மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வானத்தில் தோன்றிய வனம்

கம்பர் தமது இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தின் சடாயு வதைப் படலத்தில் ஓர் அற்புதமானக் காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2023, 12:31 pm

இரா. சுந்தரபாண்டியன்


கம்பர் தமது இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தின் சடாயு வதைப் படலத்தில் ஓர் அற்புதமானக் காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். தண்டக வனத்தில் இராமனும் சீதையும் இலக்குவனும் இருக்கும்போது அங்கே பொன் நிறத்தில் ஒரு மான் தோன்றியது. அந்த மானின் அழகில் மயங்கிய சீதை, அதைப் பிடித்துத் தருமாறு இராமனிடம் கேட்டாள்.

மானின் அழகைக் கண்ட இலக்குவன், "இது அரக்கர்களின் மாயத்தால் தோன்றியிருக்கிறது. விசுவாமித்திரரின் வேள்வியைக் காக்கும்போது தாடகையைக் கொன்றோம். அப்போது நம்மிடமிருந்து தப்பிய மாரீசனின் வேலையாக இது இருக்கலாம்' என்றான். 

அந்த மான் வேண்டும் என்று சீதை மீண்டும் மீண்டும் கேட்டதால் அதை உயிருடன் பிடித்து வருவதற்காக இராமன் அந்த மானைப் பின் தொடர்ந்து சென்றான். பிடிபடுவதுபோல் அருகில் வருவதும் பின் துள்ளிக் குதித்து ஓடிவிடு
வதுமாக அது மாயம் காட்டியது. இதற்கு மேல் இதை விட்டு வைக்கக்கூடாது என்று நினைத்த இராமன் தனது அம்பினை மானை நோக்கி எய்தான். 

அம்பு பட்டு விழும்போது மான், மாரீசனாக மாறியது. விழும்போது அந்த மாரீசன், "ஏ சீதா...ஏ இலக்குவா' என்று இராமனின் குரலெடுத்துக் கத்தியபடி விழுந்தான். உலகத்தில் முதன் முதலாக மாற்றுக் குரல் அல்லது போலிக்குரல் (மிமிக்ரி) கொடுத்தவன் மாரீசன்தான்.

பர்ணசாலையிலிருந்த சீதைக்கும் இலக்குவனுக்கும் அந்தக் குரல் கேட்டது. இராமன் ஆபத்திலிருக்கிறான் என்று எண்ணிய சீதை, இலக்குவனை உடனே அண்ணனைக் காப்பாற்றுவதற்குப் போகுமாறு சொன்னாள்.

ஆனால், இலக்குவனோ, "அரக்கர்களின் மாயத்தால் இப்படிக் கேட்கிறது. நாம் அச்சப்படத் தேவையில்லை' என்று கூறினான்.

இலக்குவன் கூறியதை சீதை ஏற்றுக்கொள்ளவில்லை. "அண்ணனைக் காப்பாற்றாமல் இங்கே பெண்ணிடம் என்ன வேலை' என்று கேட்கிறாள். அந்தச் சொல்லைப் பொறுக்க முடியாமல் இலக்குவன் விரைந்து சென்றான்.

அதுவரை மறைவில் ஒளிந்திருந்த இராவணன் வளைந்த முதுகுடன் வயோதிகத் தோற்றத்தில் பல நாள் உண்ணாதவனைப் போல் சீதை இருந்த பர்ணசாலை முன் தோன்றினான். அவனைப் பர்ணசாலைக்குள் அழைத்த சீதை, ஆசனத்தில் அமரச் செய்தாள். "இதுவரை தாங்கள் எங்கே இருந்தீர்கள்' என்று கேட்டாள் சீதை. "இராவணனின் நகரத்தில் இருந்தேன்' என்றான் துறவி வடிவத்தில் இருந்த இராவணன்.

"அரக்கர்களுடன் சேர்ந்திருந்தால் நல்லவர்களும் அரக்கர்கள் ஆகிவிடுவார்கள்' என்றாள் சீதை.

இதைக் கேட்டவுடன் அரக்கர்களைப் பற்றிப் பெருமையாகச் சொல்லத் தொடங்கினான் இராவணன். இராவணனின் ஆற்றலை மிகவும் பெருமையாக எடுத்துச் சொன்னான்.

அதைக் கேட்ட சீதை, "கார்த்தவீரியனிடம் தோற்றவன்தான் உங்கள் இராவணன். அந்தக் கார்த்தவீரியனை வெற்றிகொண்டவன் பரசுராமன். அந்தப் பரசுராமனையே தோற்கச் செய்தவன் இராமன்' என இராமனின் பெருமைகளைச் சொன்னாள்.

இராமனைப் பாராட்டியதை இராவணனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவனது இருபது கண்களிலும் தீப்பொறி பறந்தது. பற்களை "நறநற' எனக் கடித்தான். அவன் கோபம் கொண்டதும் துறவியின் வேடம் கலைந்தது. இராவணன் பத்துத் தலைகளுடன் அங்கே தோன்றினான். சீதை இருந்த பர்ணசாலையைத் தரையுடன் தூக்கினான். அப்படியே தேரில் ஏற்றினான்.

அவன் தேரில் பதினாறு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. தேர்ப்பாகனைப் பார்த்து, "ம், தேரை ஓட்டு' என்றான் இராவணன். அடுத்த நொடி, தேர் காற்றாகப் பறந்தது. அது இயந்திரம் பொருத்தப்பட்ட தேர் என்ற காரணத்தால் விண்வெளியில் சென்றது. 

சீதையைக் கடத்திக் கொண்டு செல்லும் இராவணனைச் சடாயு என்னும் கழுகரசன் பார்த்தான். அவன் தசரதனின் நண்பன். தண்டக வனத்தில் இருக்கும் இராமனுக்கும் சீதைக்கும் இலக்குவனுக்கும் காவல் இருப்பதைத் தனது கடமையாகக் கொண்டவன்.

"அடே! எங்கே போகிறாய் நில்!' என்று இடிமுழக்கம் போல் குரல் கொடுத்தான் சடாயு. அவனது கண்களில் கோபம் கொப்பளித்தது. சடாயு தனது இரண்டு இறக்கைகளையும் விரித்துப் பறக்கும் போது விண்ணும் மண்ணும் ஒன்றாகக் காட்சியளித்தது. பொன் நிறம் கொண்ட மேரு மலை, பறந்து வருவது போல் தோற்றம் அளித்தான் சடாயு.

இராவணனின் தேரைத் தடுத்து, சீதையைக் காப்பாற்றுவதற்காகச் சடாயு வேகமாகப் பறந்தான். அந்த விசையில் மலைகள் எல்லாம் பொடியாகின. சடாயு வேகமாகச் சிறகடிக்கும்போது ஊழிக் காலத்தில் பெருங்காற்று வீசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. தண்டக வனம் தடுமாறியது. சடாயுவின் சிறகின் விசையால் மரங்களும் செடிகளும் வேருடன் பிடுங்கப்பட்டு விண்ணில் எழுந்து போய் நின்றன. யானைகளும் யாளிகளும்  மற்ற விலங்குகளும் தரையில் நிற்க முடியாமல் ஆகாயத்தில் சென்றன. புல்லும் செடியும் அடர்ந்திருந்த புதர்களும் வேருடன் பிடுங்கப்பட்டு வானத்தில் பறந்தன.  சிறிய பெரிய கற்கள் எல்லாம் சடாயுவின் சிறகின் விசையால் விண்ணில் பறந்தன.

யானையும் யாளியும் முதல யாவையும்
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து இரு சிறை வீச்சின் ஏறலால்
வானமும் கானமும் மாறு கொள்ளவே (3506)

என்னும் பாடலில் சடாயுவின் சிறகின் விசையால் வானத்தில் மரங்களும் செடிகளும் புதர்களும் விலங்குகளும் கற்களும் பறந்தபடி இருந்ததால் வானத்தில் ஒரு வனம் தோன்றியது போல் காட்சி அளித்தது என்று பாடியுள்ள கம்பனின் திறம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.