சிவஞான முனிவரின் கற்பனை நயம்

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தில் பிறந்தவர் மாதவ சிவஞான முனிவர். ஐந்து வயது முதலாக  இறை நாட்டம் கொண்டு துறவு வாழ்வு மேற்கொண்டார்.
சிவஞான முனிவரின் கற்பனை நயம்


திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தில் பிறந்தவர் மாதவ சிவஞான முனிவர். ஐந்து வயது முதலாக  இறை நாட்டம் கொண்டு துறவு வாழ்வு மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதீனத்து சின்னப்பட்டம் பேரூர் வேலப்ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் சிவ தீக்கையும் பெற்று தமிழ், வடமொழியைக் கசடறக் கற்றார். 

மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்திற்குப் பேருரை எழுதியுள்ளார். காஞ்சிப் புராணம், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், சோமேசர் முதுமொழிவெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல்வேறு நூல்களை படைத்துள்ளார்.

சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்ட அந்தாதி இலக்கியங்கள் ஐந்து ஆகும். அவையாவன திருவேகம்கர் அந்தாதி, இளசை பதிற்றுப்பத்தந்தாதி, கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, வடதிருமுல்லைவாயில் அந்தாதி.  இவரியற்றிய அந்தாதிகள் அனைத்துமே தனிச் சிறப்புடையன. 

பக்திச் சுவையோடு உயரிய நற்கருத்துகளையும் தம் நூலில் சிறப்புபடச் சொல்லியுள்ளார். இவரது குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியில் ஒரு பாடல் கற்பனை நயத்தொடு அமையப் பெற்றுள்ளது.

குளத்தூர் இறைவன் திருவடியில் புனைவதற்காகச் செய்யப்பட்ட தேமாலை என்று குளத்தூர் அந்தாதியைச் சொல்கிறார். குளத்தூரின் சிறப்பை எடுத்துச் சொல்லும் பொழுது பெயருக்கேற்ப நீர்வளத்தின் கற்பனைகள் அமைந்துள்ளன. நீர்வளத்தைக் குறிப்பிடும் கற்பனைகளில் அழகானதொரு பாடல் 60 ஆம் பாடலாகும்.  அப்பாடல் இதோ:

மறைய வன்றலை மலர்ந்தகைத் தலத்தினு 
                                                   மாயவன் விழிப்போதை
அறைக ழற்பதாம் புயத்தினும் கண்டவர் 
                                                அஞ்சிறைச் சுரும்பார்த்து
நறவு வாய்மடுத்து உறங்கு தாமரையின் 
                                          நல்லோதிமம் விளையாடுஞ்
சிறைசெய் நீர்க்குளத்தூர்ப் பிரான் தனக்குமேற் 
                                                தெய்வமுண் டென்னாரே
அழகிய இறகுகளை உடைய வண்டுகள் தாமரை மலரில் உள்ள தேனை உண்டு, அதிலேயே உறங்குகின்றன. அவ்வண்டுகளைத் உறங்கவிடாது அன்னங்கள் அத்தாமரை மலரில் வந்து விளையாடுகின்றன. 

இப்பாடலில் இருநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று அமைதியான தூக்கம். மற்றொன்று விளையாட்டு. குளத்தூர் இறைவன் திருவடிகளை ஒரு பக்கம் முனிவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி வணங்கி இறைவனின் இன்பத்தேனினை மாந்தி இறைவன் திருமுன்னர் தங்களை அர்ப்பணிக்கின்றனர். மற்றொரு புறம் இல்லத்தார்கள் ஆரவாரத்தோடு இறை வழிபாட்டினைச் செய்து அருள்பெற முனைகின்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com