "காப்பிய விருந்'தின் சாரம்.
"வான்மீகத்தில் ஒருவர் நிகழ்த்திய பேச்சு கம்பரில் பிறிதொருவர் நிகழ்த்தியதாக உள்ளது. வான்மீகத்தில் ஓர் இடத்தில் ஒருவர் நிகழ்த்திய பேச்சு, கம்பரில் பிறிதோர் இடத்தில் அவரே நிகழ்த்தியதாக மாற்றப்பட்டுள்ளது' என்று கூறும் முனைவர் தெ.ஞா., ஜபாலி கூறும் சாருவாக மதக் கருத்துகள் கம்பரில் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
"வான்மீகத்தில் காணப்படும் கதை நிகழ்ச்சிகள் சில கம்பரில் விடுபட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகள் இருப்பதால் புதிய பயன் ஏதும் கிட்டாமை, நாடக அமைப்புக் கெடுதல் முதலான காரணங்களால் கதை நிகழ்ச்சிகள் சில தள்ளப்பட்டுள்ளன' என்கிறார் தெ.ஞா. இராவண வதம் நிகழ்ந்த நேரம் குறித்த அவரது ஆய்வு இந்நூலில் இடம் பெறவில்லை. அந்த ஆய்வு அவரால் "காப்பிய விருந்து'க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.
ஒரு முறைதான் படித்திருக்கிறேன். இன்னொரு முறை, இன்னொரு முறை என்று பலமுறை படித்தால்தான் "காப்பிய விருந்து' என்கிற இந்த நூலின் சுவையை முற்றிலுமாக சுவைக்க முடியும். மறுபதிப்பாக இல்லாமல், முனைவர் தெ.ஞா.வின் பிந்தைய ஆய்வுகளையும் இணைத்துப் புதியதொரு விருந்து படைத்தால், தமிழுலகம் நன்மை பெறும்!
எங்கள் ஆசிரியர் சாவி சாருக்கு யாரிடமாவது அபரிமிதமான மரியாதை இருந்தது என்றால் அது ஆசிரியர் கல்கியிடம்; அவருக்குத் தொழில் ரீதியாக யாரிடமாவது பொறாமை இருந்தது என்றால், அது "குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. என்கிற எஸ்.ஏ.பி. அண்ணாமலையிடம். அதனால், "சாவி' வளாகத்தில் தயாரான எல்லோருக்குமே "எஸ்.ஏ.பி.' என்றால் தனி மரியாதை. சாவி சாரையே வியக்க வைப்பது என்றால் அது என்ன சாதாரணமானதா?
"எடிட்டர் எஸ்.ஏ.பி.' என்று ஒரு சிறிய புத்தகம். எழுதி இருப்பவர்கள், எஸ்.ஏ.பி.யின் நிழல்கள் அல்லது விழுதுகள் அல்லது ஏனைய மூன்று முகங்கள் (இப்படி எதை வேண்டுமானாலும் கூறலாம்) என்றே கருதப்பட்ட ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மூவரும். "குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.யுடனான தங்களது நேரடி அனுபவங்களையும், அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் "எடிட்டர் எஸ்.ஏ.பி.' புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் அவர்கள் மூவரும்.
இந்தப் புத்தகத்தைப் படித்தபோது, எனக்குச் சிறிதாக ஒரு குற்ற உணர்வு. இது போன்ற ஒரு புத்தகத்தை சாவி சாரிடம் பயின்ற எங்களில் யாரும் ஏன் எழுதவில்லை? ஏன் அந்த அனுபவங்களைப் பதிவு செய்யவில்லை?
இந்த ஆண்டு "அமுதசுரபி' தீபாவளி மலரில் வெளியாகி இருக்கிறது கவிஞர் செண்பக காசி எழுதிய "அவள் அல்லவோ பெண்' என்கிற இந்தக் கவிதை -
மீண்டும் பிறக்க நினைத்தால் பெண்ணாகப் பிறந்து பார்!
இந்த முற்றுப்புள்ளியே
பிரபஞ்சத்தின் முதற்புள்ளி என்று
என் வரங்களுக்குப்
பெண்ணிவளைப் பரிசளித்து
முற்றுப்புள்ளி வைத்தான்
இறைவன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...