மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இந்த வார கலாரசிகன் - (30-04-2023)

நேற்று வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இரா. செழியன் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டது மனநிறைவைத் தந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2023, 11:33 am

DIN

நேற்று வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இரா. செழியன் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டது மனநிறைவைத் தந்தது. தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டிய ஆளுமை அவர் என்பது, நெருங்கிப் பழகியதால் எனக்குத் தெரியும். தமிழகம் கொண்டாடாவிட்டாலும் வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதனாவது அவரை நினைவுகூர்ந்து, நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார் என்பது மிகப் பெரிய ஆறுதல். இரா. செழியனை நான் சென்னையிலும் வேலூரிலும் சந்தித்ததைவிட, தில்லியில் சந்தித்ததுதான் அதிகமாக இருக்கும். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அவரது மகாதேவ் ரோடு வீட்டிலும், அதற்குப் பிறகு சோ சாரின் மீனா பாக் எம்.பி.க்கள் குடியிருப்பிலும் பலமுறை சந்தித்து, நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்த நினைவுகளை அவ்வப்போது அசைபோட்டுக் கொள்வேன்.

சோ சாரின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிந்த பிறகு, அவர் தில்லிக்கு வந்தால் மக்களவையின் முன்னாள் தலைவர் ரபி ரேயின் ஃபெரோஸ் ஷா ரோடு இல்லத்தில்தான் தங்குவார். ரபி ரேயும் எனக்கு நெருக்கம் என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கே போய்விடுவேன். அதுவும் இரா. செழியன் அங்கே இருக்கிறார் என்றால் அவர்கள் இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலிருந்து நான் கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும் ஏராளம், ஏராளம்.

இரா. செழியனுக்கு என்னிடம் அன்பு ஏற்பட்டதற்குக் காரணம், "துக்ளக்' ஆசிரியர் சோ சார்தான். சோ சாருக்கு இரா. செழியன் மீது இருந்த மரியாதை அளப்பரியது. "நம் நாட்டில் பலரிடம் நேர்மை இருக்கும். ஆனால், திறமை இருக்காது. சிலரிடம் திறமை இருக்கும். ஆனால், நேர்மை இருக்காது. இந்த இரண்டும் சேர்ந்து இருப்பவர்கள் மிகக் குறைவு. அவர்களில் இரா. செழியனும் ஒருவர்' என்பது சோ சாரின் கருத்து. அது நூற்றுக்கு நூறு உண்மை.

"நேர்மையாளராகவும்கூட அரசியலில் ஒருவர் செயல்பட முடியும் என்பதை வாழ்ந்து காட்டிய இரா. செழியன் போன்ற மாமனிதர்களின் மறைவின்போதுதான், அந்த ஆளுமைகளின் உயரம் புரிகிறது' என்று அவர் மறைந்தபோது நான் தலையங்கத்தில் எழுதியது, எனது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்த வார்த்தைகள். அண்ணா என்று சொன்னால், "கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்பது நினைவுக்கு வருவதுபோல, இரா. செழியன் என்று சொன்னால் "நேர்மை தூய்மை எளிமை' என்பது அவரது அடையாளமாகத் தமிழக அரசியலில் பதிவு செய்யப்படும் என்றும் அப்போது நான் எழுதியிருந்தேன்.

இரா. செழியன் "தினமணி'யில் எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட வேண்டும். அவர் குறித்த ஆவணப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட வேண்டும். நூற்றாண்டு விழா புகைப்படக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை ஒழுங்குபடுத்தி ஒரு சிறந்த மலர் தயாரிக்க வேண்டும் - இவையெல்லாம் வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமையிலான நூற்றாண்டு விழாக் குழுவின் முடிவுகள். கூடினோம், பிரிந்தோம் என்பதாக இல்லாமல், அடுத்தகட்ட வேலையைத் தாமதமில்லாமல் தொடங்க வேண்டும்.

------------------------------------------------

பெரியவர் இரா. செழியன் குறித்த சிந்தனை எழுந்தபோது, "துக்ளக்'கில் சோ சார் எழுதிய "நினைத்தேன் எழுதுகிறேன்' நினைவுக்கு வந்தது. ஒரு வாரத்துக்கு முன்னர் "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனை சந்திக்கச் சென்றபோது, அங்கிருந்து அதன் தொகுப்பை எடுத்து வந்திருந்தேன். பிரித்துப் படிக்கத் தொடங்கியதுதான் தெரியும், படித்து முடித்த பிறகுதான் புத்தகத்தைக் கீழே வைத்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அன்று நடந்த நிகழ்வுகள் குறித்த அவரது கருத்துகளின் வீரியமும் உண்மைத்தன்மையும் அப்படியே இருக்கின்றன என்பதுதான் வியப்பு.

24.1.1973 முதல் 18.12.2002 வரை, "துக்ளக்' இதழின் ஆசிரியர் சோ. ராமசாமி எழுதிய "நினைத்தேன் எழுதுகிறேன்' பகுதியில் அவர் செய்திருக்கும் 248 பதிவுகள் இந்தத் தொகுப்பில் அடங்கி இருக்கின்றன. தேசிய, மாநில நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், தலைவர்கள் குறித்த கருத்துகள், விளையாட்டு, சினிமா, பொருளாதாரம் என்று ஒன்றுவிடாமல் தனது மனதில் பட்டதையும் தனது சிந்தனைக்குத் தோன்றியதையும் பதிவு செய்திருக்கிறார். இந்நூலை 30 ஆண்டுகால அரசியல் வரலாறு என்றும் சொல்லலாம்.

"துக்ளக் பத்திரிகை நடத்துவது ஒரு பொதுப்பணி என்று நினைத்து அந்தப் பொறுப்பு உணர்ச்சியுடன்தான் நடத்திக்கொண்டு வருகிறேன். சொந்த நட்புகளையும், விருப்பு வெறுப்புகளையும் வைத்துக்கொண்டு பத்திரிகை நடத்த முடியாது. பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் பலருடைய அரசியலைப் பற்றியும், பொதுவாழ்வு நடைமுறைகளைப் பற்றியும் கடுமையாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்துவிட்டு, ஒரு தனி மனிதன் என்கிற முறையில் அவர்களை நேரில் சந்திக்கும்போது, அவர்கள் அறிமுகமானவர்களாக இருந்தால், மனதிற்கு சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது' என்கிற சோ சாரின் பதிவைப் படித்தபோது, எனக்கு சற்று ஆறுதல். அந்த தர்மசங்கடம் எனக்கும் நிறையவே ஏற்பட்டதுண்டு.

1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல், சொத்துக் குவிப்பு காரணங்களுக்காக வழக்குத் தொடுத்தது. அது குறித்த சோ சாரின் கருத்து இது - "ஏதோ அரசியல் ஆதாயக் காரணத்தினாலாவது, இந்த நடவடிக்கைகள் மும்முரமடைகிறதே, அதுவரை நல்லதுதான் என்று நான் நினைக்கிறேன். ஓர் ஆட்சியாளரின் தவறுகளுக்காக அவர் மீது அவரது ஆட்சியே நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. அடுத்த ஆட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அதில் அரசியல் ஆதாயமும் கலந்துதான் இருக்கும். அதற்காக, நடவடிக்கையே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா' என்கிற அவரின் வாதம் நியாயமானது.

பல தலைவர்கள், பல நிகழ்வுகள், பல பிரச்னைகள் குறித்து சோ சார் நினைத்ததை எழுதியிருக்கிறார். காலம் கடந்தும் அவை நம்மை வியக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

------------------------------------------------

புதுவை பாரதி வசந்தனுக்கும் எனக்கும் என்ன காரணத்தாலோ, பல ஆண்டுகளாகத் தொடர்பு விடுபட்டுவிட்டது. விமர்சனத்துக்கு வந்திருந்தது அவரது "என் பழைய வீடு' கவிதைத் தொகுப்பு. அதில் இருக்கிறது இந்த ஹைக்கூ -
ஓட்டுப் போடுவது
ஞாபகத்தில் வருகிறது
லாரிகளில் அடிமாடுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.